அன்புள்ள தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு வணக்கம்.

அன்புள்ள தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு வணக்கம்.

நான் தங்களின் கடைகோடி ரசிகன். எனது பள்ளிக்காலத்தில் ரிலீஸான சிவா படத்தைப் பார்க்க தேனி கிருஷ்ணா திரையரங்கில் பத்து மணிக்காட்சிக்கு ஏழுமணிக்கே போய் காத்துகிடந்து, டிக்கெட் கவுண்டரில் நுழைய முடியாமல் மூச்சுத் திணறியவன். தேனியில் பிரபலமான தங்கக்குதிரை ரசிகர் மன்றத்து அண்ணன்கள்தான் என்னை தலைக்கு மேலே தூக்கி கவுண்டருக்குள் திணித்தார்கள். அப்படியும் எவனோ ஒரு புத்திசாலி ஈசியாக டிக்கெட் எடுக்க ஒரு பாக்கெட் வாஷிலைன் களிம்பை எல்லோர் தலையிலும் தடவி விட்டான். அவர்கள் அசந்த நேரம் பார்த்து அவன் உள்ளே புகுந்து டிக்கெட்டை வாங்கி திரையரங்கில் புகுந்தான்.. அப்படி சிவா படத்தை தலை நிறைய களிம்பும், வாசமும் அடிப்பது தெரியாமல்கூட உங்கள் முகத்தை பார்த்து ரசித்து மகிழ்ந்தவன் நான்.

உங்களால் ஏதேனும் மாற்றம் வராதா என்று ஏங்கிக் கிடந்தவர்களில் நானும் ஒருவன். காலம் உருண்டோடி விட்டது. உங்கள் வீட்டில் உங்களை சந்தித்து உரையாடும் பாக்கியத்தையும் பெற்றேன். ஆனால் கடந்த சில நிகழ்வுகள் என்னைப் போலவே தமிழகம் முழுதும் உள்ள ரசிகர்களையும் மன வேதனையடைய வைத்துள்ளது. கோச்சடையான் பாடல்களை வெளியிட்டு நீங்கள் “வெற்றி விழாவில் ரசிகர்களை சந்திப்பேன்.” என்று சொன்னீர்கள். இதன் அர்த்தம் ரசிகர்கள் எல்லோரும் திரண்டுவந்து படத்தை பார்த்து வழக்கம் போல் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆக்க வேண்டும் என்பதுதானே? அதுதான் ஒவ்வொரு முறையும் உங்கள் மேல் உள்ள பாசத்தால் ரசிகர்கள் நடத்தி வைக்கிறார்களே. ஆனால் இதே போல் நீங்கள் நூறு முறை சொன்னதை ஒருமுறை கூட நிறைவேற்றியதில்லை என்பது உங்களுக்கு தெரியுமா. உங்களுக்கு இருக்கும் வேலைகளில் அது ஞாபகத்தில் இருக்குமோ இல்லையோ.

தேர்தல் தேர்தலுக்கு அரசியல்வாதிகள் கொடுக்கும் வாக்குறுதி போல நீங்களும் உங்களின் ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும்போதும் இதுபோல் ரசிகர்களை உணர்ச்சி வசப்படுத்தும் வார்த்தைகளை பேசிவருகிறீர்கள். ரசிகர்கள் உங்க்ளை எப்போதும் உயர்ந்த இடத்தில் வைத்துதான் பார்க்கிறார்கள். . ஆனால் நீங்கள் அவர்களை வெறும் பணம் காய்க்கும் மரமாகவே பார்க்கிறீர்கள்.

இப்படி இதற்கு முன் நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். முதன் முறையாக நதிகள் இணைப்பிற்கு ஒரு கோடி கொடுப்பதாக அறிவித்தீர்கள். அது வெறும் அறிவிப்பாக மட்டுமே இருக்கிறதே. நதிகளை இணைப்பது நடக்கிற கதையா என்பது உங்களுக்கு தெரியாதா என்ன. அந்தத் தொகையை முதல் வரவாக வைத்து ஒரு இயக்கத்தை ஆரம்பித்திருந்தீர்களென்றால் கூட உங்களுக்கு இருக்கும் மக்கள் சக்திக்கும், ரசிகர்கள் பலத்திற்கும் இந்நேரம் பலகோடிகள் சேர்ந்து இயற்கையை காப்பாற்ற வலுவான அமைப்பு உருவாகியிருக்கும். அல்லது நதிகள் இணைப்பு பற்றி துல்லியமான திட்டத்தோடும், மக்கள்சக்தி என்ற இயக்கத்தோடும் பல காலம் போராடிவந்த எம்.எஸ்.உதயமூர்த்தி  போன்றோருக்காவது ஆதரவு கொடுத்திருக்கலாம். ஆனால் யாராலும் கண்டுகொள்ளப்படாமலே அவரும் மறைந்து போனார்.

