நான் தியாகி இல்ல… அதுக்காக துரோகியும் இல்ல! கத்தி பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் உணர்ச்சிமிகு பேச்சு!
ஒருவழியாக கத்தி படத்தின் பாடல் வெளியீட்டு விழா கஷ்ஷ்ஷ்டப்பட்டு நடந்து முடிந்துவிட்டது. ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்திருக்கும் லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் நடைபெறுவதாக அறிவித்திருந்தார்கள். மாலை ஏழு மணிக்கு நிகழ்ச்சி துவங்குவதாக திட்டம். ஆனால் மாலை நான்கு மணியிலிருந்தே ஓட்டலுக்கு வெளியே தன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவிட்டது வேல்முருகனின் தமிழர் வாழ்வுரிமை கட்சியும் இன்னபிற அமைப்புகளும்.
சுமார் ஒரு கி.மீ தொலைவுக்கு வாகனங்கள் நகர முடியாமல் நிற்க, போக்குவரத்தை சீர் செய்வதற்குள் போலீஸ்காரர்கள் விழி பிதுங்கி போனார்கள். சுமார் எட்டு மணிக்கு கூட விழா நடக்கும் ஓட்டலின் நுழைவாயிலை எட்ட முடியவில்லை விஜய்யின் அப்பாவான எஸ்.ஏ.சிக்கு. அவரையே தடுத்து நிறுத்தினார்கள் காவலுக்கு நின்ற போலீஸ் அதிகாரிகள். எப்படியோ? போராடிதான் உள்ளே வந்தார் எஸ்.ஏ.சி. அவர் மட்டுமல்ல, படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரண் அல்லிராஜாவும் அவரது உறவினர்களும் காருக்குள்ளிருந்தபடியே காத்திருந்தார்கள். கார் நகர்ந்தால்தானே? அவரையே கீழே இறங்கி நடக்க வைத்துதான் உள்ளே அழைத்துப் போனார்கள்.
அந்த சின்ன ஹாலுக்குள் ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு நிற்க, அழைப்பிதழ் இருந்தும் பாதி பேர் ஓட்டலுக்கு வெளியே அல்லாடிக் கொண்டிருந்தார்கள். எப்படியோ எஸ்.ஏ.சி, தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, கத்தி படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரண், கலைப்புலி தாணு ஆகியோர் அவரவர் நாற்காலியில் அமர்ந்தார்கள்.
அதுவரை சவ சவ என்று நகர்ந்த விழா, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மைக்கை பிடித்ததும் சற்றே உணர்ச்சிவசமானது. ‘நான் என்னைக்குமே பணத்தை பெரிசா நினைக்கிறவன் இல்ல. சென்னையிலிருக்கிற ஒருத்தன், சென்னைன்னு கூட சொல்ல முடியாது. அதையும் தாண்டி 200 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு கிராமத்திலிருந்த ஒருத்தன், சரியா இங்கிலீஷ் பேச கூட தெரியாதவன் இங்க வந்து கொடி நாட்டுவதா என்று பாலிவுட்டில் பேசினார்கள். அந்த ஒரு காரணத்திற்காகதான் நான் இந்திக்கு படம் எடுக்க போனனே ஒழிய நிறைய பணம் வரும் என்பதற்காக அல்ல. எனக்கு தமிழ் படங்களை எடுப்பதுதான் பிடிக்கும். எனக்கும் தமிழ் உணர்வு இருக்கிறது. எனக்கும் தமிழ் ரத்தம்தான் ஒடுகிறது. நானும் சுத்த்த தமிழன்தான். பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் நான் நல்ல நட்பில்தான் இருக்கிறேன். ரிலையன்ஸ் நிறுவனமும் எனக்கு அப்படிதான். நானும் சரி, விஜய் சாரும் சரி. எப்பவுமே பணத்தில் பின்னால் ஓடுறவங்க இல்ல.
