அழகு குட்டிச் செல்லம் – விமர்சனம்
குழந்தைகளை வைத்துக் கொண்டு பெரியவர்களுக்காக கதை பண்ணுகிற பொறுப்பு, எவ்வளவு கனமானது! அந்த வெயிட்டை தனது தலையில் ஏற்றிக் கொண்டு, மிக லேசான சுமையை ரசிகர்களின் தலையில் இறக்கி வைத்திருக்கிறார் டைரக்டர் சார்லஸ்! படத்திற்குள் குட்டி குட்டியாய் சில நீதிக்கதைகள்! ஒவ்வொன்றும் அதன் இயல்போடு நீந்தி கிளைமாக்சில் சங்கமம் ஆவதுதான் திரைக்கதையின் கெட்டிக்காரத்தனம்!
குட்டிகள் என்ன பண்ணியிருக்கிறார்கள் பார்ப்போம்-
அது ஒரு கிறிஸ்தவப் பள்ளி. கல்வியை இலவசமாக வழங்கிக் கொண்டிருக்கும் அந்த பள்ளிக்கு ஒரு சிக்கல். அந்த வருடத்தோடு கிறிஸ்தவ அமைப்பு தரும் உதவித் தொகை நிறுத்தப்படுவதாக ஒரு ஷாக் தகவல்! அதை சமாளிக்கும் விதத்தில் ஆண்டு விழாவுக்கு வாடிகனிலிருந்து வரும் கார்டினலின் கவனம் ஈர்க்க ஒரு டிராமா ஏற்பாடு பண்ணுகிறார் பள்ளி தலைமை பாதிரியார். வேறொன்றுமில்லை… ஆண்டாண்டு காலமாக நடத்தப்பட்டு வரும் இயேசு பிறப்பு நாடகம்தான் அது. “நாங்க புதுசா ட்ரை பண்றோம்” என்று ஒரு குழந்தைகள் கோஷ்டியும், “பழைய டிராமாவையே நாங்க நடத்துறோம்” என்று வேறொரு குழந்தைகள் கோஷ்டியும் மல்லுக்கு நிற்க, “எங்க டிராமாவுல குழந்தை ஏசுவுக்கு பதிலாக நிஜக்குழந்தையே வரும்” என்கிறது புதுமை கோஷ்டி. அட.. என்று ஆச்சர்யமாகும் பாதிரியார் நாடக பொறுப்பை இவர்களிடம் ஒப்படைக்க, இவர்கள் பார்த்து வைத்திருந்த குழந்தை சரியாக டிராமா நடக்கும் நாளுக்கு முன் வேறு ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது.
குழந்தை வேண்டுமே? தவியாய் தவிக்கும் அவர்களுக்கு குப்பை தொட்டியில் ஒரு குழந்தை கிடைக்க, அதை கடத்துகிறார்கள். குப்பை தொட்டிக் குழந்தையை தேடி அதன் பெற்றோரும் போலீசும் வர, டிராமா நல்லபடியாக நடந்ததா? கார்டினல் மனம் குளிர்ந்ததா? என்பது க்ளைமாக்ஸ்.
ஒரு கதம்பத்தை இணைக்கும் நார்தான் மேற்படி கதை. அதில் கட்டப்பட்டிருக்கும் பூக்களின் மணம் வேறு வேறு. மூன்று பெண் குழந்தைகள் பிறந்த பின்பும், ஒரு ஆண் குழந்தைக்காக முயன்று முயன்று மனைவியை பிள்ளை பெறும் இயந்திரமாக்கும் கருணாஸ் பகுதி ஒன்று. அதில்தான் எத்தனையெத்தனை நேர்த்தி. நாலாவதும் பெண்ணாக பிறக்க, அதை குப்பைத்தொட்டியில் வீசிவிட்டு வரும் மனைவியை, போட்டு சாத்தும் கருணாஸ் நிஜத்திலேயே வலியெடுக்க உதைக்கிறார். ஐயோ பாவம் அவரது மனைவி. அவ்வளவு தத்ரூபமான நடிப்பு அவரிடம்.
இளம் வயது ஸ்பரிசத்தில் தன்னையே தொலைத்துவிடும் அந்த செஸ் வீரங்கனை கிருஷா, தன்னை ஏமாற்றிவிட்டு போனவனின் நினைவுகளோடு வைராக்கியத்துடன் பிள்ளை பெற்று உலக சாம்பியனான அவனையே செஸ்சில் வென்று நிற்பது கைதட்டலுக்குரிய எபிசோட்! இவளுக்கும் கருணாஸ் பேமிலிக்கும் ஒரு கனெக்ஷன் கொடுத்து கதையை சுபமாக முடிக்கும் இயக்குனருக்கு ஒரு ஸ்பெஷல் சபாஷ்.
மற்றொரு பிராமணக்குடும்பம், அவர்கள் வீட்டு கணவன் மனைவி பிரச்சனை. இன்னொரு ஈழத்தம்பதி. அவர்களின் குழந்தை இழப்பு என்று சற்றே அலுப்பூட்டுகிற குடும்ப கதைகளும் படத்தில் இருப்பதால் சட்டென்று விசு கால டிராமாவுக்கு தள்ளப்படுகிறது படம். நல்லவேளை… விரைவில் சுதாரித்துக் கொள்கிறார் இயக்குனர்.
அநாதை ஆசிரமம் நடத்திவரும் முருக பக்தர் தம்பி ராமய்யாவின் கேரக்டர் படத்தில் ஓங்கி தாங்கி நிற்கிறது. மிக சரியாக அதை பயன்படுத்திக் கொள்கிறார் அவரும். தம்பியின் அறிமுக காட்சியே அசத்தல்! வினோதினி, கருணாஸ், ரித்விகா, அகில், மற்றும் படத்தில் நடித்த அத்தனை குட்டீஸ்களுக்கும் பாராட்டுகள்.
டிராமா நடக்கும்போதே குழந்தை காணாமல் போய்விட, குழந்தைகள் அதை சமாளிக்கும் காட்சிகளும், கார்டினல் அந்த குழந்தையை ஏசுவாகவே நினைத்து கை கூப்பி வணங்கும் காட்சியையும் அவ்வளவு நேர பதற்றத்துக்கு போடப்பட்ட அருமருந்தாக எண்ணி கைதட்டி மகிழ்கிறது தியேட்டர்.
வேத்சங்கர் சுகவனத்தின் இசையில் பாடல்களில் அவ்வளவு இனிமை. மென்மை. சுகம். பின்னணி இசையிலும் பிரித்து மேய்ந்திருக்கிறார்.
படத்திற்குள் நாடகம் என்பதால், படமும் ஆங்காங்கே நாடகம் போல நகர்கிறது. எடிட்டிங்கில் கொஞ்சம் கை வைத்து தவிர்த்திருக்கலாம். மற்றபடி ‘கொஞ்ச வேண்டிய’ குட்டிச்செல்லம்தான்!
-ஆர்.எஸ்.அந்தணன்