ஆன்ட்ரியா, ரம்யா நம்பீசன், லட்சுமிமேனன் பாட்டு! இசையமைப்பாளரின் எசப்பாட்டு!

காக்கா குரலா இருந்தாலும், அதையும் ‘சோக்காக்கீதுப்பா..’ என்று கூறுகிற ரசிகர்கள் பெருகிவிட்டார்கள். அதன் விளைவு? இங்கு முறையாக பயிற்சி பெறாதவர்கள் கூட பாட ஆரம்பித்துவிட்டார்கள். அதிலும் இப்போதைக்கு ஒரு டிரண்ட் வந்திருக்கிறது. பிரபலமான நடிகைகளை பாட வைத்துவிடுவதுதான் அந்த டிரென்ட்! சமீபத்தில் நடிகை ரம்யா நம்பீசன் பாடிய ‘ஃபைவ் ஃபைவ்’ பாடல் பட்டி தொட்டியெல்லாம் ஹிட். இதற்கு காரணம் அவரது குரல் அல்ல என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ட்யூன் அழகாக அமைத்ததால்தான் அந்த பாடலுக்கு அவ்வளவு மவுசு. ஆனால் அத்தனை கிரடிட்டும் எனக்குதான் என்பதை போல, தாறுமாறாக சம்பளம் கேட்க ஆரம்பித்துவிட்டார் ரம்யா நம்பீசன். அவர் மட்டுமல்ல, பாடிக் கொண்டிருக்கும் அத்தனை நடிகைகளும்.

இப்போது லட்சுமிமேனனையும் பாட வைக்கப் போகிறார் டி.இமான். இப்படி நடிகைகளை பாட வைப்பதில் என்ன லாபம்? என்ன நஷ்டம்? லாபம் ரசிகர்களுக்கு. அந்த பாடல் எப்படியிருந்தாலும், அதை கேட்டுத் தொலைகிற பாக்கியத்தை இயற்கையிலேயே வரமாக பெற்றவர்கள் அவர்கள். ஆனால் தொழில் முறை பாடகர்களுக்கு? பெருத்த நஷ்டம். முன்னணி தொலைக்காட்சிகளில் நடுவர்களாக அமரும் இந்த பாடகிகள், ஒரு முணுக் சப்தத்தை கூட எவ்வளவு துல்லியமாக கிரகித்து, இந்த இடத்தில் இது தப்பு என்று சொல்கிறார்கள் என்றால், அந்த சங்கீதத்தையும் அதன் பாட முறைகளையும் அவர்கள் எந்தளவுக்கு கரைத்து குடித்திருக்க வேண்டும்? ஆனால் இவை எதுவும் இல்லாமலேயே பாடுவதுடன், முறையான கர்நாடக சங்கீதம் கற்ற அந்த பாடகிகளின் வாய்ப்பையும் தட்டிப்பறிக்கும் ஹீரோயின்களுக்கு எதிராக முதல் கணையை வீசியிருக்கிறார் பிரபல இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன்.

படங்களில் நடிகைகளை பாட வைக்கும் போக்கு அதிகரிக்கிறது. ஆனால் நான் அவர்களை பாட வைக்க மாட்டேன். நடிகைகளுக்கு தமிழ் டப்பிங் பேசவே தெரியவில்லை. வேறு டப்பிங் கலைஞர் ஒருவர் குரல் கொடுக்கிறார். இவர்கள் தமிழ் பாடல்கள் பாடினால் எப்படி இருக்கும். நவீன தொழில் நுட்பத்தில் அவர்களை பாட வைத்து விடலாம். ஆனாலும் அப்பாடலில் ஜீவன் இருக்காது என்கிறார் எஸ்.எஸ்.குமரன்.

புதுப் புது குரல்களை தேர்வு செய்து இனி பாடுவதற்கு வாய்ப்பளிக்கப் போகிறேன் என்று கூறியிருக்கிற குமரன், முதல் கட்டமாக www.sskumaranvoicebank.com என்ற ஒரு இணையதளத்தை துவங்கப் போகிறாராம். விரைவில் அதில் தங்களை பதிவு செய்துகொண்டு பாட முன் வருகிறவர்களுக்கு வாய்ப்பளிக்க திட்டமிட்டிருக்கிறார். இது முற்றிலும் இலவசமானது என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

பூ, களவாணி, தேநீர் விடுதி, கேரள நாட்டிளம் பெண்களுடனே என்று பாடல்களுக்கு பெயர் பெற்ற படங்களில் இசையமைத்த குமரனின் இந்த சேவை, தமிழ் கடித்து குதறாமல் பாடும் அறிமுக பாடகர்களுக்கு அவசியமோ அவசியம்! ரெடி… ஸ்டார்ட்… மியூசிக்!

சுவாரஸ்யமான குறிப்பு- இது தொடர்பாக பிரஸ்சை மீட் பண்ணிய எஸ்.எஸ்.குமரன், ‘நடிகை ஆன்ட்ரியாவை பெரிய பாடகி என்கிறார்களே… அவர் பாடிய பாடல் ஒன்றை யோசிக்காம ரெண்டு வரி பாடுங்க பார்ப்போம்’ என்றார். அத்தனை பேரும் பேய் முழி முழிக்க, ‘அதான்…’ என்று கூறி அந்த பிரஸ்மீட்டை நிறைவு செய்தார் .

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தமன்னா சினிமாவின் மச்சமா? மிச்சமா?

என்னதான் உள்ளூர்ல பூ விற்றாலும், டவுன்ல போய் முழம் போடணும் என்கிற ஆசை இல்லாத நடிகைகளே இருக்க முடியாது. தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் தெரிந்த நடிகை ஆகிவிட்டால்...

Close