ஜிகினா- விமர்சனம்

உடைஞ்ச சட்டியில் ஒஸ்தியான ஒயினை ஊற்றியடிச்சா எப்படியிருக்கும்? அது மாதிரியொரு படம். கலக்கல் கதை! காஸ்ட்டிங்தான் உதை!

அழகில்லாத இருவர் பேஸ்புக்கில் பொய்யான உருவத்தோடு காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். இருவரும் நேரில் சந்திக்கும் போது என்னாகிறது என்பதுதான் ஜிகினா!

படம் ஏற்படுத்துகிற சலசலப்புக்கு முன், அதன் பளபளப்பு சற்றே குறைச்சல்தான்.

கார் டிரைவரான விஜய் வசந்துக்கு, தனது ஐடி கஸ்டமர்ஸ் மூலம் பேஸ்புக் அறிமுகம் கிடைக்கிறது. ஒரு அக்கவுன்ட்டை உருவாக்கித்தரும் அவர்கள், “இதில் நீ சாட் பண்ணலாம். பொம்பளை புள்ளைகளோட கடலை போடலாம்” என்றெல்லாம் சொல்லிக் கொடுக்கிறார்கள். “என் மூஞ்சை பார்த்தா இதெல்லாம் நடக்குமா?” என்று ஐயுறும் விஜய் வசந்துக்கு, அவர்கள் தரும் மாற்று வழி வேறொரு அழகான பையனின் படத்தை பயன்படுத்துகிற வித்தை. வேறொரு முகத்துடன் ஹீரோயின் சானியா தாராவுடன் கடலை போட ஆரம்பிக்கிறார் விஜய் வசந்த். வெறும் சாட்டிங் அதற்கப்புறம் ஆடியோ சாட்டிங்காகவும் மாறுகிறது. ஆனால் ‘ஒரு நாள் கூட வீடியோ சாட்டிங்கில் வர மாட்டேங்குறீயே?’ என்ற கேள்வியையும் கேட்டுக் கொண்டு காதலை நோக்கி முன்னேறுகிறார்கள். இன்டர்வெல்லுக்கு முன் ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த திருப்பம்! விஜய் வசந்தோடு பேசுவது சானியா தாரா அல்ல. அவர் வீட்டு வேலைக்காரி. அதுவும் கன்னங்கரேலென்ற கண்றாவி பிகர். அதற்கப்புறம் என்னாச்சு? முடிவு!

ஐயோ பாவம்… விஜய் வசந்துக்கு போன படத்தின் வெற்றி, முகத்தில் வந்து ஏறிக் கிடக்கிறது. எந்த பக்கம் கேமிராவை வைத்தாலும் பொத பொதவென இருக்கிறார். அதுவும் குளோஸ் அப்புகளில் குய்யோ முறையோவாகிறார்கள் ரசிகர்கள். நல்லவேளையாக ‘நானெல்லாம் ரொம்ப சுமார் மூஞ்சிடா’ என்று அவரை விட்டே சொல்ல வைத்திருப்பதால், கப்சிப் கணேசன்களாகி விடுகிறோம் நாம். சரி… இவர்தான் இப்படி என்றால் இவர் காதலிக்கும் அந்த கருகமணி கேரக்டர் இன்னும் சுத்தம். கருப்பாக இருப்பவர்கள் அழகானவர்கள் இல்லை என்று யார் சொன்னது ரவி நந்தா பெரியசாமி? ரஜினி கருப்புதான், விஜயகாந்த் கருப்புதான், அர்ச்சனா கருப்புதான். விந்தியா கருப்புதான். இன்னும் இன்னும் லிஸ்ட் போட்டுக் கொண்டே போகலாமே! சரி போகட்டும். “எல்லா எக்ஸ்பிரஷனுக்கும் ஒரே மாதிரிதான் மூஞ்சை வச்சுருக்க…” என்று நேரடியாகவே விஜய் வசந்தை படத்தில் கலாய்த்திருப்பதால் நெக்ஸ்ட்!

கதாநாயகி சானியா தாரா மினிமம் பட்ஜெட் படங்களுக்கெனவே கோடம்பாக்கத்திற்கு ‘வந்தாளே மகராசி!’ நடிப்பதற்கு அதிகம் வேலையில்லை. கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். படத்தில் அவர் பின்னணி பாடகியா? நடிகையா? புரியலையே சாமி. பாடகிதான் என்றால் பிறகெதுக்கு விதவிதமான போட்டோ செஷன் செய்கிறார். ஸ்டில்கிராபரை காதலிக்கிறார்? இருந்தாலும் வீட்டு வேலைக்காரி கேட்டுக் கொண்டாள் என்பதற்காக அவளுடைய காதலனை பார்க்க பார்க்குக்கு வருவதெல்லாம் டூ மச் ஸ்கிரீன் ப்ளே.

பின் பாதியில் அநேக காட்சிகளில் குளோஸ் அப்பில் வந்து கொல்லுகிறார் அந்த கருகமணி. அட்லீஸ்ட் அவரது பற்களுக்கு போட்டிருக்கும் க்ளிப்பையாவது கழற்றி படம் பிடித்திருக்கலாம்.

காதலனும் காதலியும் தனித்தனியாக சாகப் போகிற அந்த கடைசி நிமிடத்தில் ‘ஒரு டீ குடிச்சுட்டு வரலாம்’ என்கிற அவகாசத்தை டைரக்டர் வலிய திணித்திருந்தாலும், மிகப்பெரிய மேஜிக் அது! தற்கொலை எண்ணம் அடிக்கடி வரும் காதல் கோழைகள் அவசியம் ஒருமுறைக்கு இருமுறை அந்த காட்சியை மட்டும் திரும்ப திரும்ப பார்த்து திருந்தலாம். அவ்வளவு இக்கட்டான நேரத்திலும் “உன் பெயர் என்ன?” என்று விஜய் வசந்திடம் கேட்டுவிட்டு, அவர் “பாவாடை” என்று பதில் சொன்னதும் அந்த பெண் கதி கலங்க சிரிக்கிறாரே… அது அக்லீயை மீறிய அழகு.

நாற்பது வயசுக்கு மேல இருக்கிற ஆண்கள் எல்லாம் கிழவங்கதான்… என்கிற வசனத்தை கேட்கும்போதுதான் பல பேர் சொரெர் ஆவார்கள்.

எல்லா நேரத்திலும் கொதிக்கிற எண்ணை சட்டிக்குள் கையை விட்ட எபெக்ட்டிலேயே திரியும் அந்த வில்லனும் அவரது அல்லக்கை சிங்கம்புலியும் சீரியஸ் நேரத்திலும் சிரிப்பு திருடர்கள் ஆகிறார்கள்.

படத்தில் வரும் சோகப்பாடல் ஒன்று செம… இசை ஜான் பீட்டர்.

‘மின்னுவதெல்லாம் பொன்னல்ல’ என்ற அர்த்தத்தில் இந்த தலைப்பு வைக்கப்பட்டிருக்கலாம்! எதை நினைத்து வைத்தார்களோ, அதுவே நடந்திருக்கிறது!

-ஆர்.எஸ்.அந்தணன்

Read previous post:
நடிகர் சாந்தனு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் திரையுலகம்!

Close