கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 07 ஆர்.எஸ்.அந்தணன் ஸ்ரீதேவியின் கற்பை காப்பாற்றிய பாக்யராஜ்!

“நான் எந்த சீன் சொன்னாலும் அதை அப்படியே ஆமோதிக்கிறாங்க. இது தப்புன்னு சொல்லவும், ஏன் தப்புன்னு ஆர்க்யூ பண்ணவும் யாருமே இல்லை. அதனால்தான் உங்களை கூப்பிட்டு வரச்சொன்னேன்” என்றாராம் ஷங்கர் செந்தமிழனிடம். பிறகு ‘அந்நியன்’ படத்தின் இணை இயக்குனராக பணியாற்றினார் செந்தமிழன். ஷங்கரிடம் இருந்த இந்த பக்குவம் இன்று பல இயக்குனர்களிடம் இல்லை என்பது வேறு விஷயம். ஆனால் இந்த அணுகுமுறைதான் ஷங்கரை இன்னும் வெற்றிப்பட இயக்குனராகவே வைத்திருக்கிறது.

ஷங்கருடன் ஒரு உதவி இயக்குனரை போலதான் உற்சாகமாக பணியாற்றினார் மறைந்த எழுத்தாளர் சுஜாதா. ஷங்கரின் கதை விவாதத்தில் மட்டுமல்ல, எடுத்த காட்சிகளை திரையில் பார்த்து அதில் கரெக்ஷன் சொல்லித் திருத்துகிற அளவுக்கு அவரது பங்கு மிக மிக முக்கியமானதாக இருந்தது. இது ஷங்கர் யூனிட் என்று ஒருபோதும் அவர் பிரமிப்பு காட்டியதில்லை. மிகப்பெரிய எழுத்தாளர் என்று ஷங்கரும் நான்கடி தள்ளி நின்று பழகவில்லை. தேக்கடிக்கு ஒரு முறை கதை விவாதத்துக்காக போயிருந்தோம். அப்படியே வேறு விஷயத்தை நோக்கி டாபிக் போய்விட்டது. சிறிது நேரம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சுஜாதா சார், இப்போ உங்க எல்லாருக்கும் அடிவிழப் போகுது. வந்த வேலையை விட்டுட்டு என்ன பண்ணிட்டு இருக்கீங்க என்று செல்லமாக கோபித்துக் கொண்டதை இப்ப நினைச்சாலும் நெகிழ்ச்சியா இருக்கு என்கிறார் செந்தமிழன்.

பாரதிராஜாவிடம் பணியாற்றிக் கொண்டிருந்த போது பாக்யராஜும் இப்படிதான் சொல்ல வந்ததை தயங்காமல் சொல்லிவிடுகிற அளவுக்கு தைரியசாலியாக இருந்தார். அவ்வளவு ஏன்? இவர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக சேர்ந்த முதல் படத்திலேயே அவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். எந்த காட்சிக்காக தெரியுமா?

பதினாறு வயதினிலே படத்தில் ஸ்ரீதேவியை காதலிக்கும் டாக்டர் அவரை எப்படியாவது அனுபவித்துவிட்டு விலகி விட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருப்பார். அது தெரியாத ஸ்ரீதேவி டாக்டரை உண்மையாக காதலிப்பார். ஒரு சந்தர்ப்பத்தில் தந்திரமாக ஸ்ரீதேவியை ஏமாற்றி தனது வேட்கையை அவர் முடித்துக் கொள்வது போல காட்சி. இதில் தனது கற்பை ஸ்ரீதேவி பறி கொடுப்பது போலதான் கதையை அமைத்திருந்தார் பாரதிராஜா. அந்த காட்சியை வேறு விதமாக மக்களுக்கு தெரியப்படுத்துகிற விதத்தில் ஒரு இளநீர் வியாபாரி இளநீரை சீவிக் கொண்டிருப்பது போலவும் ஒவ்வொரு சீவலுக்கும் ஒவ்வொரு துணியாக அவிழ்வது போலவும் காட்சியை அமைத்திருந்தார். கடைசியாக ஸ்ட்டிரா போட்டு இளநீரை ஒருவர் உறிஞ்சுவது போல தொடருமாம் அது.

