லிஸ்ட்ல பேரே இல்ல! நியாயமே இல்லாமல் ஹன்சிகா புறக்கணிப்பு
மக்களுக்கு பிடித்த நடிகராக விஜய் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், திடீரென ஆட்டத்தை கலைத்து தனுஷுக்கே வெற்றி என அறிவித்த அந்த ஆங்கில நாளிதழ் பற்றி ஜி.வி.பிரகாஷ் போட்ட ட்விட், சினிமா ரசிகர்களிடைய பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நேரத்தில்தான் இன்னொரு பொல்லாப்பு.
அதே போல நடிகைகளுக்கும் இன்னொரு லிஸ்ட் போட்டது அந்த நாளிதழ். நயன்தாரா த்ரிஷாவில் ஆரம்பித்து நேற்று வந்த நண்டு சிண்டுவெல்லாம் இடம் பிடித்திருந்த அந்த லிஸ்ட்டில் ஹன்சிகாவின் பெயர்தான் இல்லை. இத்தனைக்கும் கடந்த 2015 ம் சரி. துவங்கிய 2016 ம் சரி. ஹன்சிகா நடித்த படங்கள் முக்கிய இடத்தை பிடித்த விஷயத்தை ரசிகர்கள் அறிவார்கள் அல்லவா? அப்படிப்பட்ட முக்கியமான நடிகையை பரவை முனியம்மா ரேஞ்சுக்கு அந்த நாளிதழ் டீல் பண்ணிய விஷயத்தை ஹீரோக்களால் கூட சகிக்க முடியவில்லையாம்.
தகவல் அவர்கள் மூலமாகவே ஹன்சிகாவுக்கு போயிருக்கிறது. பொறுமையாக கேட்டு பொல பொலவென சிரித்த ஹன்சிகா, “ரசிகர்களுக்கும் எனக்கும் நேரடி ரிலேஷன்ஷிப் இருக்கு. இவங்க என்ன என்னை லிஸ்ட் போட்டு போட்டி போட வைக்கறது. டேக் இட் ஈஸி” என்றாராம் அவர்களிடம். இனி சம்பந்தப்பட்ட நாளிதழுக்கு பேட்டியே தரப்போவதில்லை என்றும் முடிவெடுத்திருக்கிறாராம்.
தமிழ் பத்திரிகைகளையும் நாளிதழ்களையும் சுண்டு விரலாகவும், சம்பந்தப்பட்ட அந்த ஒரு நாளிதழ் மட்டும்தான் இன்டஸ்ட்ரியின் காக்கும் கரங்களாகவும் நினைத்த அத்தனை பேருக்கும் ஷாக். இப்படி தனித்தனியாக அனுபவித்தால்தானே தெரியும்! நாளைக்கு லிஸ்ட்ல ரஜினியையே விட்டு விட்டு ஓட்டெடுப்பு நடத்தினாலும் நடத்துவார்கள். எல்லாமே நீங்க கொடுத்த இடம்தான் கலைஞர்களே…