அருள்நிதி கொடுத்த அறை? பேஸ்த் அடித்த ஷுட்டிங் ஸ்பாட்!
ஆடுற மாட்டை ஆடிக் கறக்கிற வித்தை தெரியாத எவருக்கும் நேர்கிற சங்கடம்தான் இது. அது புரியாமல் அட்வைஸ் செய்து வாங்கிக் கட்டிக் கொண்டாராம் ஒரு தயாரிப்பு நிர்வாகி. சம்பவம் நடந்த இடம் ‘நாலு போலீசும் நல்லாயிருந்த ஊரும்’ படப்பிடிப்புக் களம். அந்த ஏரியா மேற்படி சம்பவத்தினால் ஆடுகளம் ஆகி, அதற்கப்புறம் சூடு களமாக மாறி, கடைசியில் மவுன களம் ஆனதாம்.
ஆளுங்கட்சியாக இருந்தால் மட்டும்தான் வெற்றி என்றில்லாமல், எதிர்கட்சியாக இருக்கிற நேரத்திலும் ‘மவுனகுரு’ என்ற வெற்றி படத்தை தந்தவர் அருள்நிதி. கலைஞரின் பேரன் என்பது கூடுதல் தகுதி. வெள்ளந்தியாக பேசுகிற இடத்தில்தான் வெளுத்துக்கட்டுகிற கோபமும் இருக்கும் என்பதற்கு பெரிய உதாரணமே இவர்தான். இவர் நடிக்கும் ஒரு படத்திற்கு ‘பகல் கொள்ளை’ என்று தலைப்பு வைத்தார்களாம். ‘வேணாம்ப்பா… ஏற்கனவே எங்க பேமிலியை பற்றி தப்பு தப்பா பேசுறாங்க. இந்த தலைப்புல நான் நடிச்சா அவ்வளவுதான்’ என்று கூறி தலைப்பை மாற்ற வைத்தார் இவர். யாருக்கும் தெரியாத இந்த விஷயத்தை அவரே ஒரு பிரஸ்மீட்டில் சொல்லி, ‘அட இவரு இவ்வளவு வெள்ளந்தியா பேசுறாரேப்பா.’ என்கிற எண்ணத்தை ஏற்படுத்தினார் ஒருமுறை.
கட்… விஷயத்திற்கு வருவோம்.
‘எங்கிட்ட கால்ஷீட் வாங்குறது கஷ்டம் இல்ல. ஆனா என்னை சமாளிக்கறதுதான் ரொம்ப ரொம்ப கஷ்டம்’ என்று பலமுறை கூறி வந்திருக்கிறார் அவர். அதற்கேற்றார் போல அவரை தாஜா பண்ணியேதான் படப்பிடிப்பையும் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் மேற்படி படப்பிடிப்பில் தயாரிப்பு நிர்வாகியாக வேலை பார்க்கும் ஒருவர், சார்தான் நல்லா பேசுறாரே… என்ற சுதந்திரத்தை ‘நல்ல்ல்ல்ல்ல்லாவே’ பயன்படுத்துவதாக நினைத்துக் கொண்டு அருள்நிதிக்கு அட்வைஸ் மேல் அட்வைசாக கொடுத்தாராம். ‘நேரத்துக்கு ஷுட்டிங் வந்தால்தான் உருப்பட முடியும். உங்ககிட்ட அந்த குவாலிட்டிஸ் இல்லவே இல்லையே?’ என்றெல்லாம் அவர் அவர் வரம்பு மீற, வந்ததே கோபம் அருள்நிதிக்கு.
எவ்வித தயக்கத்திற்கும் இடமில்லாமல் கொடுக்க வேண்டியதை செமத்தியாக கொடுத்திருக்கிறார். இப்படியொரு சம்பவம் நடக்கும் என்பதை யூகிக்காத யூனிட், சற்றே பேஸ்த் அடித்துப்போனதாம். இப்பல்லாம் ஒழுங்கா நடக்குது எல்லாம். மேற்படி நிர்வாகிதான் அருள்நிதி பக்கமே செல்வதில்லை.