“ரொம்ப பயன்துட்டான்ல”

‘ம­ளுக்’ என்று குழாயை திறந்துவிட்ட மாதிரி கண்ணீர் வரும் ராஜேந்தருக்கு! எந்த சந்தர்பத்தில் அழுவார் என்பதை யாராலும் கணிக்க முடியாது. “நான்லாம் ஊர்லே இருக்கும்போது ஒரு வேளை சோ…” என்று ஆரம்பிக்கும்போதே தாரை தாரையாக கண்ணீர் ஓடும். சிறு பிள்ளைகள் மாதிரி, இரண்டு கைகளாலும் துடைத்துக் கொள்வார். அந்த வாக்கியத்தை முடிப்பதற்குள்ளாகவே அடுத்த சம்பவத்திற்கு தாவி, “நானெல்லாம்….” என்று இரண்டு கைகளாலும் சிட்டிகை போட்டுக்கொண்டே, “ங்கொம்….” என்று ஆரம்பித்து சென்னை பாஷையை சிதறு தேங்காயாக்குவார்.

சிரிக்க ஆரம்பித்தார் என்றால், பக்கத்து பில்டிங்குகள் கூட கிடுகிடுக்கும். உட்கார்ந்த இடத்திலேயே அப்படியே குட்டிக்கரணம் அடித்து சிரிப்பார். அப்படியரு சிரிப்போற்சவம் நடந்து கொண்டிருந்தபோதுதான் ராஜேந்தரை உலுக்குகிற அந்த நிகழ்ச்சியும் நடந்தது. வயதான அம்மாள் ஒருவர் வாசலில் நின்று கொண்டு, “என் ராசா… நீதான் இந்த கொடுமைய தட்டிக் கேட்கணும்” என்றார் பெருங்குரலெடுத்து!

அப்போது இவர் பூங்கா நகர் தொகுதியின் திமுக எம்.எல்.ஏ. அந்த வயதான அம்மாளும் பூங்கா நகரிலிருந்துதான் வந்திருந்தார். சினிமாவில் வருவது போல, “என்னாச்சும்மா… அழாம சொல்லு, நான் இருக்கேன்ல” என்று ஆறுதல் கூறிய ராஜேந்தர், அந்த அம்மா சொன்ன கதையை கேட்டு ஒரு புறம் கண்ணீர் வழிய, மறுபுறம் நெஞ்சை புடைத்துக் கொண்டு ஒரு பெரும் போருக்கு ஆயத்தமானார்.

அவர் சொன்னது இதுதான். “அய்யா…. என் புள்ளைய திருட்டு கேஸ்லே போலீஸ் புடிச்சிட்டு போயிடுச்சு. விடிய விடிய அடிச்சிருப்பானுங்க போலிருக்கு. குத்துயிரா கிடக்கிறான். பெரிய ஆஸ்பத்திரிலே சேர்த்துருக்கோம். ஆனா ஒரு டாக்டரும் வைத்தியம் பார்க்க மாட்டேங்குறான். புள்ள துடியா துடிக்கிறான். கொஞ்சம் வந்து பாருங்களேன். உங்களை விட்டா எனக்கு யாரு இருக்கா…” ன்னாங்க. அந்த கடைசிவரியில் தனது அத்தனை வருட பொறுமையையும் தொலைத்துவிட்ட டி.ஆர், “யேய் ங்கோ…. எட்றா வண்டிய” என்றார். அந்த அம்மாளையும் வண்டிக்குள் திணித்துக் கொண்டு புறப்பட்டது பீரங்கி! இருக்கிற நிலைமையை பார்த்தால் அது காராக படவில்லை என் கண்களுக்கு!

சென்ட்ரல் ரெயில்வே நிலையத்திற்கு எதிரே இருக்கிறதே, அதே ஜிஎச்சுதான். காரை விட்டு கீழே இறங்கிய டி.ஆர், “எங்கே இருக்கான் உம் புள்ள? முதல்ல அவன காட்டு. அப்புறம் காட்றேன் இவனுங்களுக்கு” என்றார் அந்தம்மாளிடம். கண்ணீரும் கம்பலையுமாக அந்தம்மாள் வழிகாட்ட, ரதகஜதுரகபதாதிகளுடன் வேக வேகமாக வார்டுகளை கடக்க ஆரம்பித்தார் ராஜேந்தர்.

யேய், ராஜேந்தருடா… என்று முகத்திலும் குரலிலும் ஆச்சர்யம் காட்டியபடி ஒவ்வொரு பேஷண்ட்டாக எழுந்து இவர் பின்னாலேயே ஓடி வர, மேற்படி பையனை நாங்கள் அடைவதற்குள் எங்களுக்கு பின்னால், சுமார் ஐநு£று அறுநு£று பேர் வேடிக்கை பார்க்கும் ஆர்வத்துடன் திரண்டிருந்தார்கள். கூட்டத்தை பார்த்ததும் ஜல்லிக்கட்டுக் காளை இன்னும் கொஞ்சம் முறுக்கிக் கொண்டு துள்ளியது. “டேய், யாருடா இவனை அடிச்சது?” என்றார் படத்தில் வருவது போலவே.

