முதல்வனே… வனே… வனே…? அதிர்ச்சியுடன் திரும்பிய சினிமாக்காரர்கள்
திருட்டு விசிடி க்கு எதிராக உப்பு சத்யாகிரக போராட்டம் நடத்தியே தீருவது என்று முழு மூச்சுடன் கிளம்பிவிட்டது தமிழ் திரையுலகம். ‘எவன் போட்ட முதலீட்டை, எவன் சுருட்டி தின்பது?’ என்கிற அவர்களது கேள்விக்கு ஒருவரும் மறுப்பு சொல்லவே முடியாது. ‘அதனால்தான் அதை சட்ட பூர்வமாக்குங்கன்னு சொல்றேன்’ என்று நடுவில் சேரன் புகுந்து கதறினாலும், அவரது திட்டம் வேறு. எங்களது திட்டம் வேறு என்கிற முடிவோடு கிளம்பியிருக்கிறார்கள் மற்ற மற்ற தயாரிப்பாளர்களும் நடிகர்களும். வருகிற 2 ந் தேதி மொத்த திரையுலகமும் பேரணி போராட்டம் என்று தலைநகரத்தை அதிர வைக்கப் போகிறார்கள்.
நல்லதே நடக்கட்டும்! அதே நேரத்தில் இன்னொரு சம்பவத்தை கேட்டால் உள்ளம் பதறி உள் மூச்சு பிசிறடிக்கும் போலிருக்கிறது. அண்டை மாநிலமான பாண்டிச்சேரியில்தான் இந்த திருட்டு விசிடி தயாரிக்கும் பணியே கன ஜோராக நடக்கிறதாம். அது மட்டுமல்ல, அங்குள்ள மார்க்கெட்டுகளில் எவ்வித லஜ்ஜையும் இல்லாமல் கூவி கூவி விற்கிறார்கள் புதுப்பட சிடிகளை. பாண்டிச்சேரி அரசு நினைத்தாலொழிய இதை கட்டுப்படுத்த முடியாது என்று கருதிய நடிகர் சங்கம் சில உறுப்பினர்களுடன் பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்திக்க விழைந்தது. நடிகர் ராதாரவி தலைமையில் சிலர் நேரடியாக அவரை சந்தித்தார்களாம்.
அப்போது நடந்ததை கேட்டால்தான் அல்சர் வருகிற அளவுக்கு சிரிப்ஸ்! பொறுமையாக அவரிடம் பேசியவர்கள், உங்க மாநிலத்துல திருட்டு விசிடிக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இல்லை. அதனால் இங்கு திருடுற வேலையை ஈஸியா செய்யுறாங்க. நீங்கதான் மனசு வச்சு கட்டுப்படுத்தணும் என்றார்களாம். உடனே போனை சுழற்றி ஒரு முக்கியமான நபரிடம் பேசினாராம் முதல்வர். ம்… அப்படியா…? வேற… சொல்லு… அடடா… என்று ஏகப்பட்ட உணர்ச்சிகளை போனில் கொட்டியவர், போனை வைத்துவிட்டு இவர்களிடம் சொன்ன பதில்தான் சொரேர் சொரேர்…
‘ஏன் சார். நீங்க இப்படி சொல்றீங்க. அவங்க பெரிய பெரிய மெஷின்லாம் வச்சு செய்யுறாங்களாமே? கடன ஒடன வாங்கிற நிறைய முதலீடு பண்ணியிருக்கங்களாமே? கிட்டதட்ட ஏழாயிரம் குடும்பம் இந்த தொழிலை நம்பி இருக்குதாமே? பாவம்… ஏதோ ஒரு தொழில் செஞ்சு பிழைக்கிறாங்க. பிழைச்சுட்டு போகட்டுமே’ என்றாராம்.
சந்தோஷமா சந்தனத்தை தடவுவாருன்னு போனா, அலங்கோலமா ஆட்டு ரத்தம் பூசிட்டாரே என்று கதிகலங்கி திரும்பினார்களாம்! வௌங்கிரும்…!
மொதல்ல இவனுக கதை திருடறத நிறுத்திட்டு அப்பறம் விசிடி திருட்டப் பத்தி பேசட்டும்.