கொடுக்காத பனிஷ்மென்ட் கொடுக்கப் போறேன். வெயிட் அண்ட் ஸீ மை பாய்ஸ்!
“திராட்சையை புதைச்சுட்டு ஒயினா எடுக்கிறீயே? உன்னால ஒரு ஒயின் பாட்டிலை புதைச்சுட்டு திராட்சையா எடுக்க முடியுமா? ஆ ஹை… ஆ ஹை…” என்று குதித்துக் கொண்டிருந்தார் ஒரு குடிமகன்! எதிரில் இவரை போலவே இன்னொரு தத்துவ மேதை. இருவருமே குடித்திருந்தார்கள். இரு குடிகாரர்களின் பேச்சை சற்றே தொலைவில் நின்று கேட்டு ரசிப்பதை விட சுவாரஸ்யமானது உலகத்தில் இல்லை. சில நேரங்களில் அதைவிட சுவாரஸ்யமாக இருக்கும் பல இலக்கியவாதிகளின் பேச்சும் அரசியல்வாதிகளின் பேச்சும்.
நாஞ்சில் சம்பத் கண்ணை மூடி மூடி திறந்து ரகசியம் போல கீச்சு குரலில் பேசுவார். திடீரென குரலை உயர்த்தி உச்சஸ்தாயில் முழங்குவார். அவர் ரகசியம் சொல்லும் போது காதை குவித்தும், ஆவேசப்படுகிற போது காதை மூடியும், அவரது பேச்சின் பின்னாலேயே போய் தன்னிலை மறந்து இன்னொரு வீட்டின் கதவை தட்டி தர்ம அடி வாங்குகிற தொண்டனெல்லாம் இன்னும் இருக்கிறான். வைகோ பேச ஆரம்பித்தால், பீரங்கியிலிருந்து ஏழெட்டு பற்கள் பிடுங்கிக் கொண்டு வெளியே வீசப்பட்டாலும் ஆச்சர்யமில்லை. ‘எதற்கும் மூக்கு கண்ணாடிய கழட்டி பையில வச்சுருவோம்’ என்று பின்வாங்குகிற தொண்டர்களும் உண்டு. ‘மலையெது? கடலெது? அலையெது? நதியெது? சகலமும் உனதொரு கருணையில் வருவது…. முருகாவ்… முருகாவ்…’ டைப்பான சொற்பொழிவுகள்தான் அவையெல்லாம்!
இலக்கியவாதிகளில் பெரியார்தாசனின் பேச்சு இருக்கிறதே… புல் மப்பு ஏறுவதற்கு முன் புரோட்டாவும், கோழி குருமாவும் கண்ணெதிரே வைக்கப்பட்டால் ஒரு இன்பம் வயிற்றிலும் நாக்கிலும் ஒருசேர ஊறுமே, அதற்கு நிகரானது அது! நம் வீட்டு திண்ணையில் உட்கார்ந்து கொண்டு நமது தோளில் கை போட்டுக் கொள்கிற நெருக்கம் இருக்கும் அதில். ஒருமுறை கவியரசு வைரமுத்து பெரியார்தாசன் பற்றி இப்படி சொன்னார்.
“ஒருவன் பால் வாங்கிக் கொண்டு சென்று கொண்டிருந்தான். பெரியார்தாசன் பேசிக் கொண்டிருப்பதை கேட்டு அப்படியே நின்று விட்டான். எவ்வளவு நேரம் தெரியுமா? அந்த பால் தயிராகிற வரைக்கும்…!” அவ்வளவு நேரம் பேசக்கூடியவர் பெரியார்தாசன். நீண்ட நேரம் என்பது பிரச்சனையில்லை. அவ்வளவு நேரமும் சுவாரஸ்யமாக பேசக்கூடியவர்! ஒரு சினிமா விழாவில் அப்படிதான் பேசிக் கொண்டிருந்தார். ஆனால் அங்கு பால் தயிராகவில்லை. அந்த பால் அப்படியே கிரிக்கெட் ‘பால்’ போல கெட்டியானது. அதற்கப்புறம் நடந்ததெல்லாம் தேவனின் திருச்சபையில் தேங்கா உடைஞ்ச கதை!
