சீச்சி இந்த பழம் புளிக்கும்! கடுப்ஸ் ஆகிவிட்டாரா விக்ரம்?
தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் சினிமாவில் ஒரு குரூப்புக்கு சந்தோஷம். இன்னொரு குரூப்புக்கு எரிச்சலோ எரிச்சல். சந்தோஷம் விசாரணை மாதிரியான படத்திற்கு விருது கிடைத்ததற்காக. எரிச்சல் ஐ படத்திற்கு விருது கிடைக்காமல் போனதற்காக. (விக்ரம் ரசிகர்களோ, 10 எண்றதுக்குள்ள படத்துக்கே தேசிய விருது கொடுக்கலாமே என்று கதறுவார்கள். அது வேறு காமெடி) நியாயமாக பார்த்தால் ஐ படத்திற்காக விக்ரமுக்கு விருது கொடுத்திருக்க வேண்டும்தான். ஏனென்றால் அந்த படத்திற்காக அவர் உழைத்த உழைப்பு வார்த்தைகளால் எழுதிவிட முடியாது. இதெல்லாம் உங்களுக்கு தேவையா என்று குடும்பமே கதறி அழுகிற அளவுக்கு நோஞ்சான் ஆகி நோயாளி போல மாறினார் அவர்.
தனக்கோ, தன் படத்திற்கோ விருது கிடைக்காதது பற்றி விக்ரம் மிகுந்த மன வேதனையுடன் சில கருத்துக்களை கூறியிருப்பதாக ட்விட்டரில் செய்தி பரவி வருகிறது. “நான்கு பேர் ஒரு அறையில் உட்கார்ந்து கொடுக்கும் விருதை விட, மக்கள் கொடுக்கும் விருதுதான் முக்கியமானது. அதனால் இது போன்ற விருதுகளை நான் ஒருபோதும் எதிர்பார்ப்பதில்லை” என்று கூறியிருக்கிறார் அவர். (இதுக்கு முன்னாடி சேது படத்திற்கு விருது கிடைக்கும் போது மட்டும் இப்படி சொல்லலையேங்ணா….)
இவர் கூறியது ஒருபுறமிருக்க, ஐ படத்தின் ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராம் தன் கருத்தை கடும் கோபத்தோடு வெளிப்படுத்தியிருக்கிறார்.
“இந்த ஆண்டு தேசிய விருது பட்டியலில் விக்ரமுக்கு இடமில்லை. பல நேரங்களில் தேசிய விருதுகள் அதன் நோக்கத்தை இழந்து விடுகிறது. என்னைப் பொருத்தவரை தேசிய விருது கிடைக்காதது விக்ரமுக்கு இழப்பு இல்லை; அவருக்கு கொடுக்காததால் அது தேசிய விருதுக்குத்தான் மிகப்பெரிய இழப்பு” இதுதான் பி.சி யின் கொந்தளிப்பு.
நியாயம்தாங்க!