அப்புறம்…? க்ளுக்கென சிரித்தாள் வேலைக்காரி!
குனிந்து
நிமிர்ந்து
வாசலை
பெருக்கினாள்.
வாசல் சுத்தமாச்சு….
அப்புறம்…?
க்ளுக்கென சிரித்தாள் வேலைக்காரி!
கல்யாண்ஜி சார்… உங்க கவிதையின் கடைசி வரியை ‘வைரஸ் அட்டாக்’ பண்ணியதற்கு காரணம் வேறு யாருமல்ல. அந்த ஹீரோதான்! சமயங்களில் அவரே ஒரு ‘ஆன்ட்டி’ வைரஸ்தான்!
ஒருமுறை அவர் வீட்டுக்கு பேட்டியெடுக்க போயிருந்தார்கள் வானொலி பண்பலை நிருபர்கள் சிலர். காலை பத்து மணிக்கு அப்பாயின்ட்மென்ட்! நேரத்தை வாங்கிக் கொடுத்தவர் ஹீரோவின் செய்தி தொடர்பாளர். அந்த நம்பிக்கையில் சரியாக பத்து மணிக்கு ரீச் ஆனவர்கள், ஹாலில் காத்திருக்கும் போதுதான் வீடு பெருக்கிக் கொண்டிருந்தார் அந்த இளம் வேலைக்காரி.
‘கொஞ்சம் காலை எடுத்துக்கங்க… ஆமா, யார பார்க்க வந்திருக்கீங்க?’ வேலைக்காரியின் எதிர்பார்ப்பு, ‘ஐயாவா? அம்மாவா?’ மட்டும்தான். ஏனென்றால் அந்த ரெண்டு பேருமே கூட சினிமா பிரமுகர்கள். அதிலும் அய்யா இருக்கிறாரே, சினிமாவில் சகலமும் அறிந்தவர். மகன்? யாரையும் மதிப்பவரில்லை. வந்திருக்கும் ஆட்களும் அவரை பார்க்க வந்தவர்கள் போலில்லை. அதனால்தான் அந்த கேள்வி.
ஹீரோ வரச்சொல்லியிருந்தாரு. அதான்…
எத்தனை மணிக்கு? -இது வேலைக்காரி.
பத்து மணிக்கு. ஏன்?
அதற்கப்புறம் அந்த இளம்பெண் பேசவில்லை. சிறுகதைகளில் எழுதுவார்களே, ‘க்ளுக்கென சிரித்தாள்’ என்று! வாயை பொத்திக் கொண்டு அப்படியொரு சிரிப்பு சிரித்துவிட்டு அறையை கூட்ட ஆரம்பித்தாள். நள்ளிரவில் காகம் கத்தினால், அதன் கூட்டுக்குள் ஆந்தை ‘அன்வான்டட் என்ட்ரி’ கொடுத்துவிட்டதாக அர்த்தம். இந்த க்ளுக் சிரிப்புக்கு என்ன அர்த்தம்?
வாத்து முட்டையிலிருந்து வாதாங்கொட்டை வரைக்கும் வானத்திற்கு கீழிருக்கும் எல்லா ஐட்டங்களை பற்றியும் அலசி மகிழ்விக்கும் எப்.எம் காரர்களுக்கு, அந்த ‘க்ளுக்’கின் அர்த்தம் அப்போது புரியவில்லை. மாடிப்படியை பார்ப்பதும் வாட்சை பார்ப்பதுமாக நேரம் ஓடிக் கொண்டிருக்க, காலை அரும்பி பகலெல்லாம் ‘போர்’ராகி மாலை மயங்கும் நேரமே கூட வந்துவிட்டது.
அலுவலகத்திற்கு சொல்லியாச்சு. பேட்டியில்லாமல் போனால், இரண்டு காதுக்கும் வேட்டு சப்தம் நிச்சயம். அதுவும் திருவிழா நேரம் அது. ஹீரோ கிடைத்தால் அவரிடம் முதல் காதல் தோல்வியை பற்றி கேட்கலாம். இரண்டாம் காதல் தோல்வியை பற்றி கேட்கலாம். நடுவில் வந்து வந்து போன சின்ன சின்ன ‘லவ்ஸ்’ பற்றி கேட்கலாம். ஏன் உங்க படமெல்லாம் நாலு வருஷத்துக்கு ஒரு முறை வருது? என்று கேட்கலாம். ‘வந்தாலும் ஓட மாட்டேங்குதே’ என்று கூட நாசுக்காக கேட்டு விடலாம். சினிமாவுல எவ்ளோ பேரு கிசுகிசுவுல சிக்குறாங்க. ஆனா, உங்ககிட்ட மட்டும் வண்டி வண்டியா குப்பை அள்றாங்களே, அது ஏன்னு கேட்கலாம். இப்படி ஒரு நூறு ‘லாம்’களை வைத்துக் கொண்டு இவர்கள் காத்திருந்தார்கள். அதேநேரத்தில் காய்ந்த மாடு வைக்கோல் போரை பார்த்த மாதிரி ஓடிக் கொண்டிருந்தது கடிகாரம்.
