இட்லி கடையில் இசைப்புயல்! ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் ஸ்பெஷல் கட்டுரை

உலகெலாம் ஓதற்கு எளியவனா இருந்தாலும், பரமனே…ன்னு பல்லாக்குல ஏத்தி வச்சு கும்புடுறதுதானே நம்மளோட பண்பாடு? படைச்சவனே இறங்கி வந்து ‘தம்பி… ஒரு பாட்டு பாட்றீ’ன்னு கேட்கிற அளவுக்கு உலகெலாம் இசையில் உயர்ந்தவராயிருக்கிறார் நம்ம இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.

காலை ஜப்பானில் காஃபி. மாலை நியூயார்க்கில் ட்யூனு என்று விமானத்தில் பாதி நேரம், வேறோரு நாட்டில் மீதி நேரம்னு நடமாடும் இசையா, செவி தேடும் மழையா வாழ்ந்துகிட்டு இருக்கார் அவர்.

கனடாவில் ஒரு தெருவுக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் பெயரை சூட்டி மகிழுது அந்நாட்டு அரசு. ஆனால் ‘தம்பி யாரு, எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே?’ என்று கேட்கிற நிலைமைக்குதான் இன்னமும் இருக்கு நம்ம கிராமங்களில் பல. அப்படிப்பட்ட ஒருவரை நேரில் பார்த்தும், அசராமல் சிரித்துக் கொண்டே திரும்பிய அந்த ‘நைன் ஒன் சிக்ஸ் கோல்டு’ பற்றிதான் இந்த எபிசோட்!

அதை தெரிஞ்சுக்கறதுக்கு முன்னாடி தமிழ் கூறும் நல்லுலகத்தை தன் இசையால் மகிழ வைத்திருக்கிற ஏ.ஆர்.ரஹ்மான் யாரோட ரசிகர்? அதை தெரிஞ்சுப்போமா?

ரஹ்மான் சந்தோஷமாக இருக்கிற தருணங்களில் ஒரு பாடகரின் பாடலைதான் சப்தம் போட்டு பாடுவாராம். அவர் பாகிஸ்தானின் புகழ் பெற்ற பாடகர் நுஷ்ரத் ஃபதே அலிகான். தன் வாழ்நாள்ல ஒரு முறையாவது அவரை நேரில் சந்திக்கணும்னு நினைக்கிற அளவுக்கு அவரோட குரலுக்கும் ட்யூனுக்கும் அடிமை இவர். ‘வந்தே மாதரம்’ ஆல்பத்தை உருவாக்கும் போதே இதில் ஒரு பாடலை தனக்கு பிடித்த நுஷ்ரத் ஃபதே அலிகானை பாட வைத்துவிட வேண்டும் என்று நினைத்துவிட்டார் அவர். ஒட்டுமொத்த இசை ரசிகர்களையும் கிறங்கடிக்கிற அளவுக்கு இசை, ட்யூன் எல்லாம் ரெடி. நுஷ்ரத்தின் குரல் ஒன்றுதான் பாக்கி. தன் அம்மாவுடன் பாகிஸ்தானுக்கு பிளைட் பிடித்துவிட்டார் ரஹ்மான்.

அவர் மட்டும் என்ன சாதாரண பாடகரா? பாகிஸ்தானே பைத்தியம் பிடித்து அலைகிறது அவரது குரலுக்காக. ஏகப்பட்ட கெடுபிடிகளை தாண்டி நுஷ்ரத் ஃபதே அலிகானின் வீட்டுக்குள் சென்று விட்டார் ஏ.ஆர்.ரஹ்மான். இந்த சந்திப்புக்கு ‘முன் அனுமதி’ வாங்கியிருந்தாலும், அரிவாளுக்கு வணக்கம் வச்சுட்டுதானே ஐயனாரு கோவிலுக்குள்ள போக முடியும்? அங்கேயும் ஒரு சில அரிவாள்கள் இருந்தன. செக்யூரிடிகள் என்ற பெயரில்! அங்கிருந்த காவலாளி ஒருவனுக்கு கடும் கோபம் வந்துவிட்டதாம் ரஹ்மான் மீது. ‘உன்னை மாதிரி ஒரு சின்னப்பையன் இசையில் பாடுறதுக்கு எங்க நுஷ்ரத் இந்தியாவுக்கு வரணுமா?’ என்று கோபத்தோடு கேட்டு தன் துப்பாக்கியை உயர்த்தியதாக கூட கூறுகிறார்கள் இங்கே. நல்லவேளையாக நுஷ்ரத்தே வெளியே வந்து இன்முகத்தோடு ரஹ்மானை உள்ளே அழைத்துச்சென்றாராம். பின்பு ‘வந்தேமாதரம்’ ஆல்பத்தில் அவர் பாடியும் கொடுத்திருக்கிறார். (ரெக்கார்டிங் பாகிஸ்தானில் நடந்தது)

