கதை திரைக்கதை வசனம் இயக்கம் -விமர்சனம்

கருங்குரங்கு காண்டா மிருகத்தை பெற்று போட்ட மாதிரி, கோடம்பாக்கத்தில் சந்துக்கு சந்து சினிமா பிரசவம்தான். ஆ.கோ க்களின் அதிகரிப்பு, ஒலக சினிமாவிலிருந்து உருவல் எல்லாம் சேர்ந்து பார்த்திபனை கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து கல் வீச வைத்திருக்கிறது. நல்ல சினிமாவை நேசித்து தோற்கிற எவருக்கும் வருகிற எரிச்சல்தான் அது என்றாலும், இந்த கல்லை ஏதோ மாணிக்க கல்லாக நினைத்து மண்டையை நீட்டலாம் ரசிகர்களும், ஆ கோக்கள் நிறைந்த கோடம்பாக்கமும்! ஏனென்றால் படத்தில் அவர் வடித்திருக்கும் ஒவ்வொரு இஞ்ச் நீளமும், கோடம்பாக்கத்தின் கண்ணாடி! கதையே இல்லாமல் ஒரு படம் என்று இந்த படத்தின் அறிமுக விழாவில் பார்த்திபன் சொல்லும் போதெல்லாம் அதன் சூட்சுமம் புரியவில்லை. ஆனால், படத்தில் ஒரு மேஜிக் நடத்தியிருக்கிறார் பாருங்கள்… அடேயப்பா! வல்லவனுக்கு வைக்கோலும் தங்க குச்சி!

இயக்குனராக வேண்டும் என்று முயற்சிக்கும் சந்தோஷ், தன் புது மனைவி சம்மதத்துடன் தன் வீட்டிலேயே ‘கதை டிஸ்கஷன்’ வைத்துக் கொள்கிறார். எந்நேரமும் ‘சிந்தித்து’க் கொண்டேயிருக்கும் அவர்கள் அடிக்கிற ரகளை ஒருபுறம் போய் கொண்டிருக்க, இந்த டிஸ்கஷன் பார்ட்டிகளால் கணவன் மனைவிக்கு இடையே வரும் சண்டை சச்சரவுகள்தான் முதல் பாதி. இந்த டிஸ்கஷன் குரூப்பில் ஐம்பத்தெட்டு வயதான தம்பி ராமய்யாவும் சேர்ந்து கொள்ள, கோடம்பாக்கத்தின் யதார்த்தம் குருதியாகவும் கோபமாகவும் குலுங்க வைக்கும் நகைச்சுவையாகவும் வெள்ளமென ஒடுகிறது. அத்தனை வயசு மனுஷனை அசால்டாக ‘டா…’ போடும் அந்த அக்யூஸ்ட் தொடங்கி ஒவ்வொருவரும் பார்த்திபனின் இன்னொரு வெர்ஷனாக மாறி அடிக்கும் ரகளை இருக்கிறதே, அதை நினைத்து தனியாக ரூம் போட்டு சிரிக்கலாம்!

படத்தில் வரும் எல்லாரையும் தராசின் ஒரு பக்க தட்டில் நிற்க வைத்து விட்டு, இன்னொரு பக்கம் தம்பி ராமய்யாவை மட்டும் ஏற்றினால் கூட, தட்டு அவர் பக்கம்தான் சாயும். அப்படியொரு நடிப்பு அவரிடத்தில். அட… ச்சும்மா அவர் மோட்டுவளையை பார்த்தால் கூட, தியேட்டர் ‘கலீர் ’ என்கிறது. தன்னால்தான் கணவன் மனைவிக்குள் பிரச்சனை என்று தெரிந்தும், சகித்துக் கொண்டு வேலை பார்க்கும் அவரது கேரக்டர் சிரிக்க வைத்தாலும், நிஜம் சுடவே செய்கிறது. ஒரு காட்சியில், தன் வயதொத்த உதவி இயக்குனர்களுக்கும், வாய்ப்பு வரும் வரும்… என்று காத்திருக்கும் உதவி இயக்குனர்களுக்கும் அவர் கதறிக் கொண்டே சொல்லும் அட்வைஸ், ஒவ்வொரு உதவி இயக்குனர்களின் பாக்கெட்டிலும் இருக்க வேண்டிய அபாய சங்கு!

‘இன்ட்டியூஷன்’ என்று ஒரு விஷயத்தை படத்தில் வைத்து, அடுத்து வரப்போகும் திருப்பம் இதுதான் என்று சொல்லிவிட்டு கதையை நகர்த்த ஒரு தெம்பு வேண்டும். பார்த்திபன் அதை அசால்ட்டாக செய்கிறார். மிக மிக சின்னஞ்சிறு கேரக்டரில் வந்து கதையளந்துவிட்டு போகிறாரா… ஸ்வீட்! படம் நெடுகிலும் வருகிற பார்த்திப குசும்புகள் இருக்கிறதே… டயலாக்தானா அவையெல்லாம்? ஒவ்வொன்றும் தந்துரி சிக்கன்! கொய்யா பழத்தை தட்டி விட்டுட்டாரே என்று ஹீரோ பதற, ‘அது கொய்யாப்பழம் இல்லை’ என்கிறார் அந்த பெண். ‘அப்படின்னா?’ – இது ஹீரோ. ‘கொய்த பழம். கொய்யா பழம்னா அது மரத்துலல்ல இருக்கும்?’ இப்படி நாலைஞ்சு கொய்யா பழத்தை வைத்தே காதலை டெவலப் பண்ணுகிறார் பார்த்திபன். ‘காலை கையா நினைச்சு பேசுறேன்’ என்று பெண் போலீசிடம் தம்பி ராமய்யா கெஞ்ச, ‘முதல்ல கைய கால்லேர்ந்து எடுத்துட்டு பேசு’ என்று அவர் சொல்வது போல படத்தில் ஆயிரம் டயலாக் சித்து வேலைகள் வைத்திருக்கிறார் பார்த்திபன். ரசித்து ரசித்து புரள வேண்டியது ரசிகர்கள் பாடு!

