எந்த ஹீரோவுக்கும் கதை அறிவே இல்லை! போட்டு தாக்கிய தயாரிப்பாளர் சங்க தலைவர்!
பிரபல திரைப்பட விமர்சகர் கேபிள் சங்கர் இயக்கிய ‘தொட்டால் தொடரும்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை சத்யம் வளாகத்தில் நடைபெற்றது. தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார் உள்ளிட்ட பல்வேறு திரைப்பட பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள். கலந்து கொண்ட அத்தனை பேரும், கேபிளின் விமர்சன அறிவை பாராட்டியதோடு படத்தின் பாடல்களையும் சிலாகித்துவிட்டு போனார்கள். ஏனோ சற்று உணர்ச்சிவசப்பட்ட நிலையிலேயே இருந்தார் தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார். அவரும் பேசும்போது உபயோகித்த சில வார்த்தைகள், கோடம்பாக்கத்தில் பல்வேறு பிரிவை சேர்ந்த சினிமாக்காரர்களுக்கு ‘ச…ர்ரியான’ மாட்டு ஊசி!
அப்படியென்ன பேசினார் அவர்?
தயாரிப்பாளர்களில் பலர் முன்னணி ஹீரோக்களின் கால்ஷீட்டுக்காக காத்திருக்கிறார்கள். அவர்களும் கொஞ்சம் கூட நன்றியில்லாமல் நேற்று வந்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கால்ஷீட் கொடுக்கிறார்கள். பணத்திற்காக மட்டுமே இப்படி செய்யும் அவர்களின் செயலை என்னவென்று சொல்வது? இப்படிப்பட்ட ஹீரோக்களின் கால்ஷீட்டுக்காக காத்திருந்து படம் எடுக்கிறவர்கள் எச்சில் இலையில் இருக்கிற சாப்பாட்டை வழித்து சாப்பிடுவதற்கு சமம்! என்றார் ஆக்ரோஷமாக.
விஷயத்தை அதோடு விட்டாரா?
‘இன்று சிறு படங்களில்தான் நல்ல கதை இருக்கிறது. அப்படிப்பட்ட படங்கள்தான் பெரிய அளவில் ஹிட்டாகிறது. ஆனால் பெரிய ஹீரோக்கள் நடிக்கும் படங்களில் அந்த ஹீரோக்கள் கதையில் தலையிட்டு ‘இதை மாத்து, அதை மாத்து’ என்கிறார்கள். இதனால் கதையும் கெட்டுப் போய் படமும் ஓடுவதில்லை. எந்த ஹீரோவுக்கும் கதை அறிவே இல்லை’ என்று போட்டு தாக்க ஆரம்பித்துவிட்டார்.
நல்லவேளையாக தொட்டால் தொடரும் படத்தின் தயாரிப்பாளர் துவார் சந்திரசேகர் சிறு ஹீரோக்களுக்கும், நல்ல கதையோடு வருகிற அறிமுக இயக்குனர்களுக்கும் வாய்ப்பளிக்கிறார். இதற்கு முன் நான்கு படங்களை தயாரித்தும் அவர் எப்படி சிரித்த முகத்தோடு இருக்கிறார் என்பதே ஆச்சர்யமாக இருக்கிறது என்று கூறி முடித்தார்.