ரஹ்மான் பற்றி கேள்விப்படுகிற எல்லா தகவல்களுமே ‘ஆஹா’ டைப்! இரவுக்கோழி! மது அருந்திவிட்டு யார் வந்தாலும் அவர் எவ்வளவு பெரிய இயக்குனராக இருந்தாலும் ஸ்டுடியோவுக்குள் அனுமதியில்லை. உலகமே தலைகீழாக புரண்டாலும் ஐந்துவேளை தொழுகைக்கு விடுமுறையே கிடையாது. இந்தியாவில் எங்கெல்லாம் புகழ்பெற்ற பழமையான தர்காக்கள், மசூதிகள் இருக்கிறதோ, அங்கெல்லாம் சென்று வழிபடுவது பிடித்தமான விஷயம்.

ஒருமுறை கொல்கத்தாவுக்கு சென்ற ரஹ்மான், அங்கிருக்கும் புகழ்பெற்ற மசூதிக்கு சென்றிருந்தார். நம்ம ஊர் பாரீஸ் கார்னருக்கு போனால், ஜன நெரிசலில் சிக்கி செருப்பு ஒரு பக்கம், விரல் ஒரு பக்கம் தொலைந்து போய் திரும்புவோமே, அப்படியொரு டைப்பான ஏரியாவாம் அது. அதுவும் நாலாவது மாடியிலிருந்தது அந்த மசூதி. இவர் தொழுகை செய்யும் அந்த நேரத்தில் விஷயம் வெளியே பரவி விட்டது. தொழுகையை முடித்து வெளியே வந்தால் அந்த மசூதி அமைந்திருக்கும் நாலு தெருவையும் அடைத்துக் கொண்டு ஜன வெள்ளம். எல்லாம் ரஹ்மானை காணும் ஆசையில் திரண்டவர்கள். அப்போது கூட அது தன்னை காண வந்த கூட்டம் என்பதை அறியாத ரஹ்மான், ‘ஏன் இவ்வளவு கூட்டமா நிக்கிறாங்க?’ என்று கேட்டுக் கொண்டே கேஷூவலாக கீழே இறங்க, ‘அம்புட்டு சனமும் ஐயாவை பார்க்கதான்’ என்று தெரியவே சில நிமிடம் ஆனதாம் அவருக்கு. ஹோய்… என்று ஒரே உற்சாக கூச்சல். ஒரு நிமிஷம் மருண்டு போனாராம் ரஹ்மான். விருட்டென்று திரும்பவும் உள்ளே ஓடிவிட்டார். அப்புறம் போலீஸ் வந்து இவரை ஜீப்பில் ஏற்றிக் கொண்டு போய் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்திருக்கிறது.

உலகத்தின் எந்த மூலைக்கு போனாலும், ‘அட நம்ம ரஹ்மான் சார் டோய்..’ என்று எல்லா நிறத்தவர்களும் கொண்டாடுகிற அளவுக்கு புகழ்பெற்ற ரஹ்மான் தென்காசிக்கு போயிருந்தார் ஒருமுறை. வேறென்ன? கம்போசிங்தான்! ஜன்னலை தொறந்தா ஸ்விட்ச்சர்லாந்து… கதவ தொறந்தா ஸ்காட்லாந்துன்னு அவர் போகாத தேசம் இல்ல. எந்த நாட்ல இருக்கோம்னு ஏர் டிக்கெட்டை வச்சு தெரிஞ்சுக்குற அளவுக்கு சுத்தோ சுத்துன்னு சுத்தற அந்த இசைப்புயலுக்கு தென்காசியில் கேட்ட அந்த குரல் ரொம்பவே பிடிச்சுருக்கும். ஏனென்றால், கடவுளே கூட கண்ணப்பன்களைதானே ரசிக்கிறார்?

வழக்கம் போல அதிகாலை நாலு மணிக்கு தொழுகைக்கு கிளம்பிவிட்டார். குற்றாலத்திலிருந்து தென்காசி போற வழியில் இருக்கும் ஏதோ ஒரு மசூதி அது. இந்து மதத்தில் ஓம் என்ற மந்திரம் சொல்வோமே, அது போல குர் ஆனில் வரும் ஒரு வார்த்தையை முப்பதாயிரம் முறையெல்லாம் தொடர்ந்து உச்சரித்து மகிழ்வாராம் ரஹ்மான். அப்படிப்பட்டவருக்கு ஒரு மணி நேர தொழுகை ஒரு விஷயமே இல்லையல்லவா? தொழுகையை முடித்துவிட்டு அதிகாலை ஆறு மணிக்கு திரும்பிக் கொண்டிருந்தார்கள் அவரும் அவரது உதவியாளரும்.

