நான் ஒண்ணும் குவார்ட்டர் கோவிந்தன் இல்ல… பிரஸ்மீட்டில் நழுவிய ஜீவா

பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் இயக்கியிருக்கும் ‘யான்’ என்ன கதையாக இருக்கும்? சஸ்பென்ஸ் திரில்லர் என்று அவரே சொல்லிவிட்ட பிறகும், அந்த கதைக்குள் பொதிந்திருக்கும் மர்ம முடிச்சென்ன? என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை தெரியும் என்று காத்திருந்தால், படம் சம்பந்தப்பட்ட ஒருவரும் அந்த முடிச்சை அவிழ்க்க துணிந்தால்தானே? மனித உரிமை சம்பந்தமான ஒரு கதை சார். அது என்னன்னு கேட்டீங்கன்னா இப்பவே சொல்ல முடியாதே… என்றார் ரவி.கே.சந்திரன்.

ஜீவா ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக துளசி நடிக்கிறார். இந்த படத்தின் பிரஸ்மீட்டில் ஏக கூத்துகள் அரங்கேறியது. கிட்டதட்ட ஒரு விவாத மேடையாகவே ஆகிப் போனது அந்த இடம்.

படத்தின் நாயகி துளசி பற்றிய புகழ் மாலையோடு நிகழ்ச்சி துவங்கியது. ‘நாளைக்கு கூட பரீட்சை சார் அந்த பொண்ணுக்கு. நல்லா எழுதட்டும். இப்ப கூப்பிட வேண்டாம்னு நாங்க முடிவு பண்ணிட்டோம். நேற்று காலையில அவங்க அம்மா ராதாகிட்டேயிருந்து போன். சார்… யான் படத்தோட பிரஸ்மீட் வச்சுருக்கீங்களாமே? என் பொண்ணுக்கு அழைப்பு இல்லையாங்கிறாங்க. உங்க பொண்ணுக்கு எக்ஸாம்ங்கறதால சொல்லல என்று நாங்க சொன்னால், அதெப்படி? என் பொண்ணு வருவா, பிறகு வந்து எக்ஸாம் எழுதுவான்னுட்டாங்க’ என்று வியந்தார் தயாரிப்பாளர் எல்ரெட் குமார். வளர்ற வரைக்கும்தான் இப்படியெல்லாம் நடக்கும். வளர்ந்துட்டா அவரும் ஒரு நயன்தாராதான் என்று வாய் வரைக்கும் வந்ததை தொண்டைக்குள் அமுக்கிவிட்டு அடுத்த சப்ஜெக்டுக்கு தாவியது பிரஸ்-

இந்த கேள்வி ஜீவாவுக்கு. ‘படத்துக்கு படம் குவார்ட்டர் கோவிந்தன் மாதிரி, டாஸ்மாக் புகழ் ஜீவா ஆகிடுறீங்களே, உங்களை மாதிரி ஹீரோக்களுக்கு சமூக பொறுப்புங்கறது கொஞ்சமாவது வேணாமா?’ இதுதான் கேள்வி. தடுக்கி விழுந்து தாவங்கட்டையை உடைத்துக் கொண்டதை போல பொங்கி எழுந்துவிட்டார் அவர். ‘ஒரு படம்தான் சார் நான் அப்படி நடிச்சுருக்கேன். உலகத்துலேயே நல்லவனாவெல்லாம் நடிச்சுட்டேன். ஆனால் ‘மச்சி குவார்ட்டர் சொல்லேன்’தான் இன்னும் எல்லார் மனசுலயும் நிக்குது. நான் என்ன பண்ணட்டும். கேரக்டர் அப்படின்னா அதை செஞ்சுதானே ஆகணும். இப்ப மட்டுமில்ல, இனிமேலும் அப்படி ஒரு கேரக்டர் வந்தா செய்வேன். முடியாதுன்னு சொல்ல முடியாதே என்றார்.

ஆனால் ஒவ்வொரு ஹீரோவுக்கும் சமூக பொறுப்பு வேணும் என்பதை பக்கத்திலிருந்த பாடலாசிரியர் தாமரை ஒப்புக் கொண்டார். இந்த கேள்வியை வெகுவாக ஆமோதித்த தாமரை ஒரு ஐந்து வருஷத்துக்கு இந்த மாதிரி குடிக்கிற காட்சிகள் படத்துல இல்லாம பார்த்துக்க வேண்டிய பொறுப்பு எல்லா ஹீரோக்களுக்கும் இயக்குனர்களுக்கும் இருக்கு. அப்படி செஞ்சா பின்னாடி வர்ற பத்து வருஷம் இளைஞர்கள் நல்லாயிருப்பாங்க என்று தாமரை பொங்கி வெடிக்க, ஜீவா முகத்தில் ஈயாடவில்லை.

அந்த கருத்துல நானும் உடன் படுறேன் சார். என் படத்தில் குடிக்கிற காட்சிகளே இல்லை. அது மட்டுமல்ல, பெண்களை தரக்குறைவா பேசுறதோ, அவங்களை கிண்டல் பண்ற காட்சிகளையோ நான் என் படத்துல வைக்கவே மாட்டேன் என்றார் ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான ரவி.கே.சந்திரன்.

இந்த ‘கட்ஸ்’ ஜீவாவிடம் இல்லையே? அதுதான் ஏன்னு புரியல…!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
‘ இச் ’சுமி மேனனுக்கு வந்த சிக்கல்? சேறு குழைச்சு சிலை வடிப்பதற்குள், ஆறு தண்ணி ஆவியாகிடும் போலிருக்கே

விஷாலுக்கு லிப் கிஸ் அடித்து ஒரே நாளில் தனது கொள்கை கோட்பாடு எல்லாவற்றையும் எடைக்குப் போட்ட ‘இச்’சுமி மேனன், அதற்கப்புறம் இந்த தவறை ஒரு போதும் செய்யப்...

Close