காக்கா முட்டை சிறுவர்களின் படிப்பு செலவை ஏற்ற தனுஷ்! எல்லா விருதுகளையும் விட பெரிய விருதே இதுதாண்டா தம்பிகளா…!

‘கொடி கட்டி பறக்குதடா, காலம் குடிசைக்கு பொறக்குதுடா… வாடா, குப்பத்து ராஜா’ என்பவரில்லை நம்ம மணிகண்டன்! ஆனால் அவரே இயக்கி அவரே ஒளிப்பதிவு செய்த ‘காக்கா முட்டை’ படம் சென்னை குடிசைவாழ் பகுதி மக்களை பற்றியது. இப்படியொரு கதையை எழுத வேண்டும் என்று முடிவெடுத்தார். அதை எழுதியும் முடித்துவிட்டார். அதற்கப்புறம்தான் அவருக்குள்ளிருந்த சிக்ஸ்த் சென்ஸ் கேள்வி கேட்டதாம்… ப்ரோ, குப்பத்துக்கே போகாமல் அவங்க லைஃப்பை எப்படிய்யா எடுப்பே? என்று.

அதற்கப்புறம் தினந்தோறும் குப்பத்திற்கு செல்ல ஆரம்பித்துவிட்டார். அங்கு அவர் பார்த்த ரமேஷ், விக்னேஷ் என்ற இரு சிறுவர்கள்தான் படத்தின் ஜீவ நாடி. அவ்விரு குழந்தைகளுக்கும்தான் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான மத்திய அரசின் விருதும் கிடைத்திருக்கிறது. அந்த ஒரு விருது மட்டும்தானா? உலகத்தில் எங்கெல்லாம் பட விழாக்கள் நடக்கிறதோ, அங்கெல்லாம் போய் வருகிறது காக்கா முட்டை. தனியாக வேறு சொல்ல வேண்டுமா? எல்லா இடத்திலும் காக்கா முட்டைக்கு செம அப்ளாஸ். கூடவே விருதுகளும்!

அவ்விரண்டு சிறுவர்களுக்கும் அம்மாவாக நடித்திருக்கிறார் விஜய்சேதுபதியுடன் பல படங்களில் இணைந்து நடித்து அவருடன் கிசுகிசுக்கப்பட்ட ஐஸ்வர்யா ராஜேஷ். ‘ஒரு சீன்ல நான் என் குழந்தையை கட்டிப்பிடிக்கணும். ஆனால் அவன் கிட்ட வரவே மாட்டேங்குறான். அதற்கப்புறம் நானே அவனிடம், டேய்… நான் உன் அம்மாடா என்றெல்லாம் கன்வின்ஸ் பண்ணி மூணு மணி நேரம் கழிச்சுதுதான் அந்த சீன் எடுக்க முடிஞ்சுது’ என்றார் அவர்.

தேசிய விருது கிடைத்தது பற்றியெல்லாம் பெரிய ஆச்சர்யங்கள் இல்லை ரமேஷ், விக்னேஷ் இருவருக்கும்! ‘டேய்… உங்களை பிளைட்ல அழைச்சிட்டு டெல்லி போக போறேண்டா’ என்றாராம் டைரக்டர் மணிகண்டன். அவ்வளவுதான்… அவர்களுக்குள் பிளைட் பற்றிய அச்சமும் பயமும்தான் வாட்டி எடுத்ததாம். ‘எப்படியோ… பறந்து போய் விருது வாங்கிட்டு வந்து சேர்ந்துட்டோம்’ என்றார்கள் கோரஸாக. விருதை வாங்கிக் கொண்டு விழா அரங்கத்தை விட்டு வெளியே வந்த இருவரும், யாருண்ணா அது? நமக்கு விருது கொடுத்தது? என்று கேட்டதுதான் பயங்கரமான கேள்வி! நல்லவேளை… இப்போது ‘பிரணாப்ஜி’ என்று சொல்லுகிற அளவுக்கு அவர்களை தேற்றியிருக்கிறார் டைரக்டர் மணிகண்டன்.

காக்கா முட்டை கதையை கேட்கும்போதே இது தேசிய விருதுகளை குவிக்கும் என்பதை அறிந்து கொண்ட படத்தின் தயாரிப்பாளர் டைரக்டர் வெற்றிமாறனும், நடிகர் தனுஷும், ‘படத்தை அவசரப்பட்டு ரிலீஸ் பண்ண வேணாம். எல்லா விருதுகளையும் ஒரு ரவுண்டு வாங்கிட்டு வந்துடட்டும்… அதற்கப்புறம் ரிலீஸ் பண்ணிக்கலாம்’ என்றார்களாம். சொன்ன மாதிரி ஒரு டஜனுக்கும் மேற்பட்ட விருதுகளோடு நிற்கிறார் மணிகண்டன்.

இன்னும் சில வாரங்களில் படம் ரிலீஸ். இந்த படத்தில் நடித்து, காக்கா முட்டைக்கே கவுரவம் சேர்த்த அந்த இரு சிறுவர்களுக்கும் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் தனுஷ். அவங்க எவ்வளவு படிக்கணும்னு நினைக்கிறாங்களோ, அதுவரைக்கும் அவங்க படிப்புக்கான செலவு என்னோடது என்றார்.

எல்லா விருதுகளையும் விட பெரிய விருதே இதுதாண்டா தம்பிகளா…!

Read previous post:
இது அடுத்த கடமை! ஆஸ்கர் ரவிச்சந்திரனை காப்பாற்றுகிறார் ரஜினி?

இன்னும் செரிக்கவேயில்லை. அதற்குள் இன்னொரு கடப்பாரை பக்கோடாவா? இப்படியொரு அதிர்ச்சி கோடம்பாக்கத்தை சுற்றி சுற்றி வருகிறது. அதுவும் நேற்று காலையிலிருந்தே..... வேறொன்றுமில்லை, அட்டக்கத்தி ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி...

Close