விஜய் சேதுபதி மீது புகார் அவரது பதில்தான் என்ன?
சுமார் அரை டஜன் படங்களில் நடிக்க சைன் பண்ணிவிட்டு, நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. அவர் நடித்த படத்திற்கே அவரால் டப்பிங் பேச நேரமில்லாதபடி இருக்கிறது அவரது ஓட்டம் ஓட்டம். இந்த நேரத்தில், உங்க மேல புகார் வந்திருக்கு. கொஞ்சம் வந்து விளக்கம் கொடுக்கிறீங்களா என்று தயாரிப்பாளர் சங்கம் அழைத்தால், போக தயார்தான். ஆனால் அந்த அரை நாளில் ரெண்டு சீனாவாது நடித்துக் கொடுக்கலாமே என்ற நினைப்புதானே வரும்? இருந்தாலும் இந்த குடைச்சலை விரும்பி வாங்கிக் கொண்டவர் என்பதால், அவராச்சு, புகாராச்சு, விளக்கமாச்சு!
சரி, புகார் கொடுத்தவர் யாராம்? வசந்தகுமாரன் என்ற படத்தை தயாரித்து வரும் ஸ்டூடியோ 9 தயாரிப்பாளர்தான். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேசி அட்வான்சும் கொடுத்திருந்தார்களாம். இது நடந்தது விஜய் சேதுபதியின் ஆரம்பகால ஹிட் நேரத்தில். அதற்கப்புறம் மார்க்கெட்டில் ஜல்லியை ஸ்டிராங்காக கலந்து உசந்து நிற்கிறார் அவர். இப்போது சேதுபதியின் சம்பளம் சுமார் நாலு கோடி என்கிறது சினிமா வட்டாரம். இந்த நேரத்தில் முதலில் பேசி அவர் ஒப்புக் கொண்ட ஒரு கோடிக்கே நடித்து தர வேண்டும் என்கிறாராம் அட்வான்ஸ் கொடுத்த தயாரிப்பாளர்.
ஆனால் விஜய் சேதுபதியின் ரீயாக்ஷ்ன் என்ன? கால்ஷீட்டும் தருவதில்லை, சம்பளத்தை அதிகமா கொடுங்க என்றும் கேட்கவில்லை. எப்போது தேதி கேட்டாலும் பிஸியா இருக்கேன். பிறகு பார்க்கலாம் என்று சொல்லிக் கொண்டேயிருக்கிறாராம். முடிவா சொன்னால்தானே அடுத்த கட்டத்திற்கு போக முடியும் என்கிறாராம் தயாரிப்பாளர்.
பங்கு சந்தைய விட பலமான யாவாரமா இருக்கே?