ராகவேந்திரா திருமண மண்டபத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன் என்று அறிவித்தீர்கள். அதன் பிறகு அதன் பயன்கள் என்ன, செயல்பாடுகள் என்ன என்று எப்போதாவது யாராவது கேட்டிருப்பார்களா. இது நாள்வரை மக்களுக்கு அர்ப்பணிக்கபட்டதன் பயன் பற்றி ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடமுடியுமா. ஆனால் சும்மா ஒன்றும் நீங்கள் அர்ப்பணிக்கவில்லை. அந்த மண்டபம் அமைந்த இடம் பற்றி சில சர்ச்சைகள் வந்ததால் அப்படியொரு முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டீர்கள் என்றுதானே சொல்கிறார்கள்.

பாபா படம் வெளியானபோது என்ன நடந்தது. நீங்கள் பயன்படுத்திய பொருட்கள், உங்கள் உருவம் பதித்த பனியன், கர்சீஃப், டாலர், செருப்பு இத்யாதி இத்யாதி என்று எல்லாவற்றையும் கூறுகட்டி வைத்து ரசிகர்களிடம் காசு பார்த்தாரே உங்கள் மனைவி லதா. அப்போது மௌனமாகதானே இருந்தீர்கள். அப்படியென்ன பணத்தேவை வந்தது உங்களுக்கு என்று எந்த ரசிகனும் கேட்கவில்லை. அப்பாவிகள் அதையும் வாங்கிகொண்டு உங்கள் கல்லாவை நிறைத்தார்கள்.

கொத்துக்கொத்தாக பெண்கள், குழந்தைகள் என்று ஈழத்தில் செத்து மடிந்த போது நாடே கொந்தளித்து எழுந்தது. மாணவர்கள், வழக்கறிஞர்கள் என்று மக்கள் தெருவிற்கு வந்து போராடினார்கள். அப்போதும் கனத்த மௌனம். அரசியல் பற்றி அல்ல ஒரு மனிதாபிமானத்திற்காகவாவது ஒரு வருத்தம் தெரிவித்திருக்கலாம். ஆனால் அதைச் செய்யாமல் எங்கோ இருந்த சஞசய்தத் சிறைப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிடுகிறீர்கள். நீதிமன்றமே அவர் குற்றவாளி என்று அறிவித்த பிறகு

எங்களுக்கு ஏன் வருத்தம் வந்தது. எந்த குற்றமும் செய்யாமல் சின்னஞ்சிறு குழந்தைகள் செத்து விழுந்தபோது உங்களுக்கு வருத்தமாக இல்லையா. நீங்கள் பணம் சம்பாதிப்பதற்கு தமிழன் வேண்டும். உங்கள் பாசத்தை காட்டுவதற்கு வேறு ஒரு இடம் வேண்டுமா.

அவ்வளவு ஏன் இதே சௌந்தர்யா திருமணத்தின் போது நடந்தது என்ன? ரசிகர்கர்களை திருமணத்திற்கு அழைக்கவில்லையா என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு “ரசிகர்களுக்கு தனியாக திருமண விருந்து வைப்பேன். எங்கே எப்படி என்பது பற்றி பின்னர் அறிவிப்பேன் என்றீர்கள். அதையும் ஈசியாக மறந்துவிட்டீர்கள். ஒருவேளை சாப்பாடு இல்லாமலா உங்கள் விருந்தை ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஒரு வேளை என்றாலும் நம் தலைவன் வீட்டு விருந்து என்ற திருப்தி அவர்கள் வாழ்நாள் முழுதும் போதுமே.