ரோஜா படத்தின் 100 வது நாள் விழா. வாழ்த்த வந்திருந்தார் பெரியார்தாசன். அவரது வலது கையை திடீரென பெண்ணாக பாவித்துக் கொண்டார். இடது கையை திடீரென ஆணாக பாவித்துக் கொண்டார். ஒரு கையை அப்படியே மேலே எடுத்து வைத்துக் கொண்டு, ‘இது பெண்…. இதற்குள் ஒரு ஆண் இருக்கிறான். அப்படியே கையை லபக்கென்று மாற்றி, இவன் ஒரு ஆண். இவனுக்குள் ஒரு பெண் இருக்கிறாள்’ என்றெல்லாம் பேச்சும் ஆக்ஷனுமாக ரோஜா படத்தில் வரும் ஹீரோ, ஹீரோயின்களை வர்ணித்துக் கொண்டிருந்தார். பேச்சை அதோடு முடித்துக் கொண்டு கிளம்பினால் பிரச்சனையேயில்லை.
இயக்குனர் இமயம் பாரதிராஜாவை வம்புக்கு இழுத்ததுதான் பிரச்சனை. “எங்க மணிரத்னமும் படம் எடுத்துருக்கார். பாரதிராஜான்னு ஒருத்தர் இருக்கார். அவரும் ஒரு படம் எடுத்துருக்கார். கேப்டன் மகள்னு. ரோஜாவுல இருக்குற கருத்து ஒன் படத்துல இருக்கா?” என்று வெற்றிலையை குப்புற போட்டு அதன் மீது சுண்ணாம்பை தடவ தடவ, அங்கிருந்த பாரதிராஜாவின் ரசிகர்களுக்கும், சில உதவி இயக்குனர்களுக்கும் முகம் சிவப்பாகிக் கொண்டே வந்தது. இனியும் பொறுப்பது சரியல்ல என்று எழுந்து கொண்ட உதவி இயக்குனர்கள் பலர், வெளியே ஓடி வந்து தெருமுனைக்கு சென்று பாரதிராஜாவுக்கு பப்ளிக் பூத்திலிருந்து போன் அடித்து பெரியார்தாசனை பற்றி குமுற குமுற கொப்பளித்துக் கொண்டிருந்தார்கள்.
வாசலில் பெரியார்தாசனின் பேச்சுக்கு எதிராக ஒரு கும்பலும் திரண்டுவிட்டது. ‘அந்தாளு வெளியே வரும்போது வென்னீர் வச்சுட வேண்டியதுதான்’ என்கிற அளவுக்கு கோப ராஜாக்கள் ஆகியிருந்தார்கள் ஒவ்வொருவரும். ஆனால் பாரதிராஜா, “என் இனிய கலவர மக்களே… கோவத்தை கொஞ்சம் தள்ளிப் போடுங்க…” என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டார். தள்ளிப் போடுங்க என்பது தற்போதைய சூட்டை குறைக்கும் எண்ணத்தில்தான். இப்போது கூட்டம் அங்கிருந்து கலைந்தால் போதும். மற்றதை நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் என்பது அவரது எண்ணம்.
தலைவர் இப்படி சொல்லிட்டாரே? என்று கவலையால் கதி கலங்கிய பாதி பேர், அவரது அலுவலகத்துக்கே சென்று பொறுக்க மாட்டாமல் கூவி கூப்பாடு போட்டார்கள். “அந்தாள விடக் கூடாதுங்க. ஒரு வார்த்தை உம்- னு சொல்லுங்க. வீட்டை விட்டு வெளியில் கிளம்ப முடியாதளவுக்கு கால உடைச்சுடுறோம். வேணும்னா வாயவும் தைச்சுடுறோம்” என்று கோணி ஊசியும் நூல் கண்டுமாக குதித்தார்கள். அப்போதுதான் கையிலிருந்த கிளாசை கீழே வைத்துவிட்டு ‘வாயை துடைத்துக் கொண்டு’ பேச ஆரம்பித்தார் பாரதிராஜா.
