அஜீத் புதுப்பட தலைப்பு என்னை அறிந்தால்! அடுத்த படமும் இதே நிறுவனத்திற்குதானாம்… (விவரம் உள்ளே)
அஜீத்தின் 55 வது படத்தின் தலைப்பு, ஷுட்டிங் முடிகிற நேரம் வரைக்கும் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. ‘ என்னை போற்றி புகழ்வது போல தலைப்பு இருக்கக்கூடாது. படத்தில் வரும் என் கேரக்டர் பெயராகவும் இருக்கக்கூடாது, கதைக்கும் தலைப்புக்கும் கண்டிப்பாக சம்பந்தம் இருக்கணும்…’ இப்படி பல்வேறு நிபந்தனைகளுடன் தலைப்பு தேடும் வைபவத்தை துவங்கி வைத்தார் அஜீத்.
சுமார் 200 தலைப்புகளுக்கும் மேல் பரிசீலிக்கப்பட்டு அஜீத்தின் நாள் நட்சத்திரம் பொருந்தி வரும் இந்த நாளில் அறிவித்துவிட்டார்கள். தமிழ் திரையுலகத்தை சேர்ந்த நடிகர்கள் சிலரே, இந்த தலைப்பை நேற்றே தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் படக்குழுவினரை படுத்தி எடுத்தது தனிக்கதை. எப்படியோ? இன்று காலை அறிவிக்கப்பட்டிருக்கும் தலைப்பு, என்னை அறிந்தால்.
ஆஹா… இதைவிட பொருத்தமான தலைப்பு இன்னொன்று இருக்க முடியாது என்கிற அளவுக்கு லேசான தத்துவத்தையும் உள்ளடக்கிய தலைப்பு அது. உலகம் முழுக்க இருக்கிற அஜீத் ரசிகர்கள், படத்தின் அடுத்தகட்ட பாய்ச்சலை ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
இன்னொரு முக்கிய செய்தி- அஜீத் தன் அடுத்த படத்திற்கும் ஏ.எம்.ரத்னத்தையே தயாரிப்பாளராக்கி விட்டார். சிறுத்தை சிவா இயக்கவிருக்கும் அந்த படத்தை ரத்னம்தான் தயாரிக்கிறார்.