எலி- விமர்சனம்

தமிழ்சினிமாவை திடுதிடுக்க வைத்த ஒரு நகைச்சுவை புலி, இப்படி நைஞ்சு போன எலியாகிருச்சே? என்கிற கவலை வாட்டாமல் ஒருவராலும் தியேட்டரை விட்டு வெளியே வரவே முடியாது. இந்த படத்தின் மூலம் கஞ்சா கருப்பு, சிசர் மனோகரையெல்லாம் கூட ‘தேவலாம்’ ஆக்குகிறார் வடிவேலு! ஆளை விட்டால் போதும் என்று வெளியே ஓடிவரும் அந்த நேரத்திலும் கட்ட தொர, புலிப்பாண்டியெல்லாம் கண்முன்னே வந்து போவதுதான் அவர் இத்தனை காலம் போட்ட அசைக்க முடியாத அஸ்திவாரம். இருந்தாலும் பேஸ்மென்ட்டும் வீக்!, பில்டிங்கும் வீக்.! வடிவேலுவுக்கு உடனடி தேவை, நல்ல கொத்தனார்கள் கூட இல்லை…. சுய பரிசோதனை!

அறுபதுகளில் நடக்கிறது கதை. சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபடும் இவரை, போலீசே உதவிக்கு அழைக்கிறது. சிகரெட் கடத்தலில் ஈடுபடும் அந்த கொள்ளைக்காரர்களின் கூட்டத்தில் எலி போல நுழைந்து வேவு பார்த்து அதை அப்படியே போலீசுக்கு போட்டுக் கொடுப்பதுதான் வடிவேலுவிற்கு இடப்படும் பணி. எப்படியோ நுழையும் அவர், அங்கிருந்த குற்றவாளிகளை போலீசிடம் மாட்டிவிட்டுவிட்டு எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் முடிவு.

ஏதோ, தான் பண்ணும் சேட்டைகளையெல்லாம் இந்த சமூகம் கண்ணை மூடிக் கொண்டு ரசிக்கும் என்ற நினைப்பு வடிவேலுவுக்கு பலமாகவே இருக்கிறது. அதன் விளைவை ஒவ்வொரு பிரேமிலும் ‘அனுபவி’க்கிறோம். இந்த படத்தில் வாய்விட்டு சிரிக்க ஏதேனும் காட்சிகள் இருக்கிறதா என்று வல்லாரை லேகியத்தை வழிச்சு வழிச்சு தின்றுவிட்டு யோசித்தாலும் வெறுமைதான் மிச்சம். ஆனால் ஓப்பனிங்கிலேயே அவர் அடிக்கும் சிக்சர் ஒன்றை சொல்லியே ஆக வேண்டும். ‘ஜ்மோக்க்கிங் இஜ் என்ஞ்ஜுரியஜ் டூ கெலுத்த்’ என்று ஆரம்பத்தில் வரும் அந்த டைட்டில் கார்டை அவர் படிக்கிற போது அந்த குரலைக் கேட்டே குஷியாகிறது தியேட்டர். அதற்கப்புறம்…? ‘போங்கடா வெண்ணைங்களா’ என்கிறார் வடிவேலு. பல காட்சிகளில் டாய்லெட்டில் முக்குவதை போலவே முகத்தை வைத்துக் கொள்கிறாரா? தாங்கல…

அவ்வளவு கோடிகள் போட்டு ஒரு படத்தை எடுக்கிறோம். அதில் நாமும் நடிக்கிறோம். அட்லீஸ்ட் பற்களை மட்டுமாவது ஒரு மருத்துவரிடம் சென்று க்ளீன் செய்து கொள்ளக் கூடாதா அவர்? குளோஸ் அப்புகள் ஒவ்வொன்றும் கொடுமை வடிவேலு. இந்த படத்தை பொறுத்தவரை வடிவேலுவே ஸ்பெஷல் தோசை இல்லை என்றாகிவிட்டது. இதில் சதா தோசை மட்டும் என்னவாம்? ரொம்ப ரொம்ப ‘சாதா’ தோசை!

முன்பெல்லாம் வடிவேலுவின் நகைச்சுவை படையில் விதவிதமாக வந்து கலக்கும் பலரில், சிலரை தவிர யாருமே இந்த படத்தில் இல்லை. அதையே பெரும் திராபையாக உணர முடிகிறது. மருந்துக்கு கூட கேமிராவை மற்றவர்கள் பக்கம் திருப்பிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் வடிவேலு, எல்லா காட்சிகளிலுமே தான் இருக்கும்படி கவனித்துக் கொண்டிருக்கிறார். (இலை நிறைய உப்பு! அந்த உப்பும் கூட சப்)

இசை வித்தியாசாகர். பின்னணி இசையில் படுத்தி எடுக்கிறார். அதற்காக முன்னணி இசை எப்படி என்று மட்டும் கேட்டுவிடாதீர்கள். நல்லவேளை…. இந்தியில் இருந்து ‘மேரே ஹப்பு நக்கி’ பாடலை ரைட்ஸ் வாங்கி உள்ளே விட்டிருக்கிறார்கள். தப்பித்தோம்! அதில் மட்டும் வடிவேலுவின் பர்பாமென்ஸ் ரகளை!

ஒளிப்பதிவாளர் பால் லிவிங்ஸ்டனின் லைட்டிங்ஸ் பிரமாதம். அறுபதுகளை கண்முன் கொண்டு வருவதில் பலத்த சிக்கல்கள் இருந்தாலும் முடிந்தவரை வென்றிருக்கிறார் ஆர்ட் டைரக்டர்.

பட்டாபட்டி என்ற அருமையான நகைச்சுவை படத்தை இயக்கியவர் யுவராஜ் தயாளன். இவ்வளவு சுமாரான படத்தையும் அவர்தான் இயக்கியிருக்கிறார் என்றால் நம்ப முடியவில்லை.

எலி- பொறியில் சிக்கட்டும். அது அதனுடைய தலையெழுத்து. அந்த பொறிக்குள் படம் பார்க்கிறவர்களையும் சிக்க வைத்திருக்கிறீரே… அது என்ன லாஜிக் எலி மன்னவா?

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கமல் காத்திருந்தது யாருக்காக?

உத்தம வில்லனுக்கு பிறகு திரைக்கு வரப்போகும் கமல் படம் ‘பாபநாசம்’தான்! இப்படம் தொடர்பான புகைப்படங்கள் அவ்வப்போது வெளியிடப்பட்டாலும், டீஸர், ட்ரெய்லர், பாட்டு என்று எல்லாவற்றையும் காண துடித்துக்...

Close