‘குடல உருவனுமா டைரக்டரே? ’ கூப்பாடு போடும் தயாரிப்பாளர்
தான் இயக்கிய இரண்டரை மணி நேர படத்தை பற்றி மூன்று மணி நேரம் பேசியே அறுக்கும் இயக்குனர்களை அடிக்கடி பார்த்து வருகிறார்கள் சினிமா பத்திரிகையாளர்கள். அண்மையில் ‘பிரம்மன்’ பட இயக்குனர் அப்படத்தின் பிரஸ்மீட்டில் சுமார் இரண்டு மணி நேரம் இடைவிடாமல் பேசி, சில நேரங்களில் தேம்பி தேம்பி அழுது அந்த பிரஸ்மீட் ஹாலையே தலை தெறிக்க ஓட வைத்தார். இப்படி அதிகம் பேசும் இயக்குனர்கள் குக்கர் அரை விசில் அடிக்கும் போதே அடுப்பிலிருந்து இறக்கி வைத்து பந்தி பரிமாறுகிற கொடுமைக்கு பல உதாரணங்கள் இங்கே உண்டு. வால்மீகி என்றொரு படம் வந்தது. அப்படத்தின் பிரஸ்மீட்டில் மைக்கை பிடித்த இயக்குனர், யாரோ ஒரு அப்பாவி தீயணைப்பு துறைக்கு போன் செய்து ‘காப்பாத்துங்க காப்பாத்துங்க’ என்று கதறிய பிறகுதான் நிறுத்தினார். அந்த படத்தின் ரிசல்ட்? நாடறிந்ததே!
சில இயக்குனர்கள் தங்கள் ஆத்திரத்தை பேச்சில் காட்டாமல் எல்லாவற்றையும் படத்தில் காட்டுவார்கள். 22 ரீல்களுக்கும் குறையாமல் எடுத்து, ரசிகர்களுக்கு ‘வரும்போதே டிபன் கட்டிட்டு வந்திருக்கலாமோ’ என்கிற எண்ணத்தை எற்படுத்திவிடுகிறார்கள். ஒரு படம் அதிகபட்சமாக இரண்டேகால் மணி நேரம் ஓடினால் போதும் என்கிற உணர்வே அவர்களுக்கு வருவதில்லை.
இப்போது ‘ஜிகிர்தண்டா’ பற்றியும் ஒரு தகவல் உலவுகிறது கோடம்பாக்கத்தில். படம் இரண்டு மணி நேரம் ஐம்பது நிமிஷம் ஓடுகிறதாம். என்னதான் சுவாரஸ்யமாக இருந்தாலும், அவ்வளவு பெரிய படத்தை பார்த்து முடிக்கிற பொறுமை ரசிகர்களுக்கு வருமா என்று தயாரிப்பாளர் தவிக்கிறார். ஆனால் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஒரு காட்சியை கூட கட் பண்ண மாட்டேன் என்கிறாராம். அதிலும் படத்தில் கத்தியால் ஒருவரின் வயிற்றை குத்தி குடலை உருவுவது போல காட்சி இருக்கிறதாம். இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்திருக்கிறது சென்சார். படத்திற்கு ஏ தான் தருவோம் என்கிறார்களாம். இப்போதெல்லாம் ஏ வோ, யூ வோ. வரிவிலக்கு கிடைப்பதில்லை என்றாலும், படத்தை தொலைக்காட்சி உரிமைக்காக விற்கும் போது இந்த ஏ வந்து ஏகத்திற்கும் இடைஞ்சல் பண்ணுகிறதாம். அதனால் அந்த குடலை உருவுற காட்சியை படத்திலிருந்தே உருவுங்களேன் என்று தயாரிப்பாளர் கேட்க, படைப்பாளியோட உரிமையில தலையிடாதீங்க என்கிறாராம் கார்த்திக் சுப்புராஜ்.
இவர் தயாரிப்பாளர் சங்கத்திலும், அவர் இயக்குனர் சங்கத்திலும் முறையிட்டிருக்கிறார்கள். பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கிறது.
ஜிகிர் தண்டான்னு பேரு வச்சுட்டு இப்படி பகீர் தண்டா பண்றீங்களே சுப்பு?