ஈட்டி விமர்சனம்

குண்டூசி கிழித்தால் கூட கோவிந்தாதான்! அதுவும் ஆழக் கிழித்தால் ஆளே காலி! அப்படியொரு வித்தியாசமான வியாதியுள்ள ஒருவனுக்கு ஊரிலிருக்கிற ‘உலக்கை வெட்டு’ ஆசாமிகள் எதிரியாய் வந்தால் என்னாவான்? இந்த ஒரு வரிக் கதைக்குள் தன் முகவரியை பதித்திருக்கிறார் அறிமுக இயக்குனர் ரவி அரசு! வரும்போதே அருவாளோட வந்தாலும், குங்குமம் வச்சு ‘குலவை’ பாட்றோம்ணே… பின்னிட்டீங்க!

என்னமோ ஒரு இங்கிலீஷ் பெயரெல்லாம் வைத்து ஒரு வியாதியை பற்றி ஆரம்பத்தில் பேசிக் கொண்டேயிருக்கிறது டாக்டர் கூட்டம். கட்ட கடைசியில், ‘சின்ன வயசு அதர்வாவுக்கு உடம்பில் லேசாக எந்த காயம் பட்டு ரத்தம் வர ஆரம்பித்தாலும் அது உறையாது. நிற்காமல் வழிந்து கொண்டேயிருக்கும். அதற்கு என்ன பண்ணுவது? அவரை பூப்போல பாதுகாத்து வளர்ப்பதுதான்’ என்று புரிகிறது. வளர்க்கிறார்கள் ஹெட்கான்ஸ்டபுள் அப்பா ஜெயப்ரகாஷம், அம்மா சோனியாவும். அப்படி வளரும் அதர்வாவுக்கு தடையோட்டத்தில் இந்தியாவுக்காக ஓடி கோல்ட் மெடல் அடித்துவிட வேண்டும் என்பதுதான் லட்சியம்.

இவர் ஓடுகிற ஒட்டத்தின் நடுவே, ஹீரோயின் ஸ்ரீதிவ்யா இவர் வாழ்க்கைக்குள் ராங் கால் மூலம் வந்து சேர… லவ்! சென்னையில் வசிக்கும் ஸ்ரீதிவ்யாவும் தஞ்சாவூரில் வசிக்கும் அதர்வாவும் எங்கே சந்திக்கிறார்கள்? காதலிக்கு வரும் பிரச்சனையை சமாளித்து அவரை எப்படி அதர்வா கைப்பிடிக்கிறார்? அதர்வா இந்தியாவுக்காக ஓடி கோல்ட் அடித்தாரா? இம் மூன்றுக்குமான தடை(யில்லா) ஓட்டம்தான் இந்த ஈட்டி!

ஒரு ஜல்லிக்கட்டு காளை எப்படி முறுக்கிக் கொண்டு நிற்குமோ, அப்படி நிற்கிறார் அதர்வா. அவரது திணவெடுத்த தோள்களும், கட்டிங் பிட்டிங் தேகமும் ஒரு நிஜ அதெலெட்டிக்காகவே ஆக்கியிருக்கிறது அவரை. லேசாக கிழி பட்டாலும் ரத்தம் வழியும். ஆளுக்கு ஆபத்து என்று சொல்லியாயிற்று. இவருக்கும் வில்லன் கோஷ்டிக்குமான பிரச்சனை முற்ற முற்ற… விரலையும் நகத்தையும் கடியோ கடியென கடித்தபடி, அந்த திகில் வினாடிக்காக காத்திருக்க வைக்கிறார் ரசிகர்களை. ஒரு ஹீரோ எங்கு அடிக்க வேண்டும் என்கிற சினிமா சூத்திரத்தை கரைத்துக் குடித்திருக்கிறார் டைரக்டர் ரவி அரசு. அந்த இடத்தில் அதர்வா, எதிரிகளை பிரித்து மேய்கையில் தியேட்டரும் சேர்ந்து துவம்சம் ஆகிறது. அதர்வாவுக்கு மிக பொருத்தமான படம். (இதுக்கு மேலயாவது உருப்படியான கதைகளா கேட்டு நீந்தி தப்பிச்சுக்கோங்க அதர்வா)

