புலி சென்சார் முடிஞ்சுது… அப்புறம் எதுக்கு ஸ்ரீதேவிய வரச்சொல்றாங்க?
நடுவில் கொஞ்சம் ‘கல்’ தடுக்கி, ‘நசுக்’ ஆன புலி மீண்டும் அதே வேகத்தோடு எழுந்து ஓட ஆரம்பித்துவிட்டது. நசுக்குன கல், பாகுபலியும் அதன் கிராபிக்சும்தான் என்பதை நாம் சொல்லியா தெரிய வேண்டும் ரசிகர்களுக்கு? இதுவரைக்கும் பண்ணுன கிராபிக்ஸ் வேலையை அப்படியே எடுத்து ஓரமா வச்சுட்டு இன்னும் இன்னும் சிறப்பா பண்ணுங்க. அப்பதான் பாகுபலியோட ஒப்பிட்டாலும், பல்லு மூக்கு சேதாரமில்லாம தப்பிக்கலாம் என்று ஒப்பிக்கவே ஆரம்பித்துவிட்டார் படத்தின் இயக்குனர் சிம்புதேவன். அவரது கட்டளைப்படி சுருதி சுத்தமாக வந்திருக்கிறதாம் சிஜி.
நேற்று தணிக்கை குழு படத்தை பார்த்துவிட்டு யு சர்டிபிகேட்டும் கொடுத்துவிட்டது. அதற்கப்புறம் நடந்ததுதான் படு பயங்கரமான திருப்பம். படத்தில் நடித்த எல்லாரும் டப்பிங் பேசிவிட்டார்களாம். இன்னும் ஸ்ரீதேவி மட்டும்தான் பேச வேண்டும். அவர் வரும்வரைக்கும் காத்திருந்து முடித்து தணிக்கை குழுவுக்கு அனுப்பிவிட்டு காத்திருப்பதை விட, தற்போது டம்மியாக இருக்கும் வாய்ஸ் மட்டும் அப்படியே இருக்கட்டும். ஆஃப்டர் சென்சார், அந்த பணியை முடித்துக் கொள்ளலாம் என்று நினைத்தாராம் சிம்புதேவன்.
பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்கள் என்றால், வீட்டுக்கு போய் கூட விமர்சனம் பண்ணிட்டு வருவோம் என்கிற நிலையில்தான் இருக்கிறது அதிகாரமட்டம். இந்த விஷயத்தில் கேட்க வேண்டுமா? உங்க வேலையை கூட அப்புறம் பாருங்க. எங்கவேலையை முடிச்சுக் கொடுத்துடுறோம் என்று இறங்கி வந்தார்களாம் சென்சாரில்.
இன்னும் இரண்டொரு நாளில் சென்னைக்கு வரவிருக்கும் ஸ்ரீதேவிக்காக இப்பவே சென்ட் அடித்துக் கொண்டு காத்திருக்கின்றன டப்பிங் ஸ்டூடியோவின் மைக்குகள்!