சிவகார்த்திகேயன் படம் தாமதம் ஆவது யாரால்?
இந்தியாவின் முன்னணி ஒளிப்பதிவாளர்கள் அத்தனை பேரும் ஒளி மேதை ஸ்ரீராமின் சிஷ்யர்கள்தான். இந்த ஒரு பெருமை போதாதா அவர் யார் என்பதை சொல்ல? அவ்வளவு பெரிய டெக்னிஷியனே சிவகார்த்திகேயன் படத்தில் ஒப்பந்தம் ஆனதும், அந்த படத்திற்காக சில ஆலோசனைகளை சொல்வதும், யூனிட்டையே சந்தோஷத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
சிவகார்த்திகேயன் மேனேஜர் ராஜா தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கப் போகிறார் சிவகார்த்திகேயன். அந்த படத்தின் முன்னறிவுப்புகள் முறைப்படி தெரிவிக்கப்பட்டு சில மாதங்கள் ஆன பின்பும் இன்னும் ஷுட்டிங் துவங்கப்படவில்லை. ஒரு படத்தை தயாரிப்பது முக்கியமல்ல. அதற்கான முன் தயாரிப்பு வேலைகள் சரியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார் ராஜா. அதற்கான வேலைகள் ஜரூராக ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, ஒளிப்பதிவு மேதை ஸ்ரீராம் ஒரு ஆலோசனை சொன்னாராம்.
“சூரியனை விட சிறந்த லைட் மேன் ஒருவரும் இல்லை. இயற்கை லைட்டிங்கின் சூத்திரதாரியான அவன், இப்போது காட்டும் அழகைவிட, நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் இன்னும் அழகான லைட்டிங் தருவான். எனவே படப்பிடிப்பை அப்போது வைத்துக் கொண்டால் காட்சிகள் பேரழகாக இருக்கும்” இதுதான் ஸ்ரீரராமின் ஆலோசனை.
அதை அப்படியே ஒப்புக் கொண்டு படப்பிடிப்பை ஸ்ரீராம் சொல்கிற நேரத்தில் வைத்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டாராம் சிவா. இன்றைய தேதியில் ஒரு படத்திற்கு பல கோடிகள் சம்பளம் வாங்கும் சிவகார்த்திகேயன், நாலு மாதங்கள் படப்பிடிப்புக்கு போகாமல் காத்திருப்பது எவ்வளவு பெரிய விஷயம்?