தல க்கு மரியாதை குறைவு ஏற்பட்டால் ஆபிஸ் இருக்காது! விஜய் டி.வியை எச்சரிக்கும் அஜீத் ரசிகர்கள்?
விட்டால் நாக்கில் தீச்சட்டி ஏந்துவார்கள் போலிருக்கிறது அஜீத் ரசிகர்கள். ஏன்? விஜய் தொலைக்காட்சியில் வரப்போகும் நிகழ்ச்சி அப்படி!
கடந்த பல வருடங்களாகவே அஜீத் ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே ஒரு வெட்டு குத்து நடந்து கொண்டேயிருக்கிறது. இது குறித்து கவலைப்படாத பத்திரிகைகளோ, ஊடகங்களோ இல்லை எனலாம். அப்படியிருந்தும் இந்த குழாயடி சண்டையில் குடுமியை கொடுப்பானேன் என்று அட்வைசோடு கிளம்பிவிடுகிற ஊடகங்களுக்கு நடுவில், நிஜமாகவே அக்கறை எடுத்து இவ்விரு ரசிகர்களையும் ஓரிடத்தில் இணைத்துவிட்டது விஜய் தொலைக்காட்சி. வெற்றிகரமாக நடத்தப்பட்டு வரும் நீயா நானா நிகழ்ச்சியில் வரும் பொங்கல் தினத்தன்று வரப்போகும் நிகழ்ச்சிதான் இது.
இருவரது ரசிகர்களும் எதிரெதிரே அமர்ந்து அவரவர் ஹீரோக்களை பற்றி ஆசை தீர அலச விட்டிருக்கிறார்களாம். படப்பிடிப்பு நேரத்தில் கூட வாய்க்கூச்சல் ஏற்பட்டதாக கூறுகிறார்கள். இருந்தாலும் பயர் என்ஜின், போலீஸ் துணையில்லாமல் இரு தரப்பு ரசிகர்களையும் சாந்தப்படுத்தி அனுப்பியிருக்கிறார்கள் தயாரிப்பாளர் அந்தோணியும், கோபிநாத்தும்.
நிகழ்ச்சி ஒளிபரப்பாகவிருக்கும் நாள் நெருங்க நெருங்க சூடேறிப் போய் கிடக்கிறார்கள் அஜீத் ரசிகர்களும் விஜய் ரசிகர்களும். எங்க தல க்கு ஏதாவது மரியாதை குறைவு ஏற்பட்டால் விஜய் டிவி இருக்காது என்று ஒரு அஜீத் ரசிகர் பேஸ்புக்கில் முழங்க, அதை பல ரசிகர்கள் ஷேர் செய்திருக்கிறார்கள்.
விஜய் டிவி யின் இந்த பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி, எந்த ரசிகரை அதிகம் ‘பொங்க’ வைக்கப் போகிறதோ? அவர்களுக்கே வெளிச்சம்!