கவுண்டமணி அப்படி சொன்னாராம்…? ‘ நன்றாக அளந்துவிட்ட ’ இளம் ஹீரோ!
ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் தூக்கு தண்டனை கைதிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் கதைதான் வாய்மை என்று முன்பே கிசுகிசுக்கப்பட்டது. அதை உறுதி செய்வதை போல பிரபல புலனாய்வு இதழ் ஒன்றில் பேட்டியளித்திருந்தார் அப்படத்தின் இயக்குனர் செந்தில்குமார். ‘நான் சிறைச்சாலைக்கு சென்று பேரறிவாளனை சந்தித்தது உண்மைதான். ஆனால் கதை அவர் பற்றியதுதானா என்பதை படம் வந்தால் நீங்களே புரிந்து கொள்வீர்கள்’ என்று நழுவினார். பேரறிவாளன் கதையை படமாக எடுக்காவிட்டால் அவரை ஏன் சிறைச்சாலைக்கு சென்று சந்திக்க வேண்டும்? என்றெல்லாம் யோசிக்க தெரியாதவர்களா மக்கள்?
எனிவே… இந்த கதை சட்டம் பற்றியது. அதன் நியாய அதர்மம் பற்றியது என்பதோடு அந்த விவாதத்தை ஒத்தி வைக்க வேண்டியதுதான். ‘வாய்மை’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளும் வந்திருந்தார். ‘என் மகனின் விடுதலைக்காக எந்த சினிமாக்காரர்களும் குரல் கொடுக்கவில்லையே’ என்று வருந்தினார். (நம் சினிமாக்காரர்களின் இன உணர்வு, மொழி உணர்வு, சொந்த மாநில பற்று பற்றியெல்லாம் அந்தம்மாவுக்கு தெரிந்தது அவ்வளவுதான் பாவம்!)
பிற்பகல் பத்திரிகையாளர்களை தனியாக சந்தித்தது படக்குழு. சாந்தனு, ப்ருத்வி, இவர்களுடன் கே.பாக்யராஜும் வந்திருந்தார். படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார் கவுண்டமணி. வழக்கம் போல அவர் இங்கும் வரவில்லை. இருந்தாலும், மெயின் சுவிட்ச் இல்லாமல் மின் விளக்கா? பேச்சும் பாராட்டுகளும் அவரையும் சுற்றி சுற்றி வந்தது. ப்ருத்வி பேசியதுதான் அநியாயம். ஒவ்வொரு காட்சியிலும் நடித்து முடித்துவிட்டு வந்து, ‘எங்க… நான் நல்லா நடிச்சுருக்கேனோ?’ என்று கவுண்டமணி இவரிடம் கேட்பதாக கூறினார்.
நடிப்பு பல்கலைக்கழகமான கமல்ஹாசனே பக்கத்திலிருந்தால் கூட, தன் நடிப்புக்கு முன்னால் இவரெல்லாம் எம்மாத்திரம் என்பது போல உதட்டில் கை வைத்து உஃப்ப்ப்ப்ப்ப…. என்று சிரித்துவிட்டு போகிற நக்கல் பார்ட்டி கவுண்டர். அவர் இவரை பார்த்து கேட்டாராக்கும்? என்று பிரஸ் முணுமுணுக்க, அளந்துவிட்டுக் கொண்டிருந்தார் அம்பி.
படத்தின் பாடல் காட்சியும், ட்ரெய்லரும் இது வழக்கமான படம் அல்ல. சம்திங் ஸ்பெஷல் என்பதை மட்டும் பொட்டில் அறைந்தார் போல சொன்னது. ‘இவ்வளவு துணிச்சலான ஒரு படத்தை அதுவும் முதல் படமா எடுத்திருக்கிறார் செந்தில் குமார். அதுக்கு மதிப்பு கொடுக்கணும்ங்கறதுக்காக அந்த ஸ்கிரீன் ப்ளேவுல நான் தலையிடவேயில்லை’ என்றார் கே.பாக்யராஜ். கடைசியாக பேசியது பாக்யராஜ்தான் என்றாலும், அவருக்கு முன்னால் பேசிய டைரக்டர் செந்தில்குமார், தன்னுடைய அத்தனை வருஷ ஆதங்கத்தையும் கொட்டி தீர்த்துவிட வேண்டும் என்று நினைத்ததன் விளைவுதான் படு பயங்கர மொக்கை பிளேடு!
படத்தையும், கதையையும், அது சொல்ல வரும் விஷயத்தையெல்லாம் கூட விட்டுவிட்டு சம்பந்தமில்லாமல் எதையெதையோ பேசிக் கொண்டேயிருந்தார். நேரம் ஓடிக் கொண்டேயிருக்க, தீபாவளி நேரத்து காக்காய்கள் போல கூட்டம் சிதறி ஓட தருணம் பார்த்தபோது, ‘கட்’ சொல்லி எல்லாரையும் காப்பாற்றினார் கே.பாக்யராஜ்.
இதுக்குதான் கூட்டத்துக்கு ஒரு மூத்த டைரக்டர் வேணுங்கறது…