என்னை நாய்னு சொன்னவங்க மீது நடவடிக்கை எடுக்கலையே? சரத்குமாருக்கு விஷால் கேள்வி

திடீரென்று போடப்பட்ட நண்டு பிடியாக இருக்கிறது விஷாலின் மூவ்கள்! நடிகர் சங்க விவகாரத்தில் இளம் நடிகர்கள் கூட்டம் ஒன்றை தன்னுடன் வைத்துக் கொண்டு ஒரு மினி விஜயகாந்தாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் அவர். ‘இப்பதான் உன் படமெல்லாம் நல்லா ஓடிகிட்டு இருக்கு. இந்த நேரத்துல அந்த வெற்றிகளை வச்சுகிட்டு இன்னும் இன்னும்னு உயரத்துக்கு போகப் பார்க்காம எதுக்கு இப்படி தேவையில்லாத சிக்கலெல்லாம்? என்கிறார்களாம் விஷாலின் குடும்பத்தில். இருந்தாலும், ‘நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டிட்டுதான் கல்யாணம்’ என்கிற அளவுக்கு செங்கல் சிமென்ட் ஜல்லி காம்பினேஷனில் இருக்கிறார் விஷால்.

இவர் ஒரு பக்கம் பேட்டி கொடுக்க, இன்னொரு பக்கம் நடிகர் சங்க தலைவர் சரத்குமார் அதற்கு பதிலளிக்க என்று நாளொரு சூடும், பொழுதொரு மூடுமாக போய் கொண்டிருக்கிறது நடிகர் சங்க ஆபிஸ் விவகாரங்கள். சங்கத்தின் வாக்கு வங்கி பலமே நாடக நடிகர்கள்தான். அவர்கள் யாருக்கு ஓட்டு போடுகிறார்களோ, அவர்களுக்குதான் வெற்றி என்ற நிலைமை பல வருஷங்களாக தொடர்கிறது. அதை நன்கு உணர்ந்திருக்கும் விஷால், நாடக நடிகர்களை அரவணைக்கும் வேலைகளில் இறங்கிவிட்டார்.

விஷாலும் தேர்தலில் நிற்கட்டும். நானும் நிற்கிறேன். யாருக்கு ஓட்டு விழுதுன்னு பார்த்துடலாம் என்கிறார் சரத்குமார். இப்படி அனுமார் வாலாக தொடரும் இந்த விவகாரத்தில் புதிய திருப்பம். தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு இருவரையும் அழைத்து சமாதானப்படுத்திக் கொண்டிருக்கிறாராம். அந்த சமாதான படலத்தை ஒரேயடியாக சிதைத்துவிடும் நோக்கத்தில் விஷால் மூன்று கேள்விகளை எழுப்பியிருக்கிறார் சரத்குமாருக்கு. அதென்ன?

ஒன்று : நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டுவது தொடர்பாக…

இதைப்பற்றிக் கேட்கும் போது இது சம்பந்தமாக வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பதை காரணம் காட்டுகிறார்கள். ‘பூச்சி’ முருகன் தொடர்ந்த வழக்கை வாபஸ் வாங்கினால் கட்டிடம் கட்டலாம் என்று சொல்லப்பட்டது. இந்த வழக்கில் கட்டிடம் கட்டுவது தொடர்பான ‘டீல்’ செல்லாது என்று நீதிபதி சந்துரு ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளார். 9 பேருக்கு பதிலாக 2 பேர் கையெழுத்திட்டால் அந்த ‘டீல்’ செல்லாது என்று அந்த சிங்கிள் பெஞ்ச் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்பின் டிவிஷன் பெஞ்ச் நீதிமன்றமும் இது செல்லாது என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புகள் தவறா..?

இரண்டு : கடந்த வருடம் நடந்த சிறப்பு செயற்குழு கூட்டத்தில் 2015 பொங்கலுக்குள் வழக்கை உடைத்து கட்டிடம் கட்டாவிட்டால் விஷால் சொல்லும் திட்டத்தை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று சொன்னார்கள். பொங்கல் முடிந்து மாதங்கள் பல மாதங்கள் ஆகி விட்டன. இன்னும் அதற்கு சரியான விளக்கம் கிடைக்கவில்லை.

மூன்று : திரு. குமரிமுத்து அவர்கள் ‘திருவாளர்’ என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காகவே பைலா எண் 13-ன்படி நடவடிக்கை எடுத்து அவரை சங்கத்திலிருந்து நீக்கினார்கள். ஆனால் என்னை ‘நாய்’ என்று பேசி இழிவுபடுத்தியவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே…? அப்படியானால் பைலா எண் 13-ன் கீழ் நடவடிக்கை என்பது குமரிமுத்துவுக்கு மட்டும் தானா..? ஏன் துணைத்தலைவர் காளைக்கு அந்த சட்டம் பொருந்தாதா…? இதற்கு மனசாட்சிப்படி அவர்கள் விளக்கம் சொல்லட்டும். இந்த மூன்று கேள்விகளில் உள்ள நியாயமான கருத்துகளை சொல்வது சங்கத்தின் மீது அவதூறான செய்திகளை பரப்பி வருவதாக ஆகி விடுமா..? இதற்கும் அவர்கள் மனசாட்சி சரியான பதிலை சொல்லட்டும்.

விஷாலின் கேள்விகளுக்கு பதிலென்ன வரப்போகிறதோ?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஆளேயில்லாத ஆடிட்டோரியம்! சவுண்டேயில்லாத மைக்கு! காமெடியாக முடிந்த டார்வே விருது!

கடந்த சில ஆண்டுகளாக தமிழ்சினிமா நடிகர் நடிகைகளை டார்வே நாட்டுக்கு அழைத்துச் சென்று விருது கொடுக்கிறேன் பேர்வழி என்று பட்டினி போட்டு அனுப்பும் ஒரு திருவிழா வருஷா...

Close