நீங்கள் உடல் நலமில்லாதபோது நடந்தது எதுவுமே உங்களுக்கு தெரியாது. பத்திரிகையாளன் என்பதையும் மீறி போரூர் ராமச்சந்திரா மருத்துவ மனையில் பலத்த காவலையும் மீறி நான் நுழைந்தேன். என்னைப் போல் இன்னும் சில ரசிகர்களும் அங்கு இருந்தனர். அங்கு வந்த லதா அவர்கள், ”நீங்கள் எல்லாம் ஏன் இங்கு வந்தீர்கள்”. என்று கேட்டு அத்தனை பேரையும் கலங்கவைத்தார். ஆனாலும் எப்படியாவது பார்த்துவிடமாட்டோமா என்று நடு ரோட்டில் சுற்றியலைந்தது ரசிகக்கூட்டம். கண்காட்சி நடத்தி பணம் சம்பாத்தித்த ரசிகர்களிடம் இன்னும் கொஞ்சம் பக்குவமாகவே தெரிவித்திருக்கலாம். இன்னும் ஒரு சோகம் கேளுங்கள் நீங்கள் சிங்கப்பூர் மருத்துவமனைக்கு போகும் முன் வீட்டுக்கு வருகிறீர்கள் என்ற தகவல் தெரிந்து பத்திரிகையாளர்கள் சிலர் உங்கள் போயஸ் தோட்டத்து வீட்டில் கூடினோம். அந்த ஏரியாவில்தான் எந்த கடையும் இருக்காதே.. நீண்ட நேரமாகிவிட்டது. எல்லோருக்கும் தாகம். வேறு வழியில்லை. உங்கள் வீட்டு கேட்டருகே வாட்டர் கேன் வைக்கப்பட்டிருந்தது. பத்திரிகையாளர் ஒருவர் போய் அங்கிருந்தவரிடம் தண்ணீர் கேட்டதற்கு தர மறுத்துவிட்டார். வீட்டிலிருப்பவர்கள் சொல்லாமல் எதையும் தரமாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள். எங்கள் நிருபர் ஒருவர் “அட கர்நாடகமே” என்று தலையில் அடித்துக்கொண்டார். அது மாநிலத்துப் பெயருக்காக அலல. அடிப்படை விஷயமே தெரியாதவர்களை அப்படி சொல்வது வழக்கம். அப்போதுதான் நீங்கள் எப்படிபட்ட சூழலில் இருக்கிறீர்கள் என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம்.

பல கோடி ரசிகர்களும் தமிழர்களும் உங்கள் மீது வைத்த பாசத்திற்கு எதைத் திருப்பித் தரப்போகிறீர்கள். கடைசிவரைக்கும் அவர்களை டிக்கெட் வாங்கும் இயந்திரங்களாக்கி வைப்பதுதானா. அல்லது இன்னும் பாட்டு வரிகளில்தான் நன்றி சொல்லப் போகிறீர்களா. சமூகத்திற்கு உங்கள் பெயர் சொல்லும்படி எதையும் செய்யப்போவதில்லையா. உங்கள் துறையில் இருக்கும் நடிகர் விவேக் சமூக அக்கறையோடு இதுவரைக்கும் தமிழகம் முழுதும் 22.5 லட்சம் மரக்கன்றுகளை நட்டு வைத்திருக்கிறார். மரம் வளர்[ப்பதன் அவசியத்தைப் பற்றி நாடு முழுதும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தும் வருகிறார்.. இப்போது விவேக்கின் இந்த பணி தமிழக விவசாயிகள் கைக்கு போயிருக்கிறது. தினத்தந்தி நாளிதழ் பலமுறை தலையங்கத்தில் அவரை பாராட்டியிருக்கிறது. இவர் போன்றவர்களுக்கு நீங்கள் ஆதரவு தெரிவித்திருந்தாலே உங்கள் ரசிகர்களும் மரம் வளர்ப்பதில் கவனம் செலுத்துவார்களே
ஒரு விஷயம் ரஜினி சார் எல்லா நடிகர்களுக்கும் எம்.ஜி.ஆர். போல் ஆக வேண்டும் என்று மட்டும் ஆசையிருக்கிறது ஆனால் அவர் போல் தர்மம் செய்ய வேண்டும் என்பது யாருக்கும் தெரியாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

இப்படி கொடுத்த வாக்குறுதிகளை மறந்து விட்டு உங்கள் மகள் சௌந்தர்யா இழுத்து வைத்த கடனை அடைக்க “இந்த பொம்மை படத்தையும் ஓட வையுங்கள்.” என்று கைகூப்பி வேண்டுகிறீர்கள். இதற்கு நீங்கள் அரசியல்வாதியாகவே ஆகியிருக்கலாம்.

