அம்மாவுக்கு வெற்றி! அனைவருக்கும் நன்றி! நன்றி நவில்கிறார் ஒட்டுப்போட வராத நமீதா!
இந்த தேர்தலில் நமீதாவின் சுற்றுப்பயணம் இல்லாத குறையை இன்னும் கூட ஜீரணிக்க முடியாமல் தினந்தோறும் தண்ணீருக்கு பதிலாக சோடா குடித்தே ஆற்றிக் கொண்டிருக்கிறான் ஒவ்வொரு தமிழனும். இந்த தேர்தல் போனாலென்ன, அடுத்த தேர்தலுக்கு இருக்கு கச்சேரி… என்ற நல்ல மனசுடன் தேர்தல் முடிவை உன்னிப்பாக கவனித்து உவகையின் உச்சிக்கே போயிருக்கிறார் நமீதா. (இவ்வளவு ஆர்வமாக இருந்த நமீதாவுக்கு, ஐயகோ சென்னையில் ஓட்டே இல்லையாம். அதனால்தான் அவரால் வாக்கு சாவடிக்கும் வர முடியவில்லை என்றொரு தகவரும் வருகிறது)
இந்த தேர்தல் முடிவுக்கு பின் சுட சுட ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார் நமீதா. அது பின் வருமாறு-
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா தலைமையிலான அதிமுக அமோகமாக வெற்றி பெற்றுள்ளது. இது அம்மாவின் நிர்வாகத்திறனுக்கும், ஆட்சிமுறைக்கும் கிடைத்த மகத்தான வெற்றி. ஏழை மக்களுக்கும் அன்றாடம் பசியில் வாடுவோருக்கும் அம்மா ஏற்படுத்திய நலத்திட்டங்கள் தான் வாக்குகளாக மாறியுள்ளது. மேலும், இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் ஆகியோரின் எல்லா தேவைகளையும் அம்மா அவர்கள் பார்த்து பார்த்து நிறைவேற்றியிருக்கிறார்கள். அதனால்தான் இதற்கு முன் இல்லாத அளவுக்கு உருவான அறுமுனை போட்டிகளையும் தாண்டி தனிப்பெரும் வெற்றியை அம்மாவுக்கு மக்கள் பரிசளித்திருக்கிறார்கள்.
இனி வரும் ஐந்தாண்டுகளும் அம்மாவின் தலைமையில் பொற்கால ஆட்சி தொடரப்போகிறது. வரும் தலைமுறைகளின் நோக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும் அம்மா அவர்கள் பூர்த்தி செய்வார். மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள் பெற்ற பெருவெற்றிக்கு என் பணிவார்ந்த வாழ்த்துகள். இரட்டை இலைக்கு வாக்களித்து அம்மாவை மீண்டும் அரியணையில் அமர வைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், வெற்றிக்காக அயராது பாடுபட்ட கழக தொண்டர்களுக்கும் என் மனம் கனிந்த நன்றிகள்!