ஹீரோயின் நம்ம ஊதாக்கலரு! நல்லவேளை… அவரை பாவாடை தாவணியில் காண்பித்து வெறுப்பேற்றவில்லை. கவிதை கண்களும், ஹைக்கூ சிரிப்புமாக எல்லாரையும் வளைத்துப் போடுகிறார் ஸ்ரீதிவ்யா. இவருக்கும் அதர்வாவுக்குமான காதல் அப்படியே மெல்ல பூத்து, பளிச்சென விரிவதில் ஒரு அவசரமும் காட்டவில்லை இயக்குனர். அதுமட்டுமா, இருவருக்குமான காதல் காட்சிகளில் நிறைய ஜிலீர். ஒரு ஹீரோ காதலியின் பர்த் டே பரிசாக என்ன வாங்கிக் கொடுப்பார்? இந்த படத்தில் நீங்கள் யூகிக்கும் எதுவுமேயில்லை. அங்க நிக்குது டைரக்டரின் கற்பனை!

படம் நெடுகிலும் டைரக்டக்டோரியல் ‘டச்’ நுணுக்கமாக பதியம் செய்யப்பட்டிருக்கிறது. ஜஸ்ட் லைக்காக கடந்து போகிற ஒரு காட்சியில் தன் மேஜையின் ஓர விளிம்பை ஒரு நாணயம் கொண்டு கூர் மழுக்கிவிட்டு உட்காருகிறார் அதர்வா. அந்தளவுக்கு! படம் முழுக்க அதர்வாவின் வியாதியையும் நமக்கு இப்படி நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கிறார் ரவி அரசு.

ஒருபுறம் நகரும் பட்டு நூல் காதலில், மாஞ்சா தடவிய மாதிரி உள்ளே நுழைகிறது வில்லன் ஏரியா. அதற்கு மிக பொருத்தமான வில்லனாக ஆர்.என்.ஆர்.மனோகர். சிறப்பு. சிறப்பான நடிப்பு!

அதர்வாவுக்கு ஓட்டப்பந்தய கோச்சாக நடித்திருக்கும் நரேனிடம் அப்படியொரு யதார்த்தம்! பின்பு அவரையே படுக்க வைக்குது வில்லன் கோஷ்டி. தனக்கு குருவுக்காக அதர்வா தோளுயர்த்த, அதற்கப்புறம் நகரும் வினாடிகள் ஒவ்வொன்றும் பரபர…

களவாணி திருமுருகன், வீட்டுக்கு அடங்கிய பிள்ளையாகவும், கொடுமை கண்டு கொந்தளிக்கும் இளைஞனாகவும் மனதில் பதிகிற அளவுக்கு நடித்திருக்கிறார்.

பட்ஜெட் இடம் கொடுக்கவில்லையோ, என்னவோ? அதர்வாவின் நண்பர்களாக வரும் அத்தனை பேரும் ஈர வைக்கோல்போரில் ஒதுங்கிய கொசுக் கூட்டம் போல எடுபாடாமல் கிடக்கிறார்கள். நல்லநேரத்திலும் ஒரு கஷ்டகாலம் என்பது இவர்கள் வரும் போர்ஷன் மட்டுமே!

ஜி.வி.பிரகாஷின் இசையில் குய்யோ… முய்யோ, நான் புடிச்ச மொசக்குட்டியே… பாடல்கள் காதுக்குள் ஊடுருவி, மனசுக்குள் மையம் கொள்கிற ட்யூன்கள். பின்னணி இசையில் முதல் பாதியில் அதிகம் அக்கறை காட்டாவிட்டாலும், ஆக்ஷன் மோடுக்கு வந்ததும் பின்னி எடுத்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

படத்தில் தலையில் வைத்து கொண்டாடப்பட வேண்டிய இன்னொருவர் ஸ்டன்ட் இயக்குனர்தான். மிக லாவகமான கம்போசிங். ரத்தக்கசிவு என்கிற மையப்புள்ளியை புரிந்து கொண்டு பம்பரம் ஆடவிட்டிருக்கிறார் அதர்வாவை!

ஆக்ஷன் மோட், காதல் மோட் இரண்டுக்கும் இசைந்து கொடுக்கிறது சரவணன் அபிமன்யு-வின் கேமிரா.

ஈட்டி- வெற்றி இலக்கை நோக்கிய வேகமான பாய்ச்சல்!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Fefsi Free Medical Camp Stills

Close