அன்புடன்
இப்போதும் உங்கள் ரசிகனாகவே இருக்கும்

தேனி கண்ணன்

.

15 Comments
  1. ram iyer says

    Well said, Rajini never respects intelligence of cinema viewers, fans and people.

    1. ram das says

      raji is a selfish fellow. he make his rasikars as his scapegoad for his wealth accumulation

  2. Ghazali says

    நல்ல கட்டுரை.

  3. Raj says

    அருமையா சொன்னிங்க தேனி கண்ணன்…. பொட்டுல அடிச்ச மாதிரி தெளிவா சொன்னிங்க.. இனிமேயாவது இந்த ரசிகர்களுக்கு புரியட்டும்…..

  4. anand says

    ரஜினி சுயரூபத்தை நல்லா தோலுரிச்சு காட்டிட்டீங்க.. இதுக்கு அரசியல்வாதியாவே ஆகியிருக்கலாம்னு சொன்னது சூப்பர் பஞ்ச்.. ஆனா இதையெல்லாம் படிச்சுட்டு ரஜினி ரசிகன் தெளிஞ்சிடுவானா என்ன..? தலைவனுக்கு கோயில் கட்டி கும்பாபிசேகம் பண்ணுவானே தவிர இதுக்கு மேலயாவது பொழப்பை பார்ப்போம்னு நெனைக்க மாட்டான்… எவ்ளோ அடிச்சாலும் தாங்கற ஏமாளிங்கதான ரஜினி ரசிகர்ங்க..

  5. rajesh says

    as per my knowledge he always gives priority to karnataka people issue.
    for example
    prabhu deva and nayandara.

  6. Rajini Rasigan says

    YAAAAAAWN!

  7. Thalaivan Veriyan says

    better luck next time bro

  8. saravanan says

    Nijathin nirvaanam …

    1. karthick says

      miga seriyaga sonninga saravanan…

  9. Anjivicky says

    C’mon man, he is earning and you are earning too. He s making big money and you are making comparitively smaller money.. thats the difference. no big deal. When someone gets on the top, why everybody expects that person to donate and do some social activities ??? YOU become a fan of him at YOUR own interest and expect HIM to do something is a hilarious joke!!

  10. Anjivicky says

    If vivek does something, he is doing out of his own interest. Or he could have done for publicity too.. May be Rajini doesnt want to do it. Why care about it ?? Its better that you forget following someone and find some good for yourself..

  11. Ganesh says

    Hats off Mr. Theni Kannan.

    He is not deserve to compare MGR. MGR is a Great leader to give up everything for Poor people.

    Rajini accumulates wealth for his two daughters. Anyhow, he knows that dhanush is there to take care of Aishwarya, where as Soundarya is Pet daughter for him Unlike Aishwarya(Because of Simbu issue) and he is helping her to grown up well.

  12. kumar says

    வாயசைத்தமைக்காகவாவது உப்பிட்ட தமிழ் மண்ணுக்கு இனியேனும் தொண்டாற்றட்டும் உச்சிக்கலைமீன் இரசினி!

    தமிழ்நலக் கலைஞர்களை மட்டுமே போற்றட்டும் தமிழர்கள்!

    http://www.akaramuthala.in/modernliterature/katturai/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5%e0%af%88/

  13. தமிழ்ச்செல்வன் says

    LONG LIVE OUR GOD EVER GREEN SUPER STAR RAJINI

Reply To anand
Cancel Reply

Your email address will not be published.

Read previous post:
2005-க்கு முன்னுள்ள நோட்டுகளை எந்த வங்கியிலும் மாற்றலாம்: ஆர்பிஐ

2005-ம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. 2005-ம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட நோட்டுகளில், பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்படவில்லை....

Close