புரட்சித்தலைவர் சேரன்?

ஒரு நூறு கேள்விகளுக்கு அசராமல் பதிலளித்துவிட்டு, ‘இன்னும் ஏதாவது கேள்விகள் இருக்கா?’ என்றும் டைரக்டர் சேரன் கேட்டபோது இண்டு இடுக்கு நண்டு நட்டு கேள்விகளால் அவரை மடக்கிய நிருபர்கள் ‘அக்கடா’ என்று ஓய்ந்திருந்தார்கள். நினைத்தது போல எல்லாம் சரியாக நடந்தால் தமிழ் சினிமாவுலகத்தில் பெரும் புரட்சியை விதைக்கப் போகும் C2H நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்த பிரஸ்மீட்டில்தான் இப்படியொரு கேள்வி பதில் மழை!

‘படம் வாங்க ஆளில்லை. தியேட்டரில் நேரடியாக ரிலீஸ் செய்தால் பணம் அம்போ. எல்லா ஏரியாவையும் வித்து படம் எடுத்தேன். ஒரு ஏரியா கூட விற்கலையே?’ என்றெல்லாம் புலம்பி வந்த தமிழ்சினிமா தயாரிப்பாளர்களுக்கு விடிவு காலம் பிறந்திருக்கிறது சேரனின் C2H ரூபத்தில். 5.1 ஒலி தரத்துடன் தியேட்டரில் ரிலீஸ் ஆகிற அதே தினத்தில் புதுப்படங்களின் டிவிடி யை வீடு வீடாக விற்பனை செய்ய தமிழகம் முழுக்க முகவர்களை தயார் படுத்திவிட்டார் சேரன். இப்படி சுமார் 5000 டீலர்கள் இருக்கிறார்களாம். அவர்களுக்கு கீழே பல்லாயிரக்கணக்கான சப் டீலர்கள் அமைக்கப்பட்டிருக்க, ஒரு டி.வி.டி ஐம்பது ரூபாய் விலையில் ஜனவரி 15 ந் தேதி முதல் விற்பனையை துவக்குகிறது C2H. முதல் படமாக சேரன் இயக்கிய ‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’ வெளியாகிறது.

இது போல வாரம் ஒரு தரமான படத்தை வெளியிடப் போகிறார் சேரன். காமா சோமா படங்களை யாரும் ஐம்பது ரூபாய் கொடுத்து வாங்க மாட்டார்கள் என்பது சேரனுக்கு தெரியாதா என்ன? பத்து பேர் கொண்ட குழுவை படம் பார்ப்பதற்காகவே நியமித்திருக்கிறார் அவர். இதில் பல்வேறு தரப்பை சேர்ந்த அனுபவசாலிகள் இருக்கிறார்கள். இவர்கள் ‘டிக்’ முத்திரை கொடுக்கும் படங்களை மட்டுமே ரிலீஸ் செய்யப் போகிறார் அவர். எதிர்காலத்தில் ‘அட… இது நல்லாயிருக்கே’ என்று பெரிய ஹீரோக்கள் படங்களையும் தயாரிப்பாளர்கள் இங்கு வெளியிட முன் வந்தால் இப்போது ஐம்பது ரூபாய்க்கு விற்கப்படும் தரமான டி.வி.டி தனது விலையை சற்றே ஏற்றிக் கொள்ளுமாம்.

இப்படி டிவிடி விற்பவர்கள் சீலை உடைத்து அவர்களே திருட்டு சிடி தயாரித்தால்? அது வேறொரு டி.விடியில் பதிவாகாது. அதுமட்டுமல்ல, ஒரு டி.வி.டி விற்கப்படும்போதே அதன் மீது எழுதப்பட்டிருக்கும் கோட் நம்பர் தலைமை அலுவலகத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் கம்ப்யூட்டரில் பதிவாகிவிடுமாம். இப்படி பாதுகாப்புக்காக மட்டும் பல பூட்டுகளை உருவாக்கியிருக்கிறது சேரனின் டெக்னிகல் டீம். சுமார் ஆறு மாத காலம் தனித்தனியாக வீடு வீடாக சர்வே எடுத்து அதற்கப்புறம்தான் அவர்களின் தேவைகளை உணர்ந்து இப்படியொரு சிஸ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறார் சேரன். முகவர்கள் அந்தந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் கேபிளில் ஒளிபரப்பினாலும் இவர்களுக்கு தெரிந்துவிடும். எனவே அதே ஊரில் திருட்டு விசிடி விற்கப்படுவதும் கேபிளில் திருட்டுத்தனமாக விற்கப்படுவதும் தடுக்கப்படுமாம்.

‘இந்த வார C2H சினிமா’ என்று இவர்களே தங்கள் செலவில் செய்தித் தாள்கள், தொலைக்காட்சிகள், இணையதளங்கள், போஸ்டர்கள் மூலம் கன கம்பீரமாக விளம்பரமும் செய்துவிடுவதால் தயாரிப்பாளருக்கு மேலும் அதிர்ஷ்டம். ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை தொடங்கி ஜெய் நடித்த அர்ஜுனன் காதலி, அட்டகத்தி தினேஷ் நடித்த வாராயோ வெண்ணிலவே என்று சுமார் 25 படங்கள் இப்பவே ரெடி.

ஜனவரி பதினைஞ்சே… சீக்கிரம் வா. ஒரு புரட்சியின் முதல் காலடியை தரிசிக்க வேண்டும்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
க்ரவுட் பண்டிங்கை ஆரம்பிச்சு வச்சதே பாரதியார்தான்! இயக்குனர் கரு.பழனியப்பன் தந்த சுவாரஸ்யமான தகவல்

இயக்குனர்கள் முத்துராமலிங்கன், ஜெய்லானி இணைந்து முயலும் மூவி ஃபண்டிங் நெட்வொர்க் சினிமா பற்றி அதிகம் சொல்ல தேவையில்லை. தேவையான அளவுக்கு நமது இணையத்தில் ஏற்கனவே தெரிவித்தாயிற்று. கால்...

Close