இனி தமன்னா, த்ரிஷா கலந்து கொள்ளும் விழாக்களில் கலந்து கொள்ள மாட்டாரா அந்த பிரபலம்?
இனி தமன்னா, த்ரிஷா கலந்து கொள்ளும் விழாக்களில் கலந்து கொள்ள மாட்டாரு போலிருக்கே? என்ற ஐயத்துடன் கிளம்பினார்கள் ரசிகர்கள். இடம் ஆகம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா. ஏனிந்த ஐயப்பாடு? அம்புட்டுக்கும் காரணம் விழாவுக்கு வந்திருந்த அபிராமி ராமநாதனின் பேச்சுதான்.
நிகழ்ச்சியில் பேசிய அபிராமி ராமநாதன் “என்னை பேச அழைக்கும்போது நிகழ்ச்சித் தொகுப்பாளர் பெண்மணி நடிகர் என்று சொல்லி அழைத்தார். அது தப்பில்லை . நான் ஒரு படத்தில் நடித்து இருக்கிறேன் . தியாக பூமி உள்ளிட்ட மாபெரும் படங்களை இயக்கிய கே.சுப்பிரமணியம் இயக்கிய – நேரு பற்றிய – ஒரு சிறு படத்தில் நான் நடித்தேன் . அப்போது என் வயது எட்டு . படத்தில் ஒரு காட்சியில் நேருவாக நடிப்பவரின் கையை நான் பிடித்துக் கொண்டு நடக்க, அடுத்து ஓர் ஐந்து வயது சிறுமி, என் கையைப் பிடித்துக் கொண்டு நடக்கும் . இந்தக் காட்சியைப் பார்த்த என் ஆத்தா (அம்மா) , ‘என்ன இவன்… இந்த வயசுலேயே பொம்பளப் புள்ள கையைப் பிடிச்சு கிட்டு நடக்குறான். இனிமே இவன நடிக்க விடக் கூடாது’ன்னு சொல்லிருச்சு. அப்புறம் நடிக்க விடவே இல்ல . என்னை மட்டும் என் ஆத்தா நடிக்க விட்டிருந்தா நான் பெரிய பெரிய நடிகர்களுக்கு எல்லாம் போட்டியா வந்திருப்பேன். அப்புறம் தியேட்டர் ஆரம்பிச்சேன் . பட விநியோகம் பண்ணினேன் . படம் தயாரிக்க ஆரம்பிச்சேன் . இப்போ கூட ஒரு படம் தயாரிச்சுக்கிட்டு இருக்கேன் . என்கிட்டே நாலு தியேட்டர் இருக்கு . ஒவ்வொரு படமும் ரெண்டு வாரம் ஓடினாலே எனக்கு ஒரு தியேட்டருக்கு வருஷம் 26 படம் வேணும் . நாலு தியேட்டருக்கும் 104 படம் வேணும் . அதனால்தான் என் தியேட்டருக்கு படத்துக்கு வர்ற டிக்கெட் புக் பண்றவங்களுக்கு கார் வசதியும் அதுக்குரிய சார்ஜ் வாங்கிட்டு பண்ணித் தர்றேன் . இப்படிப்பட்ட நிலையில் ஆகம் மாதிரி படங்கள் நல்லா ஓடினா அது பல வெற்றிப் படங்களை உருவாக்க வழி செய்து கொடுக்கும்
இதையெல்லாம் ஏன் சொல்றேன்னா சினிமா தொழிலுக்கு வந்துட்டா அப்புறம் அந்த தொழிலை விட்டுப் போக யாருக்கும் மனசு வராது . இந்தப் படங்கள்ல பல புதுமுகங்களும் நடிச்சு இருக்காங்க. அவங்க எல்லாம் ஜெயிக்கணும்னா இந்தப் படம் நல்லா ஓடணும் . இந்த நேரத்துல ஒண்ணு சொல்லிக்க விரும்பறேன் . இந்தப் படத்துல நடிச்ச நடிகைகள் எல்லாம் இங்க பேசினாங்க . ஆனா எல்லாரும் ஆங்கிலத்துலேயே பேசறாங்க . அது ஏன் ? பம்பாய்ல இருந்தும் ஃபாரின்ல இருந்தும் வந்த நடிகைன்னா, தமிழ் தெரியாது அவங்க தமிழ்ல பேசலன்னா பரவால்ல . ஆனா தமிழ் தெரிஞ்சவங்களே ஆங்கிலத்துல பேசறீங்களே . அது ஏன் ? நிகழ்ச்சித் தொகுப்பு பண்ற பொண்ணு எவ்வளவு அழகா சேலை கட்டி வந்திருக்கு . ஆனா நீங்க எல்லாம் எதையோ மாட்டிக்கிட்டு வந்தது ஏன்? சேலை கட்டி வந்தா என்ன ? இனியாவது நடிகைகள் நிகழ்சிகளில் தமிழ்ல பேசுங்க “என்றார் .
“இந்த அட்வைசை இவர் ஏன் த்ரிஷா மாதிரி, தமன்னா மாதிரி தமிழ் நன்கு தெரிந்தும் பேசாமல் ஆங்கிலத்தில் பேசுகிற நடிகைகளுக்கு சொல்வதில்லை?” என்றபடியே கலைந்தது ரசிகர்கள் கூட்டம்.
இயக்குனர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம் ” நானும் பரமக்குடிகாரன்தான். பரமக் குடியில் உலக நாயகன் கமல்ஹாசன் வீட்டுக்கு பக்கத்து வீட்டில்தான் என் தாத்தா அப்பா எல்லாரும் வாழ்ந்தனர் . இந்தியாவின் அறிவை அன்னிய நாடுகள் சுரண்டும் அறிவுத் தீவிரவாதம் பற்றி பேசும் படம் இது . வெளிநாடு சென்று வாழ்வதுதான் வாழ்க்கை என்று என்னும் ஒரு அண்ணன் . தான் மட்டுமல்ல .. இந்தியாவில் இருந்து யாரும் வெளிநாட்டு வேலைக்குப் போகக் கூடாது என்று என்னும் தம்பி .இவர்களுக்கு இடையேயான குடும்பப் பிரச்னை, எப்படி ஒரு நாட்டின் பிரச்னயானது என்பதுதான் இந்தப் படம் . கதையைக் கேட்ட உடன் படம் தயாரிப்பதற்கான பட்ஜெட் போட்டுக் கொண்டு வந்தார் தயாரிப்பாளர் கோட்டீஸ்வர ராஜு. இசையமைப்பாளர் விஷால் சந்திர சேகர் சிறப்பான பாடல்கள் மட்டுமல்லாது அற்புதமான பின்னணி இசையும் கொடுத்துள்ளார் .
ஒரு மணி நேரம் 57 நிமிடம் ஓடும் இந்தப் படம் ஏராளமான சுவையான திருப்பங்களோடு உங்களை செல் போனை நோண்ட விடாமல் வேடிக்கை பார்க்க விடாமல் கட்டிப் போடும் சீட்டின் நுனியில் உட்கார்ந்து மொத்தப் படத்தையும் பார்ப்பீர்கள் ” என்றார்
தயாரிப்பாளர்கள் கோட்டீஸ்வர ராஜுவும் ஹேமா ராஜுவும் நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் வரவேற்றனர் .” ஆகம் படம் இந்த மாத இறுதியில் திரைக்கு வருகிறது. நல்ல கருத்து சொல்கிற வெற்றிப் படங்களை தொடர்ந்து எடுப்போம் ” என்றார் கோட்டீஸ்வர ராஜூ.