இப்படி ஒரு காட்சியை வைத்தால் இந்த படத்தை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் இது நம் கலாச்சாரம் சார்ந்த விஷயம். கதாநாயகி தனது கற்பை இழந்துவிட்டு பின்பு ஹீரோவை கல்யாணம் செய்து கொள்வது போல காட்சி இருந்தால் அது சரியான முடிவாக இருக்காது என்று வாதிட்ட பாக்யராஜ், அந்த காட்சியை எப்படி எடுக்க வேண்டும் என்பதையும் கூறினாராம். இளநீரை சீவும்போதே அது கைதவறி கீழே விழுந்து உருண்டு ஓடிவிடுவது போல ஒரு காட்சியை எடுத்து படத்துடன் சேர்த்து கதையையே மாற்றினார் பாக்யராஜ்.

பாக்யராஜ் படங்களில் கதை விவாதம் எப்படியிருக்கும்? தனது உதவி இயக்குனர்களுடன் அமர்ந்து கதை பேசுவார். பல காட்சிகளை அப்போது கலகலப்பாக உருவாக்குவார்கள் இவர்கள். சுமார் நாலைந்து நாட்கள் இப்படியே பேசிக் கொண்டிருக்கும் தன் உதவியாளர்களுக்கு திடீரென்று லீவ் கொடுப்பார் பாக்யராஜ். ஒரு நாலைஞ்சு நாள் கழிச்சு வாங்கப்பா என்று செலவுக்கும் பணத்தை கொடுத்து அனுப்பிவிடுவார். வெவ்வேறு வேலைகளில் பிசியாகிவிட்டு என்ன பேசினோம் என்பதையே கிட்டதட்ட மறந்துவிட்டு நிற்பார்கள் அத்தனைபேரும். அப்போது ஒரு பேனாவும் பேப்பரும் கொடுத்து நாலைஞ்சு நாட்களுக்கு முன்னாடி நாம பேசின விஷயத்தை கொஞ்சம் எழுதிக் கொடுங்க என்பார். அவர்கள் எழுதிக் கொடுக்கிற சீன்களை மட்டுமே படத்தில் சேர்த்துக் கொள்வார். மற்றவை அப்படியே குப்பையில்!

இந்த யுக்தியில் ஒரு உளவியல் இருக்கிறது. சுவாரஸ்யமான விஷயங்கள் மட்டுமே மனதில் நிற்கும். மற்றவை மண்டையை கசக்கினாலும் நினைவுக்கு வராது. அப்படி எழுதப்பட்ட காட்சிகள்தான் சுவாரஸ்யமானதாக இருக்கும் என்பது அவரது நம்பிக்கை.

ஏ.ஆர்.முருகதாசிடம் அவரது முதல் படமான தினாவில் இருந்தே பணியாற்றி வருகிறார் சரவணன். ஏழாம் அறிவு படத்திலும் சரவணன்தான் இணை இயக்குனர். முருதாசின் ரமணா மிகப்பெரிய வெற்றிப்படம் என்பதும், மாஸ் ஹீரோவான விஜயகாந்த்தை அவரது ரசிகர்களுக்காக எவ்வித காம்ப்ரமைசும் செய்து கொள்ளாமல் க்ளைமாக்சில் கொன்றுவிடுகிற அளவுக்கு வலுவான டைரக்டராக முருகதாஸ் இருந்தார் என்பதும் நாம் அறிந்த விஷயம்தான். அந்த படத்தில் முக்கியமான கேரக்டரில் சிங் ஒருவர் நடித்திருப்பார்.

இந்த சிங் கேரக்டரில் நடிக்க நல்ல நடிகரை தேடிக் கொண்டிருந்தார் முருகதாஸ். அவர் புதியவராக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்பது அவரது விருப்பம். ஆனால் முருகதாஸ் நினைத்த மாதிரி ஒருவரும் அமையவில்லை இந்த கேரக்டரில் நடிக்க. கிட்டதட்ட மாதக்கணக்கில் இந்த தேடுதல் முயற்சி தொடர்ந்தது. ஆனால் தன் முயற்சியில் தோல்விதான் கிட்டியது தாசுக்கு. ஒரு கட்டத்தில் சோர்ந்து போன அவர், படப்பிடிப்பில் கண்ணில் தென்பட்ட ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்டுக்கு தாடியை ஒட்ட வைத்து சிங் ஆக்கிவிட வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்தார். அந்த நேரத்தில்தான் சரவணனின் ஒரு வார்த்தை முருகதாசை நிலை குலைய வைத்தது.

