இதிலேயும் விஜய்யை காப்பியடிக்கணுமா விஷால்?

முதலில் பாராட்டிவிடுவதுதான் உத்தமம்! நடிகர் விஷால் தனது பிறந்த நாளான 29 ந் தேதி காலையிலேயே எழுந்து பம்பரம் போல சுற்றி சுழல ஆரம்பித்துவிட்டார். ஏகப்பட்ட நலத்திட்ட உதவிகள், அநாதை ஆசிரமங்கள், ஆதரவற்ற முதியோர் இல்லங்கள் என்று தனது ரசிகர் மன்றத்தினரின் ஒத்துழைப்போடு எல்லா இடங்களிலும் இலவச உதவிகளை செய்து விட்டு வீடு திரும்பினார். அன்றைய மாலை நேரம் குடியும் கூத்தும் இல்லாமல் கழிந்ததை குறிப்பிட்டே ஆக வேண்டும்.

நலத்திட்ட உதவிகளுக்காக அவர் பல்வேறு இடங்களுக்கு சென்றிருந்தாலும் முக்கியமாக அவர் சென்ற இடம், கோஷா ஆஸ்பிடல் என்பதை அன்டர்லைன் பண்ணி எழுத வேண்டும்! அன்றைய தினம் பிறந்த குழந்தைகளுக்கெல்லாம் தன் கையால் மோதிரமளித்து மகிழ்ந்தார். எங்கும் இல்லாத முணுமுணுப்பு இதற்குதான் வந்து சேர்ந்தது. ஏன்? எல்லா விஷயத்திலும் விஜய்யை காப்பியடித்து வருகிறார் விஷால். படங்களை ஒப்புக் கொள்கிற ஸ்டைலில் ஆரம்பித்து, ரசிகர் மன்றத்தை பாலூற்றி தேனூற்றி வளர்க்கிற விஷயத்திலும் சேர்த்து விஷாலின் ஸ்டைல், அப்படியே விஜய் ஸ்டைல்தான்! பலரும் இது குறித்து அவரிடம் கேட்டேயிருக்கிறார்கள். அதற்கெல்லாம் மழுப்பலாக சிரித்துக் கொண்டே சென்று விடும் அவர், மீண்டும் அதே போலொரு விஷயத்தை செய்திருப்பது ஆச்சர்யமில்லை.

தனது ஒவ்வொரு பிறந்த நாளின் போதும், இதே கோஷா ஆஸ்பத்திரிக்கு சென்று அன்றைய தினம் பிறக்கும் குழந்தைகளுக்கு தன் கையால் மோதிரம் அளிக்கும் வழக்கம் விஜய்க்கு உண்டு. கடந்த பிறந்த நாளுக்கு அவர் ஊரிலேயே இல்லை. லண்டனில் இருந்தார். இருந்தாலும் அவர் சார்பாக அது நடத்தி வைக்கப்பட்டது.

இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது, அந்த சூப்பர் ஸ்டார் நாற்காலிக்கு விஜய் போட்டியிடுவது போல இவரும் போட்டியிடுவாரோ என்னவோ? ஆமாம்.. அந்த நாற்காலி ரஜினி வீட்டில் இருந்தால் கெஞ்சியாவது வாங்கிவிடலாம். அது மக்கள் மனங்களில் அல்லவா இருக்கிறது?

Read previous post:
காக்கா முட்டை மணிகண்டனின் கதைக்கே இப்படியொரு அவலமா?

தமிழ்சினிமாவின் பொன் முட்டை என்று வர்ணிக்கப்படுகிறார் காக்கா முட்டை மணிகண்டன். ஏன் இதற்கு முன்பு தமிழ் சினிமாவில் இப்படியொரு அற்புதமான படம் வந்ததேயில்லையா? ஏன் இவ்வளவு கொண்டாட்டம்?...

Close