அஜீத் விஜய்… அப்புறம் பிரசாந்த்! பிரபல இயக்குனர் எவிடென்ஸ்!
பிரசாந்த் வீட்டு காலண்டரில் மட்டும் இருபது வருஷத்துக்கு முந்தைய தேதியை கிழிக்காமலே வைத்திருப்பார்கள் போலிருக்கிறது. அப்பாவும் மகனும் அதே வயசோடு அதே துடிப்போடு இருப்பதை ஆயிரமாவது முறை பார்க்க நேர்ந்தது இன்றும்! இடம்- பிரசாந்த் லேப். நிகழ்ச்சி- சாகசம் இசை வெளியீட்டு விழா.
தேவதர்ஷினி கொஞ்சம் ஓவர்தான். “நான் ஸ்கூல்ல படிச்சுட்டு இருந்தபோது பிரசாந்த் சார் படம் பார்த்து அவரோட வெறி பிடிச்ச ரசிகையா இருந்திருக்கேன். இந்த படத்தில் அவரோட நடிச்சுருக்கேன். என்ன ஒண்ணு…? என்னை அவர் ஆன்ட்டின்னு கூப்பிடுவார்” என்று கூற, பிரசாந்துக்கே பெரிய புன்னகை! தன் வயசையெல்லாம் தொலைத்து தள்ளிய இளமையை எந்த பிளாஸ்டிக் சர்ஜரியில் மீட்டெடுத்தாரோ? அந்த சந்தேகம் படத்தின் பாடல் காட்சிகளை பார்த்ததும் இன்னும் இன்னும் உயர்ந்து கொண்டே போனது. திரையிடப்பட்ட ஐந்து பாடல்களும் அப்படியொரு அழகு. ஸ்மார்ட்.
உலகத்தின் சிறந்த கோரியோகிராபர்களையும், உலகத்தின் சிறந்த காஸ்ட்யூமர்களையும், உலகத்தின் சிறந்த ஒளிப்பதிவாளரையும் கொண்டு உருவாக்கியிருப்பார்களோ என்கிற அளவுக்கு பிரமிப்பு. ஆனால் சர்ப்பிரைஸ்… அவ்வளவும் உள்ளூர் வித்தைக்காரர்களின் கை வண்ணம்!
விழாவில் கலந்து கொள்ள அயல்நாட்டு ஐயா துரைகளெல்லாம் வந்திருந்தார்கள். இருந்தாலும் உள்ளூர் தவில்களின் சப்தம் கொஞ்சம் ஓவர்தான். ஆனால் நிஜத்தின் சதவீதம் நிறையவே இருந்தது அதில். பிரசாந்த்தை வைத்து சாக்லெட் படத்தை இயக்கிய மாதேஷ்தான் ஷங்கரின் ஜீன்ஸ் படத்தின் தயாரிப்பு நிர்வாகி. அவர் ஒரு பிளாஷ்பேக் சொன்னார். ஷங்கர் சார் கதையை தயார் செய்துவிட்டார். ஐஸ்வர்யாராய்தான் ஹீரோயின் என்பதும் முடிவாகிவிட்டது. ஹீரோவாக யாரை நடிக்க வைப்பது. மூன்று ஆப்ஷன்கள்தான் வைத்திருந்தோம். இளையதளபதி விஜய்… அல்டிமேட் ஸ்டார் அஜீத்… அதற்கப்புறம் பிரசாந்த்.
ஷங்கர் யாரை முடிவு செய்யப் போகிறார் என்று எங்கள் எல்லாருக்குமே ஆவல். பரபரப்போடு காத்திருந்தோம். சட்டென அவர் முடிவு செய்தது பிரசாந்தைதான். தமிழ்சினிமாவில் எல்லா திறமைகளும் கொண்டவர் பிரசாந்த். அவர் ஏன் இவ்வளவு பெரிய கேப் விட்டார் என்பதுதான் என் வருத்தம். அவர் இருபது அடி பின்னால் போனது, நாற்பது அடி பாய்வதற்குதான் என்பது இப்போது அவரை பார்த்தால் புரிகிறது என்றார்.
மாதேஷின் வார்த்தைகளை பிரசாந்த் பொய்யாக்க மாட்டார் என்பதை சற்று முன் நாம் பார்த்த அந்த பாடல்கள் சொன்னது. வாங்க பிரசாந்த்… ஆட்டத்தை ஆரம்பிக்கலாம்!
எல்லாம் சரி தான்… ஆனா நடிக்கதெரியலேயே பாஸ்..