சார். இந்த ஆளுக்கு நீங்க அந்த கேரக்டரை கொடுத்திங்கன்னா அந்த கேரக்டரே நாசமாயிரும். நீங்க இப்போ செய்யுற வேலை நடந்து போக அலுப்பு பட்டுக்கிட்டு சித்தப்பா வீட்ல பெண்ணெடுத்த மாதிரி இருக்கு என்று முகத்தில் அடித்தாற் போல சொன்னார். இப்படி ஒரு உதவி இயக்குனர் சொன்ன பிறகு பிடிவாதமாக இருக்க முருகதாஸ் என்ன, முரட்டு ஆசாமியா? சரிப்பா. நீ சொன்ன மாதிரியே அந்த கேரக்டருக்கு இன்னும் கொஞ்ச நாள் ஆளை தேடுவோம் என்றார். எப்படியோ பஞ்சாபிலிருந்தே ஒருவரை கொண்டு வந்து நடிக்க வைக்க, படத்தில் அந்த கேரக்டர் தனியாக பாராட்டப்பட்டது பலராலும்.

நாம் சொல்வதை ஏற்றுக் கொள்கிறாரோ, இல்லையோ. சொல்ல வேண்டியதை சொல்லிவிடுவோம். அதனால் என்ன ஆனாலும் சரி என்று நினைக்கிறவர்தான் உண்மையான உதவி இயக்குனராக இருக்க முடியும். இதே சரவணன் முருகதாசின் கஜினி படத்திலும் ஒரு கருத்தை சொன்னார். ஆனால் அதை ஏற்றுக் கொள்ளாத டைரக்டர், பின்பு இதே கதையை இந்தியில் எடுக்கும்போது சரவணன் சொன்ன விஷயத்தைதான் செய்தார். அது?

கஜினி படத்தில் எப்படி சூர்யாவுக்கு இரண்டு வேடங்கள் போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினோமோ, அதே மாதிரி அப்படத்தில் நடிக்கும் வில்லனையும் இரண்டு வேடங்களில் நடிக்க வைக்க வேண்டும் என்று விரும்பினார் முருகதாஸ். பொதுவாக வில்லன்களை இரண்டு வேடங்களில் யாரும் நடிக்க வைத்ததும் இல்லை. தமது எண்ணம் புதுசாக இருக்கும். மற்றவர்களால் பாராட்டப்படும் என்று நினைத்தார் முருகதாஸ். ஆனால் சரவணன், சார் இது சரிப்பட்டு வராது. வேண்டாம் என்றார். பிடிவாதமாக தான் நினைத்ததைதான் செய்தார் முருகதாஸ். ஆனால் ரசிகர்களின் கருத்தும், பத்திரிகைகளின் விமர்சனங்களும் சரவணன் சொன்னதைதான் பிரதிபலித்தன.

இந்தியில் அமீர்கான் நடிக்க, கஜினியை ரீமேக் செய்த முருகதாஸ் தமிழில் செய்த இந்த தவறை திருத்திக் கொண்டார் என்பது சுவாரஸ்யமான ஒரு விஷயம்.

இந்த தொடர் கட்டுரையில் நான் ஒரே விஷயத்தை வலியுறுத்த பல சம்பவங்களை சொல்லி வருகிறேன். அதற்கு காரணம், ஒவ்வொரு இயக்குனர்களும் எப்படியிருந்தாலும் உதவி இயக்குனர்கள் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கான உதாரணம்தான்.

பாரதிராஜாவிடம் பணியாற்றிய அன்பு பற்றி இங்கு சொல்ல வேண்டும். உதவி இயக்குனர்களின் உரிமையை பற்றி பேசுகிற போது தாஜ்மஹால் படத்திலிருந்து இன்னொரு விஷயத்தையும் இங்கே சொல்ல தோன்றுகிறது.

இப்படத்தில் பக்கத்து ஊரிலிருக்கும் காதலி ரியாசென்னை பார்க்க நள்ளிரவில் ஆற்றுக்குள் மூழ்கி மூழ்கி செல்வார்கள் ஹீரோவான மனோஜும் அவரது கூட்டாளிகள் சிலரும். அப்படி சென்று அவரை சந்திக்கும்போது ஊர்க்காரர்கள் பார்த்துவிடுவார்கள். ஊர் விட்டு ஊர் வந்து காதலிப்பதா என்று கோபமுறும் அவர்கள், கூட்டமாக விரட்ட மனோஜும், அவருடன் சென்ற அவரது தோழர்களும் தண்ணீருக்குள் சட்டென்று குதித்து உள்ளேயே மூழ்கி மூழ்கி தங்கள் ஊருக்கு வந்து சேர்வார்கள். இது சீன். இவர்களை துரத்தி வரும் அசலு£ர்க் காரர்கள் தங்கள் வாயில் கத்தியை வைத்துக் கொண்டு அப்படியே தண்ணீரில் நீந்தியபடி வருவார்கள்.