தம்பி ராமய்யாவை விட்டு தமிழ்சினிமாவின் பழங்கதைகளை பேச வைக்கிறார் பார்த்திபன். அதில்தான் எத்தனையெத்தனை சுவாரஸ்யம்? குறிப்பாக தேவர் பிலிம்ஸ் தேவர் பற்றிய விஷயங்கள்…

நயன்தாராவின் அழகோடும், நமீதாவின் உயரத்தோடும் பார்க்கவே செக்ஸியாக இருக்கும் அந்த ஹீரோயின் பெயர் அகிலா கிஷோர். இவருக்கு சுசித்ரா குரல் கொடுத்திருக்கிறார். இரண்டும் சேர்ந்து தேனிலேயே ஊற வைத்த தேன்குழல் போல அப்படியொரு பொருத்தம். ‘இன்னும் அஞ்சு நிமிஷம் இருக்கு. அதுக்குள்ளே என்னை இம்ப்ரஸ் பண்ணு’ என்பதெல்லாம் ராட்சசிகளின் துடுக்கு. இந்த பெண்தான் படத்தின் மிடுக்கு!

எப்படிப்பட்ட தயாரிப்பாளர்களெல்லாம் இங்கே படமெடுக்க வருகிறார்கள் என்பதை ஒரு தடியரை கொண்டு விவரித்திருக்கிறார் பார்த்திபன். அவர் கதை சொல்லும் அழகு இருக்கிறதே… அதற்காகவே இந்த படத்திற்கு ரிப்பீட் மேல் ரிப்பீட் அடிக்கலாம்.

க.தி.வ.இ படத்திற்கு பாடல்கள் கூட தேவையில்லைதான். ஆனால் ஆர்யாவையும் அமலாபாலையும் வைத்துக் கொண்டு அதைக்கூட செய்யாவிட்டால் எப்படி? கெஸ்ட் ரோலில் வந்தாலும், ஒரு ஸ்டாம்ப் அடித்துவிட்டு போகிறார்கள் ஆர்யா, விஷால், விஜய்சேதுபதி எல்லாரும். இந்த பக்கம் வந்தேன். அப்படியே பார்த்துட்டு போவலாம்னு… என்று உள்ளே வரும் டைரக்டர் சேரன், அண்மையில் கோடம்பாக்கத்தில் நடந்த கதை பஞ்சாயத்து ஒன்றை நாசுக்காக ரசிகர்களுக்கு நினைவுபடுத்திவிட்டு போவது ‘தீயினால் சுட்ட’ பழம்!

விஜய்ராம், தினேஷ், லல்லு, மஹாலட்சுமி, சாஹத்யா ஜெகந்நாதன் என்று எல்லாருமே ஸ்கோர் செய்கிறார்கள்.

சற்றே நெருக்கடியான கதை. அந்த இடியாப்பத்தை இட்லியாக்கி கொடுத்திருக்கிறார் எடிட்டர் ரா.சுதர்சன். ஒளிப்பதிவில் ஸ்பெஷலாக சொல்வதற்கு ஒன்றுமில்லை என்றாலும், அந்த சுனாமியின் மினியேச்சர் பகுதி மட்டும் பிரமிப்பு. ஷரத், விஜய் ஆன்ட்டனி, எஸ்.எஸ்.தமன், அப்போன்ஸ்ராய் ஜோசப் நால்வரின் இசையில் பாடல்களும் சிறப்பு.

பார்த்திபனை பொருத்தவரை ‘யானை படுத்தாலும் குதிரை மட்டம்’. இந்த படத்தில் பார்த்திபன் என்ற யானை குதிரை உயரத்திற்கு ‘ஜம்ப்’ அடித்திருக்கிறது. பிரமியுங்கள்… வேறு வழியே இல்லை!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஹன்சிகாவை அழ வைத்த ஆர்யா சினிமாவுல இதெல்லாம் சகஜமப்பா!

மீகாமன் பிரஸ்மீட்! ‘ஹன்சிகா அழுதுட்டாரு தெரியும்ல... ’ என்று அப்படத்தின் இயக்குனர் மகிழ்திருமேனி கூறியதில் ஏதும் உள் குத்தோ, பப்ளிசிட்டி ஸ்டன்ட்டோ இருப்பதாக தெரியவேயில்லை. அப்புறமென்ன? பொச...

Close