என்னை அறிந்தால் 29 ம் தேதியும் ரிலீஸ் இல்லை? அஜீத் ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றம்?
பொங்கலுக்கு வந்திருக்க வேண்டிய ‘என்னை அறிந்தால்’, தொழில் நுட்ப காரணங்களுக்காக தள்ளிப் போவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி ஜனவரி 29 ந் தேதி வெளிவரும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது இந்த தேதியிலும் சிக்கல் என்று குறுகுறுக்கிறது கோடம்பாக்கம். இந்த 29 ந் தேதிக்கு வராவிட்டால் பிறகு எப்போ? அநேகமாக பிப்ரவரி 13 ந் தேதி வெளியாகலாம் என்கிறார்கள். ஏன் இந்த தடை தாமதம்? ஆளாளுக்கு ஒரு காரணத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தயாரிப்பாளர் சார்பில் அனுப்பப்பட்டிருக்கும் பிரஸ் ரிலீஸ், இம்மாதம் 29 ந் தேதி ‘என்னை அறிந்தால்’ படம் உறுதியாக வெளியாகும் என்கிறது.
பொங்கலுக்கு முன்பும் இப்படியொரு அறிக்கை தயாரிப்பாளர் தரப்பிலிருந்து வெளிவந்ததும், உறுதியாக பொங்கலுக்கு ரிலீஸ் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்ததும் இங்கே நினைவுகூரப் பட வேண்டிய சமாச்சாரம். அதுமட்டுமல்ல, கடந்த சில தினங்களாக ஜனவரி 29 ந் தேதி வெளியீடு என்று நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்து வந்த தயாரிப்பு தரப்பு, இப்போது தேதி எதுவும் குறிப்பிடாமல் ‘விரைவில்’ என்று மட்டும் குறிப்பிட்டு விளம்பரம் செய்து வருவதையும் கவனிக்க வேண்டும்.
29 ந் தேதி இந்த படம் வெளிவருவதற்கான சாத்திய கூறுகள் குறைவாக இருப்பதற்கு என்ன காரணம்? இன்னும் படத்தின் வியாபாரம் எந்த ஏரியாவிலும் முடியவில்லை என்பதுதான். தயாரிப்பாளர் சார்பில் வியாபார பேச்சு வார்த்தை துவங்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஏற்கனவே லிங்கா, ஐ போன்ற படங்களுக்கு வாரிக்கொடுத்துவிட்டு வயிற்றில் புளி மூட்டை சுமக்கும் விநியோகஸ்தர்கள் இந்த படத்திற்கு அள்ளிக் கொடுக்க தயங்குகிறார்களாம். இது இன்னொரு காரணம் என்கிறார்கள்.
விலையை குறைத்து விற்க, அஜீத் படம் ஒன்றும் ஆவரேஜ் வரிசையில் இல்லையே? எல்லா பிரச்சனைகளையும் சமாளித்து படத்தை திரைக்கு கொண்டு வரும்போது, தமிழகம் அடுத்தடுத்து இரண்டு பொங்கல்களை கொண்டாடிய உற்சாகத்திலிருக்கும். அதில் சந்தேகமில்லை.