கத்தி படத்தின் தொடர் வேலைகள் காரணமா இருந்ததால் போன வாரம் எனக்கு திடீர்னு உடல் நலக்குறைவு ஏற்பட்டுச்சு. ஆம்புலன்ஸ் கிராஸ் ஆகும்போது பார்த்துருக்கேன். அதே ஆம்புலன்சில் நான் போவேன் என்று நினைத்துக் கூட பார்த்ததில்ல. நான் மயங்கி விழுந்ததும் என்னை ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டு போனவர் விஜய்சார்தான். நான் மயங்கி கிடந்த நிலையில் டாக்டர் என்னை தட்டி, அவர் யார் தெரியுதா என்று கேட்டார். நான் பார்த்த திசையில் விஜய்தான் இருந்தார். அவரை தெரியலேன்னு நான் சொன்னேன்னா என் மகன் கூட என்னை அடிக்க வருவான் என்றார் முருகதாஸ்.
அதற்கப்புறம் மைக்கை பிடித்தார் விஜய். உள்ளே திரண்டிருந்த ஏராளமான ரசிகர்கள் அவரை சில நிமிஷங்கள் பேசவே விடவில்லை. தலைவா.. என்று கூச்சலிட்டபடியே இருந்தார்கள். அதற்கப்புறம் கூச்சல் அடங்கியதும் பேச ஆரம்பித்தார் அவர்.
இவ்ளோ நாளோட உழைப்பு இப்போ ஆடியோ பங்ஷன் வரைக்கும் வந்திருக்கிறது சந்தோஷமா இருக்கு. பொதுவா என் படத்தை பற்றி நானே பெரிசா சொல்லி பழக்கமில்ல. எனக்கும் சரி, முருகதாஸ் சாருக்கும் சரி. ரெண்டு பேர் லைஃப்லையும் இது ரொம்ப முக்கியமான படமா இருக்கும்னு நினைக்கிறேன். இந்த கத்தி படத்தை எடுக்கிறது எல்லாரும் சண்டை போட்டுக்கணும் என்பதற்காக இல்ல. எல்லாரும் சண்டை சச்சரவுகளை மறந்து சந்தோஷமா இருக்கணும்னுதான். எந்த மக்களுக்கும் ஆதரவாகவோ எதிராகவோ இந்த படத்தை நாங்க எடுக்கல. நான் என்னை தியாகின்னு சொல்லிக்க மாட்டேன். அதே நேரத்துல சத்தியமா நான் துரோகியும் இல்ல. .ஏன்னா எங்கிட்ட நிறைய பேரு வந்து இதை பற்றி ஏன் பேச மாட்டேங்கிறீங்க என்று கேட்டாங்க. இது பற்றி தயாரிப்பாளர்கள்தான் பேசணும்னு நினைச்சேன். அவங்க பேசிட்டாங்க.
உண்மைக்கு விளக்கம் கொடுத்தா அது தெளிவா இருக்கும். அதுவே வதந்திக்கு விளக்கம் கொடுத்தா அதுவே உண்மைன்னு ஆகிரும். இது தமிழ்நாடு. நான் தமிழன். ஒரு ஜோசியக்காரர் சொல்வார், ஐம்பது வயசு வரைக்கும் அப்டி இப்டி இருக்கும். ஐம்பது வயசுக்கு பிறகு…? அதுவே பழகிரும்னு. சரி… அதை விடுங்க. கத்தி படம் கண்டிப்பா தீபாவளிக்கு வரும். துப்பாக்கியை விட நல்லாயிருக்கும். நீங்க ரசிக்கணும் என்றார் விஜய்.
இறுதியாக இரண்டே வரிகளில் நச்சென்று தன் பேச்சை நிறைவு செய்தார் சுபாஷ்கரண் அல்லி ராஜா. அதுவும் எப்படி தெரியுமா? வைரமுத்துவின் ஒரு பாடலை நாலு வரிகள் பாடி.
பசுவினை பாம்பென்று சாட்சி சொல்ல முடியும்…
காம்பினில் விஷமென்ன கறக்கவா முடியும்?
யாருக்கோ என்னவோ சொல்றாங்க. புரிஞ்சவங்களுக்கு புரிஞ்சா சரி!