மூன்றரை லட்சம் பாக்கி! ஹீரோவை மன்னிக்குமா கிஷோரின் ஆத்மா?
இருக்கும் போதும் புகழ், இறந்த பின்பும் புகழ், என்று வாழ்வாங்கு வாழ்வதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டுமல்லவா? அதை கொள்ளை கொள்ளையாக பெற்றிருப்பவர் மறைந்தாலும் வாழ்ந்து கொண்டிருக்கும் எடிட்டர் கிஷோர். சாகிற வயசா இது? என்று தமிழ்நாட்டையே திகைக்க வைத்த பெரு மரணம் அது! ஈரம், ஆடுகளம், பயணம், எங்கேயும் எப்போதும், காஞ்சனா, நெடுஞ்சாலை, விசாரணை என்று கிஷோர் கடந்து வந்த படங்கள் ஒவ்வொன்றும் அழுத்தமானவை. அழகானவை. வெற்றிக்கோட்டை தொட்டவை. விசாரணை படத்திற்காக வேலை செய்து கொண்டிருந்த போதுதான் அவர் மரணத்தை தழுவியதாக கூறுகிறார்கள்.
2015 ம் ஆண்டுக்கான தேசிய விருது பட்டியலில் கிஷோருக்கும் அழுத்தமான இடம் கிடைத்திருக்கிறது. ஒட்டுமொத்த தமிழ்சினிமா படவுலகமும் கிஷோருக்கு விருது கிடைத்திருப்பது குறித்து தங்கள் மகிழ்சியை பரிமாறிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், ஒரு விசும்பல் சப்தம் மட்டும் ஒருவர் காதுக்கும் கேட்காமல் போனது துரதிருஷ்டம்தான். அந்த விசும்பலுக்குரியவர் கிஷோரின் அப்பா தியாகராஜன். 73 வயதான இவர் தன் மனைவியுடன் சொந்த வீடு கூட இல்லாமல் சிரமப்பட்டு வருகிறார்.
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் குமரகுப்பத்தில் வசித்து வருகிறார் தியாகராஜன். புதிதாக வீடு கட்டலாம் என்று இருந்த வீட்டை இடித்தான் கிஷோர். அதற்கப்புறம்தான் அவன் மரணம் நிகழ்ந்தது. இடித்த இடத்தில் வீடு கட்ட வேண்டும் என்றால் பணம் வேண்டும். ஆனால் நிர்கதியாக நிற்கிறார் தியாகராஜன். இந்த நேரத்தில்தான் அந்த கொடுமையான செய்தியும் தெரிய வந்திருக்கிறது. ஒரு பிரபல ஹீரோ தான் தயாரித்த படத்திற்காக கிஷோருக்கு மூன்றரை லட்ச ரூபாய் பணம் தர வேண்டுமாம். அதான் கிஷோர் இறந்துவிட்டாரே? அப்புறம் ஏன் கொடுக்க வேண்டும் என்று நினைத்திருக்கலாம். இன்று வரை அந்த பணம் அவரது தந்தைக்கு போய் சேரவில்லையாம்.
மாலை பொன்னாடைகள் பூச்செண்டுகள் வாழ்த்து அட்டைகள் என்று வீடு நிரம்பியிருக்கலாம். எல்லாவற்றுக்கும் உரியவர் பட்டினியாக இருக்கிறாரே, ஒரு நாலு இட்லி எவனாவது வாங்கிக் கொடுத்தீங்களாடா? என்று எம்.ஆர்.ராதா வாய்சில் கேட்க தோன்றுகிறது.
என்ன செய்வது? இதுதாண்டா சினிமா!
Dhanush???