போக்கிரிராஜா வைத்த சூடு! பிய்த்துக் கொண்டு ஓடிய ஆர்யா!

பொல்லாதவன், படிக்காதவன், மாப்பிள்ளை என்று ஏற்கனவே ரஜினியின் பெருமைகளை அழித்து, அதில் தனுஷ் போஸ்டரை ஒட்டிவிட்டார்கள். மனிதன் என்ற ரஜினி படத்தின் தலைப்பை உதயநிதி அபேஸ் பண்ணிவிட்டார். தர்மதுரை தலைப்பை விஜய் சேதுபதி அபகரித்துவிட்டார். இப்படி ரஜினி பட தலைப்புகளாக தேடி தேடி வைத்தவர்களுக்கு, சரியான குத்தூசி கொண்டு சதக் சதக் ஆக்கிய பெருமை ஜீவாவையே சேரும். அவரது நடிப்பில் கடைசியாக வந்த ரஜினியின் தலைப்புப்படம் போக்கிரி ராஜா. ஐயோ பாவம்… வெறும் ‘பேக்கரி’ ராஜாவாக கூட இருக்கவில்லை அது.

அந்த படத்தின் படு தோல்விக்குப்பின் ரஜினி பட தலைப்புகள் என்றால், நாலு பேரிடம் விசாரித்து, ரெண்டு ஜோசியக் காரர்களிடம் கைரேகை பார்க்கும் பூதக்கண்ணாடி வாங்கி அலசி ஆராய்ந்து இறுதியாக ஒரு முடிவுக்கு வருகிறது திரையுலகம். என்னவென்று? ஐயோ சாமீய்… ரஜினி பட தலைப்பே வேணாம்ப்பா என்று!

ஆர்யா, தான் சம்பாதித்த பணத்தையெல்லாம் இதே சினிமாவில்தான் கொட்டி வருகிறார். நல்ல மனுஷன். சில படங்களை தயாரித்தும், சில படங்களை விநியோகம் செய்தும் உள்ளங்கையில் உலக்கையை இறக்கிக் கொண்டவர், இந்த முறை எடுத்திருக்கும் முடிவும்…? சொந்தப்படம்தான். வேறு வழியில்லை. ஏன்? அவரை வைத்துதான் படம் தயாரிக்க ஆளே இல்லையே? தன் கையிலிருக்கும் மிச்ச சொச்ச பணத்தை தனது ஆருயிர் நண்பன் ஜீவாவிடம் கொடுத்து அவர் நிறுவன பேனரிலேயே ஒரு படத்தை தயாரிக்க திட்டமிட்டிருக்கிறார். நண்பனுக்காக ஜீவாவே தயாரிப்பது போல வெளியில் பில்டப்.

இருக்கட்டும்… இந்த படத்திற்குதான் ‘தனிக்காட்டு ராஜா’ என்ற தலைப்பை கேட்டு வாங்கலாம் என்று நினைத்திருந்தார்களாம் இருவரும். ஒருகாலத்தில் ரஜினி நடித்த படங்களில் செம ஹிட்டான படம் இது. போக்கிரிராஜாவின் அனுபவம் இருவரையும் ஐயோ சாமீய் ஆக்கிவிட்டது. அந்த தலைப்பே வேணாம். அதுக்கு பதிலா ‘சும்மா, சோம்பேறி, வெட்டிப்பேச்சு, வெறுங்கை’ன்னு கூட வை என்று கூறிவிட்டாராம் ஆர்யா.

இப்படி நாலு பேரு மிரண்டால்தான் ரஜினி பட தலைப்புகள் தப்பிக்கும் போலிருக்கிறது!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தேவதையை தேடினோம் மியா ஜார்ஜ் கிடைத்தார்!

‘திருடன் போலீஸ்’ என்றொரு படம் வந்ததே.... அவ்வளவு சீக்கிரம் மறக்கக் கூடிய படமா அது? அப்படத்தின் வெற்றிக்குப்பின் அதே அக்கறையோடு கதை தேடிய கெனன்யா செல்வகுமாருக்கு கிடைத்தவர்தான்...

Close