விஞ்ஞானி- விமர்சனம்

அற்புதமான பொக்கிசத்தையெல்லாம் தொலைச்சுட்டு, நாக்காலே இன்னும் ‘நக்கிஸம்’ பேசிக் கொண்டிருக்கும் நமக்கான படம்தான் விஞ்ஞானி. மூவாயிரம் வருஷத்துக்கு முன்னாடியே தமிழ்நாட்ல தண்ணீர் பஞ்சம் வரும். தஞ்சை வயல்களெல்லாம் தரிசாகிப் போகும் என்றெல்லாம் தொல்காப்பியர் நினைத்து பார்த்து ‘தொல்காப்பியம்’ எழுதியிருப்பதும், அதில் விதவிதமான நெற்களை பற்றி குறிப்பிட்டிருப்பதும் ஆச்சர்யம்தான். அவற்றையெல்லாம் ஒரு விஞ்ஞானியாய் ஆராய்ந்து, விஞ்ஞானியாகவே கதை வசனம் எழுதி, விஞ்ஞானியாகவே நடித்தும் இருக்கிறார் பார்த்தி என்ற நிஜ விஞ்ஞானி. படத்தின் கருவாக்கத்துக்காக ஒரு ஆஹா. அதே நேரத்தில் தத்துப்பித்தான அதன் உருவாக்கத்துக்காக ஒரு அச்சச்சோ!

தண்ணீரே தேவைப்படாமல் வளரும் ஒரு நெற் பயிரை கண்டுபிடிக்கிறேன் என்று சவால் விடுகிறார் விஞ்ஞானி பார்த்தி. அதே நேரத்தில், தஞ்சை மாவட்டத்து விவசாய குடும்பம் ஒன்று மூவாயிரம் வருஷத்துக்கு முன் தொல்காப்பியர் சேகரித்து வைத்திருக்கும் நெல் குவியல் ஒன்றை கண்டுபிடிக்கிறது. அந்த நெல்லின் பெயர் ‘தாகம் தீர்த்தான் நெல்’. குறைந்தளவுக்கு நீர் இருந்தால் போதும். வளரும்! சாப்பிட்டால் தாகம் எடுக்காது என்பதெல்லாம் தொல்காப்பியர் எழுதி வைத்திருக்கும் குறிப்பு. அந்த நெல்லுக்கு மரபணு விஞ்ஞானி ஒருவர் உயிர் கொடுத்துவிட்டால் போதும். அதை விளைய வைத்து தஞ்சையை மீண்டும் நெற்களஞ்சியம் ஆக்கிவிடலாம் என்பது அவர்களின் ஆசை.

ஆசை ஆசையாக பார்த்தியை தேடி வந்தால், ‘அடபோங்கப்பா நீங்களும், உங்க நம்பிக்கையும்’ என்று விரட்டியடிக்கிறார் அவர். மூவாயிரம் வருஷத்துக்கு முந்தைய நெல் என்பது தெரிந்த பிறகும் எந்த விஞ்ஞானியாவது இப்படி சொல்வாரா? அங்கேயே போச் கதையின் உயிர்ப்பு. அதற்கப்புறம் இவரை நைசாக திருமணம் செய்து கொண்டு விஞ்ஞானியுடன் செட்டில் ஆகும் மீராஜாஸ்மின், விஞ்ஞானியின் பி.ஏ.சஞ்சனாவை கொன்றதாக கதை திரும்புகிறது. ஒருபுறம் கொலைக்காரனுக்கான தேடல். மறுபுறம் நெல்லை உயிர்ப்பிக்கும் போராட்டம் என்று இருவேறு திசைகளில் கதை பயணித்து ஓரிடத்தில் சேரும்போது என்ன நடக்கிறது…? ம்… படம் முடிஞ்சுருச்சு, ஆவ்…ளோதான்!

