விஜய்… இல்லேன்னா பா.விஜய்! தேனாண்டாள் எடுத்த திடீர் முடிவு!
தேனாண்டாள் பிலிம்ஸ் கடைசியாக தயாரித்து வெளியிட்ட படம் மெர்சல்! பாகுபலிக்கு அப்புறம் பெரிய அளவு வசூலித்த தமிழ்ப்படம் இதுதான் என்கிறார்கள். ஆனால் தயாரிப்பு நிறுவனத்திற்குதான் தாங்கொணா துயரம். அதற்கு முன் அந்த நிறுவனம் வெளியிட்ட படங்களின் நஷ்டத்தை, இந்தப்படத்தின் லாபத்தில் கழித்துக் கொண்டார்கள் வியாபாரிகள். விளைவு? அடுத்த படமே எடுக்க முடியாதளவுக்கு சிக்கல்.
கட்… இந்த நேரத்தில் போய் தனது ‘ஆருத்ரா’ படத்தை போட்டுக் காண்பித்திருக்கிறார் பாடலாசிரியர் பா.விஜய். படம் அநியாயத்துக்கு பிடித்துப்போக மீண்டும் களமிறங்கிவிட்டது தேனான்டாள்.
பெண் பிள்ளைகள் மீது ஏவப்படும் பாலியல் வன்முறை குறித்து ஆவேசமாக முழங்கியிருக்கிறாராம் பா.விஜய். அவரே இயக்கி, அவரே தயாரித்து, அவரே ஹீரோவாக நடித்திருக்கும் படம். பா.விஜயின் குருநாதர் கே.பாக்யராஜ் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்த மிஸ்டர் குருநாதர் பா.விஜயிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார் ஒரு விஷயத்தை.
‘எங்கிட்ட ஒரு அசிஸ்டென்ட் இருந்தார். பேரு செம்புலி ஜெகன். வேற எங்காவது போய் படம் பண்ணுவாருன்னு நினைச்சேன். ஆனால் என் படத்தில் ஒரு கேரக்டரில் நடிச்ச அவருக்கு வாழ்க்கை முழுக்க நடிகராகவே காலம் தள்ள வேண்டிய சூழ்நிலை ஆகிருச்சு. அவர் நான் நல்லா டைரக்ட் பண்ணுவேன்னு சொன்னா கூட யாரும் வாய்ப்பு கொடுக்கறதா இல்ல. அதே மாதிரி பா.விஜய்க்கிட்ட கேட்டுக்குறேன். பாடல் எழுதுற திறமை உங்ககிட்ட நிறைய இருக்கு. அதை விட்றாதீங்க. நடிப்பு டைரக்ஷன் ஒரு பக்கம் தனியா இருக்கட்டும்’ என்றார்.
இதுக்குப் பேர் அறிவுரையா, வார்றதா? என்னன்னு எடுத்துக்கறது?