ஏடுகொண்டலவாடா… வெங்கட்ரமணா… கோவிந்தா கோவிந்தா! போலீசிடம் சிக்கிய எந்திரன் ஆட்கள்?

ஆறேழு மாதத்திற்கு முன் நடந்த அசம்பாவிதம் ஒன்று. பிரபல இயக்குனரின் உதவியாளர் ஒருவர் ‘ஓரமா குடிக்கலாம்’ என்று ‘சரக்கு வித் சைட் டிஷ்’ சகிதம் ஓரிடத்தில் ஒதுங்கிவிட்டார். அங்கு வந்த சிலருக்கும் இவருக்கும் வாய் தகராறு. அது அப்புறம் கைகலப்பாக மாறிவிட்டது. அவர்கள் விரட்டிய விரட்டிலில் எங்கு போகிறோம், என்ன செய்கிறோம் என்று தெரியாமல் இவர் விமான நிலையத்தின் ஓடுபாதைக்குள் நுழைந்துவிட்டார். விடுமா போலீஸ்? அதற்கப்புறம் 15 நாட்கள் கம்பி எண்ணிவிட்டுதான் வெளியே வர முடிந்தது.

இப்போது நடந்திருப்பது அப்படிப்பட்டது அல்ல. ஆனால் அதற்கு சற்றும் குறையாதது.

தற்போது திருப்பதியில் ரத சப்தமி என்ற திருவிழா நடந்து வருகிறது. சும்மாவே செல் விழுந்தால் சிம் கார்டு நசுங்கிப் போகிற அளவுக்கு கூட்டம் வரும் இடத்தில் இதுபோன்ற காணக்கிடைக்காத பக்தி பரவசம் நிகழ்ந்தால் கூட்டம் கட்டுக்கடங்குமா? பக்தர்கள் ஏடுகொண்டலாவாடா… வெங்கட்ரமணா… கோவிந்தா கோவிந்தா…என்று கோஷம் எழுப்பியபடி நகர்வதை மூன்று நபர்கள் ஓரமாக நின்று உயர்ரக கேமிரா உதவியுடன் படம் பிடித்துக் கொண்டிருந்தார்கள். திருப்பதி மலை மேல் சினிமா எடுக்கவோ, ஆவணப்படம் எடுக்கவோ அனுமதியில்லை. அப்படியிருக்க, இவர்கள் இஷ்டத்துக்கு படம் பிடித்தால் சும்மாயிருக்குமா போலீஸ்?

மூவரையும் வளைத்துப்பிடித்து, கேமிராவையும் பறிமுதல் செய்துவிட்டார்கள். அதற்கப்புறம்தான் தெரிந்ததாம் அவர்கள் மூவரும் எந்திரன், லிங்கா, கந்தசாமி, பேரழகன் போன்ற படங்களை ஒளிப்பதிவு செய்த ரத்னகுமாரின் உதவியாளர்கள் என்று. குரு சொல்ல, சிஷ்யர்கள் படம் பிடிக்க வந்திருக்கிறார்கள். அதற்கப்புறம் அவர்கள் தீவிரவாதிகள் அல்ல என்பதை தீர விசாரித்து உறுதி செய்து கொண்ட போலீஸ், பதிவு செய்யப்பட்ட காட்சிகளை எரேஸ் செய்துவிட்டு அனுப்பி வைத்தார்களாம்.

இதுமாதிரி அனுமதியில்லாமல் எங்க வேணும்னாலும் கேமிரா வைக்கலாம் என்கிற எண்ணத்தை முதல்ல எரேஸ் பண்ணணும்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இனி தமன்னா, த்ரிஷா கலந்து கொள்ளும் விழாக்களில் கலந்து கொள்ள மாட்டாரா அந்த பிரபலம்?

இனி தமன்னா, த்ரிஷா கலந்து கொள்ளும் விழாக்களில் கலந்து கொள்ள மாட்டாரு போலிருக்கே? என்ற ஐயத்துடன் கிளம்பினார்கள் ரசிகர்கள். இடம் ஆகம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா....

Close