“யேய்… ஆல் தி கைஸ். சும்மாயிருங்கடா. எனக்கு வராத கோபம் உங்களுக்கு வந்துருச்சா? ஐ ஆம் வெரி ஆங்கிரி வித் யூ. பிக்காஸ் ஆஃப் யுவர் எமோஷன். டோண்ட் பி சில்லி. ஒரு தமிழன் இன்னொரு தமிழனை மதிக்கிறானோ இல்லையோ? தமிழிலக்கியத்தை ஹானர் டூ பி ஆல். பட் எல்லாத்துக்கும் தண்டனை இருக்கு” என்று தனக்கேயுரிய தங்கிலீஷால் தாலாட்ட, “நம் ஞானத்தகப்பன் என்னவோ சொல்ல வர்றார்யா… விடுய்யா” என்று ஆனார்கள் எல்லாரும்.
“அந்தாளோட போன் நம்பரை வாங்கு. அப்புறம் வாட்ச் இன் பியூச்சர், வாட் ஐ வில் டூ திஸ் கேம்னு…” என்று அவர் கூறிக் கொண்டிருக்க, அதற்குள் நாலாபுறமும் ஓடியிருந்தார்கள் அசிஸ்டென்ட்ஸ். எல்லாம் போன் நம்பர் கலெக்ட் பண்ணுவதற்காகதான். “நம்பர் கிடைச்சதும் போன் பண்ணி வரச்சொல்லுவாரு. ரூம்ல விட்டு பொளப்பாரு” என்கிற எண்ணம் மட்டும் எல்லார் மனசிலும் இருந்தது. துணி துவைக்கிற கல்லுல தலை வச்சு படுத்தாக் கூட நங்கு நங்குன்னு ஒரு சப்தம் வரும்ல? இப்போ எல்லார் மண்டைக்குள்ளூம் அந்த சப்தம் கேட்டுக் கொண்டிருந்தது.
முதலில் நம்பர் கொடுக்கிற அசிஸ்டென்ட் பாரதிராஜாவின் பாக்கெட்டுக்குள்ளேயே போய் விடலாம். அப்படியே உள்ளேயிருந்து சுரண்டினால் நேரடியா மனசுதான். அப்படியொரு வெறித்தனமான ‘பொசசிவ்நஸ்’ எட்டிப்பார்க்க, விறுவிறுவென பறந்தார்கள். பாய்ந்தார்கள். இறுதியில் ஒருவர் கொண்டு வந்து நம்பரை கொடுக்க, “தேங்ஸ் மை சைல்ட். நான் பார்த்துக்குறேன்” என்று கூலான ட்ரிங்ஸ்சை மீண்டும் கையில் எடுப்பதோடு அந்த எபிசோடுக்கு ஒரு என்ட் கார்டு போட்டார் ராஜா.
மறுநாளே அந்த தீ மிதி திருவிழா நடந்தது. அசிஸ்டென்ட்டுகள் வெளியில் நின்று பேசிக் கொண்டிருந்தபோதுதான் அந்த ஆட்டோ வந்து நின்றது. “ஓட்டுனர் தம்பி… காத்திருப்பா. போய்விடாதே. இவன் மீண்டும் வருவான்” என்று கூறிக் கொண்டே அதிலிருந்து இறங்கினார் பெரியார்தாசன். ஆஹா… வெட்டிரும்பை தேடி வெட்டுக்கிளியே வந்திருச்சே என்று வியந்தார்கள் அசிஸ்டென்ட்ஸ். “சார் சரியாதானே இருக்காரு. சாப்பிடாம கீப்பிடாம இருந்துடப் போறாரு?’ என்று இன்னொருவர் டவுட் கிளப்ப, “சார் வெறும் வயித்தோட இல்லை” என்பதை இன்னொரு அசிஸ்டென்ட் கன்பார்ம் செய்தார்.
