அட்ஜஸ்ட் பண்ணிட்டு போங்க தம்பி! நயன்தாராவுக்காக ஒரு விசேஷ பல்டி!
முன்னாடி விழுற நிழலை வச்சே தலைக்கு பின்னாடி இருக்கிற லைட்டிங்ஸ்சில் கரெக்ஷன் சொல்வாராம் நடிகர் திலகம் சிவாஜிகணேசன். நடிப்பு மீது ஒரு அர்ப்பணிப்பு இல்லையென்றால், முகத்துல டார்ச் லைட் அடிச்சாலும், மூளைக்குள் சிக்னல் வராது என்பது கலையுலகம் கண்டு வரும் அன்றாட விஷயங்கள்தான். இங்குதான் ‘இப்படியும் ஒரு நடிகையா?’ என்று வியக்க வைக்கிறாராம் நயன்தாரா.
தன்னிடம் வேலை பார்த்த உதவி இயக்குனர் தாஸ் நாராயணசாமி இயக்கத்தில் களவாணி, வாகை சூடவா போன்ற அற்புதமான படங்களை இயக்கிய சற்குணம் ஒரு புதிய படத்தை தயாரித்து வருகிறார். அதில் நயன்தாராதான் ஹீரோயின். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை. இந்த படத்தின் ஷுட்டிங் துவங்கி இரண்டாம் நாளே சற்குணத்தை அழைத்தாராம் நயன்தாரா. “தாஸ் நல்லா கதை சொன்னாரு. ஆனால் அதை எப்படி எடுக்கறது என்பதில் அவருக்கு அனுபவம் போதல என்று என் மனசுக்கு தோணுது. அதனால் என் பேச்சை கொஞ்சம் கேட்க சொல்லுங்க. இந்த படத்தை பிரமாதமா கொண்டு வந்துடலாம். மாயா படத்திலேயும் எனக்கு அப்படியொரு அனுபவம்தான் ஏற்பட்டுச்சு. அதற்கப்புறம் நான் சொன்னதை புரிஞ்சுகிட்டு டைரக்டர் ஒத்துழைச்சார்”.
“ஸ்பாட்ல நான் சொன்னதை கேட்டுதான் ஷாட்டே வச்சாங்க. இப்பவும் டைரக்ஷன்ல நான் மூக்கை நுழைக்கிறேன்னு நினைக்காம, என்னை அவர் தொழில்ல தலையிடுறதுக்கு அனுமதி மட்டும் கொடுங்க” என்றாராம். சுளை முக்கியமா, தோல் முக்கியமா என்று ஒரு நிமிஷம் யோசித்த சற்குணம், “உங்களுக்கு முழு சுதந்திரமும் உண்டு. நீங்களே கூட டைரக்ட் பண்ணுங்க. படம் நல்லா வரணும்னுதானே நீங்க நினைக்கிறீங்க. அது நல்ல விஷயம்தான்” என்று சொல்லியதுடன், தாஸ் நாராயணசாமியை அழைத்து, நயன்தாரா சொல்றதை கேட்டு அதன்படி நடங்க என்று கூறியிருக்கிறாராம். டைரக்டருக்குதான் இப்போது லேசான உதறல்.
எப்படியோ, நயன்தாராவே இயக்கத்தை கவனிக்க நல்லபடியாக போய் கொண்டிருக்கிறதாம் படப்பிடிப்பு.