வண்டி ஓரிடத்தில் வந்தபோதுதான் அவரது கண்ணில் பட்டது அந்த போர்டு. ‘திருநெல்வேலி ஐயர்வாள் ஓட்டல்’. ப்ளூ பெயிண்ட்டில் மின்னும் உயர்தர சைவ உணவகம் மாதிரியெல்லாம் நினைத்துக் கொள்ளக் கூடாது. ரெண்டு சவுக்கு கட்டைகளுக்கு மேல ஒரு பலகை. மற்ற ரெண்டு கட்டைகளுக்கு பதில் ஒரே உயரத்தில் அடுக்கப்பட்ட உடைந்து போன செங்கற்கள். அதுதான் டைனிங் டேபிள். உட்காருவதற்கு? முக்காலியே நாற்காலி. நாலு பேர் ஒரே நேரத்தில் சாப்பிட உட்கார்ந்தால், பக்கத்து இலை சாம்பார் நம்ம இலையை சைட் அடிக்கும்! இருந்தாலும் ரஹ்மானுக்கு அந்த ஓட்டல் பிடித்துப்போனது. ‘சூடா இட்லி கொடுங்க’ என்றபடி அமர்ந்தார். சாம்பாரின் சுவையும், அந்த அதிகாலை காற்றும், ஆங்காங்கே கேட்கும் சிட்டுக்குருவிகளின் சப்தமும், இன்னும் இரண்டு இட்லிகளை சேர்த்து உள்ளே இறக்கியது.

நடுவில் டீ வாங்க வந்த பையன் ஒருவன் ரஹ்மானை குறுகுறுவென பார்த்தபடியே இருந்தான். டீ யை வாங்கிக் கொண்டு அவன் கிளம்பிய பின்பு தனது ருசிக்கு தீனி போட்ட திருப்தியோடு எழுந்தார் ரஹ்மான். அதுவரைக்கும் கூட அவரை யாரென்று அறியாத காபி க்ளப் முதலாளி கண்ணும் கருத்துமாக ஆவி பறக்கும் இட்லியை கர்ம சிரத்தையாக ‘கம்போஸ்’ பண்ணிக் கொண்டிருந்தார். ஏதோ குற்றம் நடந்த உள்ளுணர்வில் சட்டென்று ரஹ்மான் சாப்பிட்டு விட்டு எழுந்த இடத்தை கவனித்தவர், ‘சார்… அந்த இலையை எடுத்து போட்ருங்க’ என்றார் கம்பீரமாக!

எழுபதாயிரம் அடி உயர ஓட்டல் மாடியில், ‘எக்ஸ்யூஸ்மீ’ மரியாதைகளோடும் கர்சீப் ஒத்தியெடுத்த வார்த்தைகளோடும் கவனிக்கப்பட்டே பழகிய ரஹ்மானுக்கு அந்த நிமிடம் இதழோரம் ஒரு புன்னகை அரும்பியது. ‘ஓ… ஸாரி’ என்றபடியே அந்த இலையை மடித்து, அதை மடிக்க தெரியாமல் தவித்து எப்படியோ கொண்டு போய் தொட்டியில் போட்டார். ‘இந்தாங்க…’ என்று ஆயிரம் ரூபாயை அவர் கையில் திணித்துவிட்டு ‘சில்லரை இல்லேன்னா பரவால்ல..,’ என்று புன்னகை சிந்திவிட்டு வெளியே வந்தால், அந்த ஊரே திரண்டு ஆச்சர்யமாக நோக்கிக் கொண்டிருந்தது அந்த ஓட்டலையும் உள்ளேயிருந்து வெளியே வந்த ரஹ்மானையும். எல்லாம் டீ வாங்க வந்த பையனின் லீலை.

எப்படியோ தப்பித்து ரஹ்மான் கிளம்பிய பிறகாவது, அந்த கிழிந்த இலையை கவலையோடு நோக்கியிருப்பாரா மிஸ்டர் முதலாளி?

(குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் ஆர்.எஸ்.அந்தணன் எழுதிய ‘கோடம்பாக்கம் செக் போஸ்ட்’ தொடரில் இருந்து…)

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
விஜய் ஆன்ட்டனி வளர்கிறார்! விநியோகஸ்தர் பெருமிதம்

விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன் ' படத்தின் மேல் உள்ள எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடி வருகிறது. நல்ல கதை அம்சம் உள்ள படம் என திரை உலகில்...

Close