அன்றைக்கு பார்த்து எந்த கோட்டான் முகத்திலே முழிச்சாரோ, அந்த பையனை அடித்த இன்ஸ்பெக்டரும் அந்த பேஷன்டுக்கு அருகில்தான் நின்றிருந்தார். பையனின் அம்மா, “இவருதாங்க அடிச்சாரு” என்று இன்ஸ்பெக்டரை காட்ட, நரம்புகள் புடைக்க கத்த ஆரம்பித்தார் டி.ஆர். “யோவ்… ஒரு பச்ச மண்ண(?) இப்படி அடிச்சிருக்கியே, உனக்கெல்லாம் தம்பி தங்கச்சி இருக்காங்களாய்யா? இவன் செத்துப் போயிருந்தா என்னய்யா பண்ணுவே? இவன் திருப்பி அடிக்க மாட்டான்னுதானே அடிச்சே? வா, எங் கூட சண்டை போடு. யூனிபார்மை கழட்டிட்டு வா…” என்று சொல்லிக் கொண்டே, தன் சட்டை பித்தான்களை சரக் சரக்கென்று கிழித்து தள்ளினார். இந்த கோப வார்த்தைகளை அவர் முடித்திருந்தபோது, ராஜேந்தரின் வெள்ளை சட்டையில் ஒரு பட்டன் கூட இல்லை. அநேகமாக முக்கால் வாசி சட்டையை கழற்றியிருந்தார்.

பக்கத்தில் நின்றிருந்த நாங்கள் பாய்ந்து சென்று மேற்கொண்டு அவர் சட்டையை கழற்றாமல் பார்த்துக் கொண்டோம்.

இல்ல சார்… இவன் என்ன செஞ்சான்னு..? இன்ஸ் ஆரம்பிக்கும்போதே குறுக்கிட்டு, “என்ன வேணா செய்யட்டும்யா? கொல கூட பண்ணட்டும். அவனை அடிக்கிற அதிகாரம் உனக்கு இருக்கா? சட்டம் தெரியுமா உனக்கு? இபிகோ” ன்னு ஆரம்பிச்சு மறுபடியும் யாருக்கும் புரியாத விஷயங்களை எடுத்துவிட்டார், “நானும் லாயருக்கு படிக்கணும்னு ஆசைப்பட்டவன்தான், தெரியுமா” என்றார் மூச்சு வாங்க…

அதற்குள், ஆஸ்பிடல் டீன் பதறியடித்துக் கொண்டு ஓடோடி வந்தார். “சார், வாங்க நம்ம ரூம்லே போய் உட்கார்ந்து பேசுவோம்” என்று அவர் அழைக்க, சிங்கம் மறுபடியும் ஒரு துள்ளு துள்ளி அடங்கியது. இத்தனையையும் பார்த்துக் கொண்டிருந்த அந்த பையனின் அம்மா கையெடுத்து கும்பிட்டார். கண்ணிலிருந்து தாரை தாரையாக நீர் வழிந்தது. “இந்த பையனை காப்பாத்த வேண்டியது எங்க பொறுப்பு” என்று உறுதியளித்தார் டீன்.

“யோவ் போங்கய்யா அவங்கவுங்க வார்டுக்கு” என்று வேடிக்கை பார்த்தவர்களை டீனே துரத்தியடித்தது வேடிக்கையாக இருந்தது.

காரில் திரும்பும்போது, “கொஞ்சம் தண்ணி வாங்குங்கய்யா” என்றார் டிஆர். அழுது அழுதே அஞ்சு லிட்டர் தண்ணியை வெளியேத்தினவருக்கு, ஒரு லிட்டர் பாட்டில் ஒன்றை வாங்கி கொடுத்தோம். ஒரே மூச்சில் குடித்தவர், “ரொம்ப பயன்துட்டான்ல” என்றார் இன்ஸ்பெக்டர் குறித்து. “நாங்களும்தான்….” என்று வாய் வரை வந்ததை அடக்கிக் கொண்டு “ஆமாண்ணே…” என்றோம் கோரசாக!

கடைசிவரை அந்த பையன் என்ன தப்பு பண்ணினான்னு யாருமே கேட்கலே! அது ஏன்னுதான் இன்னிக்கு வரைக்கும் புரியலே…

நன்றி -ஆர்.எஸ்.அந்தணனின் அடிக்கடி பிளாக்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Making of Malini 22 Palayamkottai

http://www.youtube.com/watch?v=KrxzMshRnLA&feature=youtu.be

Close