விஞ்ஞானி என்றால் அவர் தாடி வைத்தே இருக்க வேண்டும் என்று நினைத்துவிட்டார் போலிருக்கிறது பார்த்தி. சந்தன காட்டுல சப்பாத்தி வௌஞ்ச மாதிரி பொதபொதன்னு இருப்பதால், உள்ளேயிருக்கிற எக்ஸ்பிரஷன்ஸ் எட்டிப்பார்க்கவே திணறுகிறது. ஒருவேளை அதுவே பாதுகாப்பாகவும் இருந்திருக்கலாம் அவருக்கு. ஆனால் ஒரு தொழில் முறை நடிகருக்கு தேவையான அத்தனை வித்தைகளையும் கற்று வைத்திருக்கிறார் இந்த விஞ்ஞானி. சிறப்பாக ஆடுகிறார், சீறியபடியே ஃபைட் பண்ணுகிறார். அத்தனையும் அட்சர சுத்தமாக. காதல் காட்சிகளில் கூட மீரா ஜாஸ்மின் முதுகில் ஃபார்முலா கோலம் போடுகிற அளவுக்கு கதையோடு ஒன்றியிருக்கிறார்.

ரொம்ப வருஷம் கழித்து மீரா ஜாஸ்மின். அவர் முகத்திலிருந்த அந்த பழைய ப்ளசென்ட் ஒரேயடியாக ஆப்சென்ட். ‘அந்த தலைவலி தைலத்தை நான் தேய்ச்சு விட மாட்டேனா?’ என்று சஞ்சனா சிங்கிடம் மீரா ஜாஸ்மின் பாய்ந்தடித்து சண்டை போடுகிற போது ‘இதென்னடா மீராவுக்கு வந்த சோதனை?’ என்றே தோன்றுகிறது. அந்த தைலத்தை அப்படியே தியேட்டருக்குள்ளும் தள்ளி விடுங்க சார் என்று கெஞ்ச வைக்கிற அளவுக்கு நீளமான காட்சி அது.

விவேக் தனது ஹீரோ கனவையெல்லாம் விட்டுத் தொலைத்துவிட்டு பழைய ஃபார்முடன் இறங்கியிருக்கிறார். இவர் ஒன்று சொல்ல விஞ்ஞானி ஒன்று சொல்ல, கடைசியில் அங்கே மாட்டிக் கொண்டது தன் பெண்டாட்டிதான் என்று விவேக் அறிந்து கொள்கிறபோது தியேட்டரே கலகல…

சஞ்சனா சிங்கெல்லாம் கவர்ச்சி பதுமை என்றால், ஸோ ஸாரி சார். அப்புறம் பாலாசிங், தலைவாசல் விஜய் எல்லாரும் இருக்கிறார்கள். அவரவர் பங்குக்கு செம காமெடி பண்ணுகிறார்கள். அதுவும் மண்ணிலிருந்து எடுக்கப்பட்ட எந்த புதையலும் அரசுக்கு சொந்தமானது என்கிற அடிப்படை லாஜிக்கே இல்லாமல் போலீஸ் வரைக்கும் போய் புகார் கொடுக்கிறார்கள். 3000 வருஷத்துக்கு முந்தைய புதையல் என்று தெரிந்தும் போலீஸ் அந்த பஞ்சாயத்தில் ஸ்டெப் எடுக்கிறது. நல்லா காட்றங்கப்பா வெவ்வேவ்வே!

எல்லா நெல்லும் எரிந்து போன பிறகும் ‘தொல்காப்பியம்’ புத்தகத்திற்குள் கிடக்கும் அந்த ஒரு நெல்… சிலிர்க்க வைக்கும் திருப்பம்! (ஏன்யா பொறி உருண்டை மாதிரி எல்லாத்தையுமா கட்ட பையில கொட்டிகிட்டு திரிவீங்க?)

மாரீஸ் விஜய் என்ற புதிய மியூசிக் டைரக்டர். ஒரு டூயட் பாடல் மட்டும் இனிமை.

அழிக்க முடியாத நாட்! அதை கிழிந்து போன நோட்டில் எழுதி ‘கெக்கேபிக்கே’ ஆக்கியிருக்கிறார்கள்.

-ஆர்.எஸ்.அந்தணன்

Read previous post:
Sailing through Cloud nine – ‘Kappal’ Girl Sonam Bajwa

It is a rare occasion to find a film by a debutant director getting the attention of the entire film...

Close