உள்ளே போனார் பெரியார்தாசன். அரை மணி நேரம் ஆகியிருந்தது. ஒரு மணி நேரம் ஆகியிருந்தது. போனவர் வரவேயில்லை. ஆனால் இப்போது உள்ளேயிருந்து ஒரு தேம்பல் சப்தம் மட்டும் மெலிசாக கேட்க ஆரம்பிக்க, கதவோரத்தில் காதுகளை வைத்திருந்த அத்தனை அசிஸ்டென்டுகளுக்கும் ஆனந்தம். “தலைவர் வுட்டு பொளக்குறாரு போல. எங்க தகப்பனையா அப்படியொரு பப்ளிக் மேடையில் வச்சு அசிங்கப்படுத்துன? நாங்க கொடுக்க வேண்டிய அடியை எங்க தகப்பன் கொடுக்கிறாரு. வாங்கிக்கோ” என்று பொருமினார்கள்.
சில நிமிஷங்களில் கண்ணீரை துடைத்துக் கொண்டே வெளியே வந்தார் பெரியார்தாசன். விழுந்திச்சா… விழுந்திச்சா… என்று மனசளவில் குஷியான அசிஸ்டென்டுகள், ‘அடிவாங்குன பெரியார்தாசனே இப்படி கதறி அழுது ஓடுறார்னா அடிச்சாரே நம்ம சார். அவரு எவ்ளோ டயர்டா இருப்பாரு?’ என்று உள்ளே ஓடுவதற்கு ஆவலானார்கள். இந்த நேரத்தில் அந்த விடுகதையை அவிழ்த்துவிட்டு ஆட்டோ ஏறினார் பெரியார்தாசன். போகிற நேரத்தில் கதவிடுக்கு வழியாக பாரதிராஜாவிடம், “இரண்டு மாசம் லீவ் போட்டுடுறேன். எப்ப வேணும்னாலும் கூப்பிடுங்க” என்று கூற, “வரச்சொல்லி வரச்சொல்லி அடிப்பாரோ?” என்று இன்னும் குஷியானது அசிஸ்டென்ட் ஏரியா.
உள்ளே போனால் பலத்த அதிர்ச்சி. “அந்தாளுக்கு யாரும் கொடுக்காத பனிஷ்மென்ட் கொடுக்கப் போறேன். வெயிட் அண்ட் ஸீ மை பாய்ஸ்…” என்று சிரித்துக் கொண்டே எழுந்தார் பாரதிராஜா. அவர் கண்கள் கோவை பழமாக சிவந்திருந்தன. அது கோபத்தால் வந்தது மட்டும்தானா என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை அவர்களால்.
நாட்கள் ஓடின…
கருத்தம்மா படத்தின் முதல் நாள் ஷுட்டிங். அத்தனை பேருக்கும் அங்கு வைத்துதான் அல்வா மூட்டையை அவிழ்த்தார் இயக்குனர் இமயம். அன்னைக்கு பெரியார்தாசன் அழுதுகொண்டே ஓடியது நம்ம ஞானத்தகப்பனிடம் அடிவாங்கிக் கொண்டு இல்லையா? என்ற தெளிவுக்கு வந்திருந்தார்கள் எல்லாரும்.
இடுப்பில் ஒரு கோவணத்தை மட்டும் அணிந்து கொண்டு நின்றிருந்தார் பெரியார்தாசன். சுற்றிலும் பல்லாயிரக்கணக்கான ஜனங்கள் ஷுட்டிங்கை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, மெல்ல தன் உதவியாளர்களிடம், “எப்பிடிடா பனிஷ்மென்ட்?” என்றார் ராசா.
அந்த மேடையில் ‘டங்க் ஸ்லிப்’ ஆக எது காரணமாக இருந்ததோ, அதுதான் அன்று அவரை வெட்கம் மறந்து கோவணத்தோடும் நிற்க வைத்திருந்தது. ஆசைக்கும் பாஷைக்கும் கூட வெட்கமுண்டு. ஆஃபுக்கும் புஃல்லுக்கும் எது?
(ஜனனம் இதழில் ஆர்.எஸ்.அந்தணன் எழுதிவரும் மாலை நேரத்து மயக்கம் தொடரிலிருந்து)
MENTAL GUYS.