கரையோரம் விமர்சனம்
கடலோரம் என்று கூட தலைப்பு வைத்திருக்கலாம். அலையை ரசிப்பதா, செதுக்கி வச்ச சிலையை ரசிப்பதா என்று திக்குமுக்காட வைக்கிறார் நிகிஷா பட்டேல்! இந்த படத்தின் மொத்த ‘கவன ஈர்ப்பு தீர்மானமும்’ நிகிஷா நிகிஷா நிகிஷா மட்டும்தான்! இருந்தாலும் கதை என்ற நூல் இருந்தால்தானே அவரையும் அவரது கொள்ளாத அழகையும் படத்திற்குள் கோர்க்க முடியும்? மிக மெல்லிசாக ஒரு கதையை உருவாக்கி அதற்குள் போட்டு ‘குலுக்கி’ எடுத்திருக்கிறார்கள் அவரை. படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு புரை விழுந்த கண்ணாக இருந்தாலும், ஆபரேஷன் இல்லாமலே குணமாக்குகிற வித்தையோடு ஜெய் ஆனந்த் என்பவரின் ஒளிப்பதிவும் சேர்ந்து கொள்ள, பதினெட்டு ப்ளஸ்களுக்கு ‘கும்திங்’ ஸ்பெஷல்தான் இந்த கரையோரம்!
பணக்கார நிகிஷாவுக்கு அடுத்தடுத்த சோகம். தங்கையை பறிகொடுக்கிறார். தங்கை மகளை பறிகொடுக்கிறார். அப்பாவை பறிகொடுக்கிறார். புண் பட்ட மனதை கண் கொண்டு ஆற்றுவதற்காக அந்த கடற்கரையோர ரிசார்ட்டில் வந்து தங்குகிறார். அதற்கு ஏற்பாடு செய்வது நிகிஷாவின் இனிய தோழி இனியா. முதல் சில நாட்களுக்குள்ளேயே அங்கு ஒரு கம்பீரமான இளைஞனை பார்க்க, கொஞ்சம் கொஞ்சம் அவனிடம் மெல்ட் ஆகிறார் நிகிஷா. காதலில் விழுகிறார். அங்குதான் ட்விஸ்ட். தோழி இனியா, “நீ சொல்ற ஆள் செத்து பத்து வருஷமாச்சு. உனக்கு மனநோய்” என்று கூற, மருத்துவம், போலீஸ், பழைய செய்தித்தாள் எல்லாமே ‘ஆமாண்டி ஆமாம்’ என்கிறது.
மண்டை கழண்டு, மரை கழண்டு தெருவில் துணியை பிய்த்துக் கொண்டு (அதற்கு முன்பே துணி விஷயத்தில் அதைதான் செய்கிறார் நிகிஷா. அது வேறு…) ஓடுகிற லெவலுக்கு ஆளாகும் நிகிஷாவை, நிஜத்தை உணர்த்தி காப்பாற்றுகிறார் போலீஸ் அதிகாரி சிம்ரன். என்னய்யா ட்விஸ்டு? யெஸ்… தோழி இனியா அண் கோதான் வில்லி அண்டு வில்லன்ஸ்! எல்லாம் சொத்துக்காக போட்ட ட்ராமா!!
ஆரம்பத்திலேயே சொல்லியாகிவிட்டது எல்லாமே நிகிதாவின் கட்டு மஸ்தான அழகுக்குள் அடங்கிவிட்டது என்று. அதற்கப்புறம் தனியே சொல்ல என்ன இருக்கிறது. இருந்தாலும், அவரையும் அழ வைக்கிறார் இயக்குனர். அவர் ஒரு புறம் அழுது கொண்டிருக்க, எந்த ரசிகர்தான் நிகிஷாவின் கன்னத்தை பார்த்திருப்பார்? அந்த கடற்கரையில் அவர் ஒரு குதிரை மேலேறி சவாரி செய்கிற காட்சியை மட்டுமே கட் பண்ணி 100 நாளைக்கு படமாக ஓட்டலாம்.
இனியாதான் வில்லி. ஆரம்பத்தில் பழனி பஞ்சாமிர்தம் போல இனிப்பாக வருகிறார். கடைசியில் இது பஞ்சாமிர்தம் இல்லை. நஞ்சாமிர்தம் என்று தெரியவர, அந்த ட்விஸ்ட் கொஞ்சம் அதிர்ச்சிதான். படத்தின் ஹீரோ வசிஷ்டா கன்னட ஹீரோ. அவரே டப்பிங் பேசியிருக்கிறார். கண்ணை மூடிக் கேட்டால் அர்ஜுன் பேசுவது போல இருக்கிறது. படத்தில் அர்ஜுனின் ஆக்ஷன் வேலையையும் செவ்வனே செய்திருக்கிறார்.
நட்ட நடுராத்திரியில் கோட் அணிந்து கொண்டு கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு ராதாரவி கிளம்புவதை சிரிக்காமல் பார்க்க முடியாது. பட் சீரியஸ் காட்சிம்மா அது.
பெரிசாக லொக்கேஷன் சேஞ்ச் இல்லை. ஆனால் ஒரு சீன் பாக்கியில்லாமல் ரசிக்க வைத்திரக்கும் கேமிராமேன் ஜெய் ஆனந்துக்கு முதல் பாராட்டு. வெகு காலம் கழித்து சிம்ரனை ஸ்கிரீனில் பார்க்க முடிந்தது. கம்பீரமான போலீஸ் அதிகாரி. அவருக்கென மெனக்கெட்டு ஒரு பைட் சீன் வைத்திருக்கிறார்கள். விஜயசாந்தி லெவலுக்கு தாவி பறந்திருக்கிறார். ஒரு சிம்ரன்… பல பலவான்கள். நெருப்பு தெறிக்கிறது பைட்.
பாடல்கள் பின்னணி இசை பற்றி அதிகம் அலட்டிக்கொள்ள தேவையில்லை.
கரையோரம்- நிகிஷாவின் புண்ணியத்தில் இதழோரம் ஜொள்ளு!
-ஆர்.எஸ்.அந்தணன்
உங்க விமரிசனத்தில் நிகிஷாவைப்பத்தி நல்லா ‘ஜொள்’லியிருக்கீங்க வாழ்க!
//வெகு காலம் கழித்து சிம்ரனை ஸ்கிரீனில் பார்க்க முடிந்தது. கம்பீரமான போலீஸ் அதிகாரி. அவருக்கென மெனக்கெட்டு ஒரு பைட் சீன் வைத்திருக்கிறார்கள். //
சொந்தப் படத்தில இது கூட இல்லன்ன எப்படி பாஸ்?