நல்லவேளை… கொழுத்த மதியானத்தில் யாரோ வந்தார்கள். ‘ஓ…தம்பிக்காக காத்திருக்கீங்களா?’ என்று கேட்டு ஆளுக்கு இரண்டு வடைகளை தந்து பசியாற்றினார்கள். கை அகல வடையின் வட்டம் வயிற்றுக்குள் புள்ளியாகிற நேரத்தில், காலையில் சிரிச்ச அதே வேலைக்காரி, மீண்டும் வீடு கூட்ட வந்திருந்தாள்.
இந்த முறை ஒரு கொஸ்டீனும் இல்லை. பைட் மேன் ஜஸ்டீனுக்கு எதுக்குய்யா மார்பின் அளவு? அதான் பளிச்சுன்னு தெரியுறளவுக்கு முறம் மாதிரி விரிஞ்சு கெடக்குதே! ஆனால் பொல்லாத வேலைக்காரி… இந்த முறையும் உதட்டை ஒரு கையால் இறுக மூடிக் கொண்டு ஒரு ‘க்ளுக்’ சிரிப்பை தவழ விட்டுவிட்டு கிளம்ப… இவர்களுக்கு இப்போது உதறலே வந்துவிட்டது. காலையில சிரிச்சதுக்கே, சாயங்காலம் ஆகிருச்சு. இதுல மீண்டும் ரிப்பீட் பண்றாளேய்யா… என்றானார்கள்.
எப்படியோ…
ஆறு மணிக்கு ஆற அமர மாடிப்படியில் இறங்கி வந்த ஹீரோ, ‘ஓ… நீங்க வந்துட்டீங்களா?’ என்றார். கண்களில் உறக்கம் சொக்கி நின்றது. ‘காலையிலயே வந்துட்டோம். ஒரு பகல் முழுக்க உங்களுக்காகதான் காத்திருக்கோம்’ என்றார்கள். பாறாங்கல்லில் கூட எக்ஸ்பிரஷன் பார்த்துவிடலாம். பாவம்… அந்த முகத்தில் எதுவும் தென்படவில்லை. ‘என்ன பேசணும்?’ என்றார் அசுவாரஸ்யமாக. ‘பேட்டி சார். பொங்கல் ஸ்பெஷல்’ என்றார்கள். ‘பொங்கலா? ம்… வந்துர்றேன்’. என்று முகம் கழுவ போனவர் அதற்கப்புறம் ஒரு பொங்கல் பானை வெந்து முடிகிற நேரத்தில் திரும்பி வந்தார். ஐந்தே நிமிடத்தில் முடிந்தது பேட்டி. ‘என்னென்னவோ கேட்கணும்னு நினைச்சோம். போதும்னுட்டாரே…’ என்றபடி கலைந்தார்கள். அன்றைய தினப்பலனில் எல்லா ராசிக்கும் ஒரே பலன்தான், சந்திராஷ்டமம்!
மல்லாக்கொட்டைய தின்னுட்டு கர்லா கட்டைய சுத்துனாலும், ஓமக்குச்சி நரசிம்மன்கள் ஒரு போதும் பயில்வான் ஆக முடியாது! நம்ம ஹீரோவின் மார்க்கெட்டும் கிட்டதட்ட அந்த லெவலுக்குதான் போய்விட்டது. இருந்தாலும் நேரத்திற்கொரு குரோட்டன்ஸ்… வாரத்திற்கொரு பூந்தொட்டி என்று பூந்தோட்ட காவல்காரனாக ஓடிக் கொண்டிருக்கிறது வாழ்க்கை. நம்ம ஹீரோவின் ‘நேரந்தவறாமை’ கொள்கையில் சிக்கியவர்களில், அந்த எப்.எம் காரர்கள் தேவலாம். இந்திய சினிமாவின் மிக முக்கியமான ஒளிப்பதிவாளர் ஒருவருக்கு இவரால் நெஞ்சு வலியே வந்துவிட்டது. ஓப்பன் ஹார்ட் சர்ஜரி நேரத்தில் இதயத்தின் உள்ளேயிருந்து நம்ம ஹீரோவின் படத்தை எடுத்து வெளியே போட்டிருந்தால் அது மருத்துவ அதிசயமாக இருந்திருக்கும். நல்லவேளை… அப்படியெல்லாம் நடக்கவில்லை.