துரத்தி வரும் இவர்களைதான் படம் பிடித்துக் கொண்டிருந்தார் பாரதிராஜா. எல்லாரையும் கழுத்தளவு தண்ணீரில் நிற்க வைத்துவிட்டு காட்சியை எடுக்க தயாராகிவிட்டார். ஸ்டார்ட், கேமிரா என்று உத்தரவும் கொடுத்துவிட்டார். அந்த நேரத்தில்தான் சார் ஒரு நிமிஷம் என்று பாரதிராஜாவின் உத்தரவுக்கு குறுக்கே புகுந்து ஆற்றுக்குள் இறங்கி ஓடினார் அன்பு. கையோடு எடுத்து சென்ற கத்தியை தண்ணீரில் நிற்கும் அந்த வாலிபரின் வாயில் கவ்விக் கொள்ள செய்துவிட்டு மேலேறி வர, செம பிடி பிடித்துக் கொண்டார் பாரதிராஜா. யோவ்… அறிவிருக்கா உனக்கு? அவன் வாயில நான் கத்திய வைக்க சொன்னேனா என்று கோபத்தில் தாண்டவம் ஆட, ஆடிப்போனார் அன்பு.

இல்ல சார். போன ஷாட்ல அவரு வாயில கத்தி இருந்திச்சு. கன்ட்டினியுட்டி மிஸ்சாவுதேன்னு… என்று அவர் இழுக்க, மற்றவர்கள் கொல்லென்று சிரித்தார்கள். வேறொன்றுமில்லை. அப்போது பாரதிராஜா எடுத்துக் கொண்டிருந்தது அவர்களை அல்ல. அந்த வாலிபர்கள் தண்ணீரில் மூழ்கி செல்லும்போது மேலே தோன்றுமே நீர்க்குமிழிகள்…. இதைதான் எடுத்துக் கொண்டிருந்தார் அவர்.

ஆனால் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை அன்பு. கண் எதிரே ஒரு தப்பு நடக்குதுன்னு தெரிஞ்சா அதை சொல்லிடணும். அவங்க தப்பா நினைச்சாலும் சரி. அந்த படம் முழுக்க நான் டைரக்டர்கிட்ட நிறைய திட்டு வாங்கியிருக்கேன். சில நேரம் ஓங்கி அடித்தாலும் அடிப்பார். ஆனால் அவ்வளவும் நான் செய்து கொண்டிருக்கிற வேலைக்காக என்றால் அதுதான் சந்தோஷம் என்கிறார் அன்பு.

இது எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம் இன்னொன்று. சம்பளம். படப்பிடிப்பில் தினசரி பேட்டாவை வாங்கிவிடுகிற உதவி இயக்குனர்களுக்கு தனியாக பேசப்பட்ட சம்பளம் மட்டும் முழுமையாக வந்து சேராது. எல்லா தயாரிப்பு நிறுவனங்களும் அப்படியல்ல என்றாலும், சில நிறுவனங்களில் கடைசி நேரத்தில் கை விரித்துவிடுவார்கள். இப்படியெல்லாம் நடந்துவிடக் கூடாது என்பதற்காகவே இயக்குனர் ஒரு யுக்தி செய்வார். தன்னுடைய சம்பளத்தை பேசும் போதே உதவி இயக்குனர்களுக்குமான சம்பளத்தையும் பேசுவார். அதை என் சம்பளத்திலிருந்தே கொடுத்துவிடுகிறேன். நீங்கள் எனக்கு கொடுக்கும் போது அதையும் சேர்த்துக் கொடுத்துவிடுங்களேன் என்பார். அப்படி பேசி வாங்கப்படுகிற சம்பளம் உதவி இயக்குனர்களின் கைக்கு போகிறதா என்றால், பெரும்பாலான இயக்குனர்கள் அதையும் ஸ்வாகா செய்துவிடுகிறார்கள் என்பதுதான் வேதனை தரும் உண்மை.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
2015 வரைக்கும் இல்லவே இல்ல… இது அனுஷ்கா அப்டேட்!

ஐம்பது கோடிக்கும் மேல் ஒரு படத்திற்கு செலவு செய்ய இறங்குகிறார்கள் என்றால், அது ஹீரோவை மையப்படுத்திய கதையாகதான் இருக்கும். இந்த விதியை ஜஸ்ட் லைக் தட் உடைத்து...

Close