அருண் விஜய்யை சிக்க வைத்த பார்ட்டி! (மேலும் போட்டோக்கள் உள்ளே)
ஆடு, மாடு, காடை, கவுதாரி என்று தமிழ்நாட்டில் எல்லா ஜீவராசிகளும், ‘குடி(?)யிருந்த கோவிலின் ஆயுள்சந்தா உறுப்பினர்கள் ஆகிவிட்ட பின், ஐயோ பாவம்… அருண் விஜய் மட்டும் என்ன குற்றம் செய்தார்? அவரும் புல் மப்பு ஏற்றிக் கொண்டு வந்து போலீஸ் வாகனத்தின் பின் பக்கத்தை மோத, இரு காருக்கும் சேதம். அதைவிட பெரும் சேதம், அருண் விஜய்யின் இமேஜூக்குதான். நாள் முழுக்க பேஸ்புக் வாட்ஸ் ஆப், மற்றும் இணையதளங்களில் அருண்விஜய்யின் புகழ்தான்!
வெள்ளிக்கிழமை மாலை பிரபல நட்சத்திர ஓட்டலில், நடிகை ராதிகா சரத்குமாரின் மகள் திருமண வரவேற்பு நடந்தது. இதில் தமிழ்சினிமாவின் முக்கால்வாசி நட்சத்திரங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய கையோடு, பார்ட்டிக்குள் ஐக்கியமாகிவிட்டார்கள். இரு கண்களிலும் போதை வழிய ஒருவரை ஓருவர் முட்டுக் கொடுத்தபடி செல்ஃபி எடுத்துக் கொண்டார்கள். சிரித்தார்கள். குதித்தார்கள். கும்மாளமிட்டார்கள். எல்லாம் சரி… இப்படியொரு பார்ட்டி நடக்கும் என்று தெரிந்தே அங்கு வந்தவர்களில் பலர், தங்களது டிரைவரையும் காரில் காத்திருக்க வைக்க வேண்டும் அல்லவா? அங்குதான் பிரச்சனை.
அருண்விஜய் அவ்வளவு முட்ட முட்ட குடித்துவிட்டு காரை ஓட்டி வந்தாராம். வழியில் நுங்கம்பாக்கத்தில் காவலுக்கு நின்ற போலீஸ் வாகனத்தில் இவரது கார் மோத, பதறியடித்துக் கொண்டு ஓடி வந்து பார்த்தால், காரில் இவர். நிதானத்தில் இல்லாதபோது, சிவனே வந்தாலும், சிவனே என்றா இருக்கும் நாக்கு? இவர் ஏதோ பேச, கோபத்தில் உட்கார வைத்துவிட்டதாம் போலீஸ். அதற்கப்புறம் காலையில் அருண்விஜய்யின் அப்பா விஜயகுமார் வந்து மகனை மீட்டிருக்கிறார்.
ஆனால் நீதிபதியிடம் அழைத்துச் செல்லும் போது அருண் விஜய் காரிலிருந்து தப்பி ஓடிவிட்டதாக இன்னொரு தகவலும் கசிகிறது. இந்த நிமிஷம் வரைக்கும் பிரச்சனை முடிவுக்கு வரவில்லை என்றும் தெரிகிறது. எப்படியோ, தன் அரசியல் செல்வாக்கை கொண்டு மகனை முற்றிலும் மீட்டுவிடுவார் விஜயகுமார். ஆனால் அதே இடத்தில் சில உயிர்கள் போயிருந்தால்?
அன்பிற்குரிய நடிகர் நடிகைகளே… பல கோடிகள் புரள்கிற அளவுக்கு வசதி கொண்ட நீங்கள், இதுபோன்ற இடங்களுக்கு செல்லும்போது ஒரு டிரைவர் வைத்துக் கொள்ளுங்களேன்…. யாருக்கும் பிரச்சனையில்லாமல் போகுமல்லவா?
To listen the audio click below ;-
https://www.youtube.com/watch?v=0buff1M18BQ&feature=youtu.be