கோவாவில் ஷுட்டிங்! அந்த படத்தில் கமிட் ஆகும்போதே, ‘அந்த ஹீரோவா? நேரத்துக்கு ஷுட்டிங் வர மாட்டாரே. எனக்கு மூணு மாசத்துக்கு மேல ஒரு படத்தை ஒளிப்பதிவு செஞ்சு பழக்கமில்ல. இவர்ட்ட மாட்டுனா மூணு வருஷம் கூட ஆகிரும். அதனால் விட்ருங்க’ என்று ஓடினார் ஒளிப்பதிவாளர். தனது உழைப்பை எப்டியிலோ, ‘ஆர்டி’யிலோ போடணும் என்று நினைக்கிற மனுஷன். கெஞ்சி கூத்தாடி அவரை சம்மதிக்க வைத்திருந்தார்கள். ‘அவரு முன்ன மாதிரியில்ல. ஒன்பது மணிக்கு சொன்னா பத்து மணிக்காவது வந்துருவாரு…’ என்று உத்தரவாதமும் கொடுத்திருந்தார்கள்.
காலையில் எட்டு மணிக்கே ஷுட்டிங்குக்கு தயாராகிவிட்ட கேமிராமேன், லைட்டுகளை செட் பண்ணிவிட்டு ஹீரோவுக்காக காத்திருக்க ஆரம்பித்தார். மணியோசை முன்னாலேயே வருவதற்கு அவர் என்ன யானையா? ஒரு ஓசையும் வரவில்லை. நேரா நேரத்திற்கு ஜுஸ், லஞ்ச், வடை, போண்டா, காபி, வறுத்த வேர்க்கடலை என்று திங்கிற ஐட்டங்கள் மட்டும் வந்து கொண்டேயிருந்தது. ஆனால் ஹீரோதான் வரவேயில்லை. முதல் நாள் ஷுட்டிங். யாரும் எந்த வேலையும் பார்க்காமல் இனிதே கழிய… அந்த இரவு முழுக்க புரண்டு புரண்டு படுத்தார் கேமிராமேன்.
அடுத்த நாள்… அதற்கடுத்த நாள்… அப்புறமும் ஒரு நாள்… என்று நான்கு நாட்கள் அசால்ட்டாக ஓடிவிட, கேமிராமேனின் எல்லா நரம்புகளும் மெனக்கெட்டு அவரது முகத்திற்கு கொண்டு வந்திருந்தது உடம்பிலிருக்கிற அத்தனை ரத்தத்தையும். ‘என்னய்யா நடக்குது இங்க? அந்த பையன் வர்றாரான்னு கேளுங்க. இல்லேன்னா என்னைய விட்ருங்க’ என்று கூப்பாடு போட, எங்கிருந்தோ கெஞ்சி கூத்தாடி கொண்டு வந்திருந்தார்கள் ஹீரோவை. அதற்குள் அவரே ஒரு ஐடியா கொடுத்ததாக ஆள் வந்து சொன்னார். ‘பகல்ல வைக்கிற ஷுட்டிங்கை நைட்ல வைங்க. லைட்டிங் பகல்ல இருப்பது மாதிரி இருக்கட்டும்’.
எப்படியோ? கொழுக்கட்டை வெந்தாகணுமே? இரவை பகல் போல லைட் செட் பண்ணினார் கேமிராமேன். ஆற அமர எட்டு மணிக்கு வந்து சேர்ந்த ஹீரோ, நடிக்க ஆரம்பித்தார். கோவா இன்னும் கொஞ்சம் குளிராவதை போல உணர்ந்தார்கள் எல்லாரும். அதற்குள், எந்த எருமை மாட்டு ஆவி ஹீரோவின் மனசுக்குள் புகுந்ததோ? ‘மூட் இல்ல. எல்லாம் பேக்கப் பண்ணிக்கங்க. இதை லண்டன்ல எடுத்துக்கலாம்’. சொல்லிவிட்டு யார் பதிலுக்காகவும் காத்திருக்கவில்லை. விறுவிறுவென காருக்குள் ஏறிவிட்டார்.
மொத்த யூனிட்டும் மூச்சடைத்து நிற்க, நிஜமாகவே மூச்சடைத்தது ஒளிப்பதிவாளருக்கு. ‘ஐயோ… ’என்று நெஞ்சை பிடித்துக் கொண்டு சாய்ந்தவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அதற்கப்புறம் அவர் உயிர் தப்பியது ஆண்டவன் புண்ணியம்.
ஷுட்டிங் நின்ற பின் சும்மாயிருக்குமா மீடியா? ஏன் ஏனென்று கேட்க ஆரம்பித்தார்கள். எழுதினார்கள். ‘ஏன்யா… என்னென்னவோ எழுதுறானுங்க. பேசாம ரஜினி சார் மாதிரி உத்ராஞ்சல், ரிஷிகேஷ்னு ஒரு ட்ரிப் அடிச்சுரலாமா?’ என்றார் ஹீரோ. படத்தை முதல் பிரதி அடிப்படையில் தயாரித்தவர் சிரிப்பு நடிகர் ஒருவர். அவரிடம்தான் இந்த யோசனை. ஒரு கேமிராமேனையும் அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்கள் உடனே.
காவி உடையோடு இவர்கள் எடுத்துக் கொண்ட போட்டோக்கள், எதார்த்தமாக இணையதளங்களில் கசிந்தன. (அட… ஆன்மீக ட்ரிப் போட்டோவையுமா அவரு ஸ்டைல்ல கசிய விடணும், நேரடியாகவே வெளியிடலாமே?) ‘ஆன்மீக பாதையில் ஹீரோ’ என்று பத்திரிகைகள் வரிந்து கட்டிக் கொண்டன. நிஜத்தில் இவர்கள் அங்கு சாமியா கும்பிட்டார்கள்? ம்ஹூம், மிதந்தார்கள்.
அதெப்படி தெரியும்? கரணம் தப்பியிருந்தா, வயித்துல சூரணம்தாண்டீய்… என்று அவர்கள் கூடவே போன ஸ்டில் கேமிராமேன் கதறியிருந்தார் ஒரு சினிமா கம்பெனியில். என்னவாம்? மிதந்தவர் மிதக்கிறவரை ‘அனுபவித்துவிட்டு’ கிளம்ப வேண்டியதுதானே? சிறிதளவு தாவர இலையை இவரிடம் கொடுத்து, ‘ஏர்போர்ட்ல பிடிப்பானுங்க. பேசாம உன் கேமிராவை தொறந்து அதுல சொருகி வச்சுக்கோ. மெட்ராஸ் வந்து கொடு’ என்றாராம். இவரும் கேமிராவுக்குள் ஒளித்து வைத்துக் கொண்டே கிளம்பினார் ஏர்போர்ட்டுக்கு. நல்லவேளை… நடுவழியிலேயே நடுக்கம் வந்து அதை அப்படியே உருவி சாலையோரத்தில் எறிந்துவிட்டு விமான நிலையத்தினுள் என்ட்ரி. கரெக்டாக கேமிராவை பிரி என்றார்களாம் அதிகாரிகள்.
கரணம் தப்புச்சு. காமிராவும் தப்புச்சு. கேமிராமேனும் தப்பினார்.
அவர் தப்பினார். ஆனால் நம்ம ஹீரோ அண் பிரண்ட்சின் போலி ஆன்மீகத்தால் அவர்கள் கால் பட்ட உத்ராஞ்சல் ரிஷிகேஷ் தப்பிக்கவேயில்லை. என்னாச்சுன்னுதான் உலகத்திற்கே தெரியுமே? அந்த வெள்ளம் எப்போது வடிந்தது என்பது முக்கியமில்லை. எப்போது வந்தது?
உற்சவர்கள் ஊர் வந்து சேர்ந்தார்கள் அல்லவா? அதற்கடுத்த நாள்தான்…
(குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் ஆர்.எஸ்.அந்தணன் எழுதிய கோடம்பாக்கம் செக்போஸ்ட் தொடரிலிருந்து….)
அந்தணன் சார், நான் உங்க எழுத்துக்கு ரசிகன். இங்கு நீங்க எழுதியிருக்கும் ஸ்டைல் நல்லாருக்கு ஆனா ஏன் சார் ஒருத்தரை பத்தி இப்படி இல்லாததும் பொல்லாததுமா எழுதுறீங்க? அப்படி என்ன சார் அவர் மேலே உங்களுக்கு வெறுப்பு? சமீபத்தில் கூட ஒரு பட விழாவில் மிகவும் வருத்த பட்டு பேசினார். நீங்கள் சொல்வது போல் அவர் ஒன்றும் பெரிய சோம்பேறி மாதிரியோ, கொடுமைக்கார ஆள் மாதிரியோ தெரியல சார்.தயவு செய்து இனிமே இப்படி எழுதாதிங்க, பாவம் சார் அந்த பையன், உங்களுக்கு ஏன் அந்த பாவம். நல்ல இருக்கட்டும் சார் அவரு. அதே சமயம் அவரும் தன்னிடம் ஏதும் தவறுகள் இருப்பின் திருத்திக்கொண்டு எல்லாரும் மதிக்கும் படி நடந்துகொள்ள வேண்டும். நன்றி.