கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 09 ஆயிரத்தில் ஒருவனும் அழுக்கு லுங்கியும்…
துணை இயக்குனர் -1
இவரது பணி காஸ்ட்யூம்களை கவனிப்பது. படத்தில் கண்ணுக்கு தெரியாமல் எத்தனையோ தவறுகள் நடக்கலாம். ஆனால் இந்த டிபார்ட்மென்ட்டில் தவறு ஏற்பட்டால் மட்டும் பளிச்சென்று கண்ணுக்கு தெரியும். அதனால் இவரது பணி மற்றவர்களை விட சற்று கூடுதல்தான். படத்தின் காஸ்ட்யூமருடன் இணைந்து பணியாற்றுவது இவரது வேலை. கதையை கேட்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் அந்த கதைக்குள்ளேயே கரைந்து போயிருக்க வேண்டும் இவர். திரைக்கதையி¢ன் போக்கில் அந்த கதாபாத்திரம் எப்படியெல்லாம் மாறுகிறது என்பதையெல்லாம் எந்நேரமும் அசை போட்டுக் கொண்டேயிருக்க வேண்டிய நபர் இவர்தான்.
காஸ்ட்யூம் அசிஸ்டென்ட் பற்றி பேசுகிற இந்த நேரத்தில் படப்பிடிப்பில் நடந்த ஒரு சம்பவத்தை சொல்வது மிகவும் முக்கியம். பாபா படத்தின் படப்பிடிப்பு. ரஜினியுடன் கவுண்டமணி, கருணாஸ் என்று பெரிய கூட்டமே பிரேமுக்குள் இருக்கும் எப்போதும். இரண்டு மாதத்திற்கு முன்பு சென்னையில் எடுத்த ஒரு காட்சியின் தொடர்ச்சியை ஐதராபாத்தில் ஒரு செட் போட்டு அங்கே எடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்த சீனை இப்போதும் திரையில் பார்ப்பவர்கள் கொஞ்சம் உற்றுப்பார்த்தால் தெரியும். நாலைந்து நடிகர்களுக்கு பின்னால் நின்று கொண்டு எக்கி எக்கி டயலாக் பேசிக் கொண்டிருப்பார் கருணாஸ். எல்லாரும் அறிந்த நடிகர்தானே. இவரை எதற்கு பின்னுக்கு தள்ள வேண்டும்? அந்த டயலாக்கை அவர் முன்னால் நின்றே பேசியிருக்கலாமே, ஏன் செய்யவில்லை? கொஞ்சம் ஊன்றி பார்க்கிற ரசிகனாக இருந்தால் அவன் மனசுக்குள் இத்தனை கேள்விகளும் ஓடியிருக்கும். இங்குதான் இருக்கிறது பெரிய பிரளயமும் பின்னணியில் புதைந்திருக்கும் சுவாரஸ்யமும்.
மஞ்சள் கலரில் ஒரு சட்டை அணிந்திருப்பார் கருணாஸ். அதில் சிவப்பு வண்ணத்தில் கோடுகள் இருக்கும். இந்த சட்டையை இவர் அணிந்து நடித்த காட்சியின் கன்ட்டினியூடிதான் ஐதராபாத்தில் எடுக்கப்பட்டது. உதவி இயக்குனர்கள் அத்தனை பேரும் செட் பிராப்பர்ட்டி என்று சொல்லப்படுகிற கன்ட்னியூடி ஐட்டங்களோடு போய் சேர்ந்துவிட்டார்கள். காலையில் எடுக்க வேண்டிய காட்சிகளுக்கு தேவையான பொருட்களை எடுத்து வைக்கும் போதுதான் கருணாஸ் அணிந்து கொள்ள வேண்டிய சட்டையை சென்னையிலேயே தவற விட்டிருப்பது தெரிய வந்தது உதவி இயக்குனர்களுக்கு.
காஸ்ட்யூம் கன்ட்டினியூடி பார்க்கும் உதவி இயக்குனருக்கு ரத்தமே சுண்டிப் போகிற அளவுக்கு பயம். என்ன செய்வது? அந்த இரவுக்குள் இதே டிசைனில் துணி கிடைத்தால் கூடவே வந்திருக்கும் கம்பெனி காஸ்ட்யூமரிடம் சொல்லி தைத்துவிடலாம். அவரது துரதிருஷ்டம் இரவு பத்து மணி வரை ஊரெல்லாம் அலைந்து திரிந்து தேடியும் கிடைக்கவே இல்லை அந்த டிசைன். வேறு வழியில்லாமல் மஞ்சள் கலரில் ஒரு சட்டையை வாங்கினார் புத்திசாலி உதவி இயக்குனர். அதில் சிவப்பு கலர் பெயின்ட்டை கொண்டு கோடுகள் வரைந்தார். என்னதான் மெனக்கட்டு வரைந்தாலும் பர்பெக்ஷன் பல்லை இளித்தது.
காலையில் கருணாசை சந்தித்து தனிப்பட்ட முறையில் கண்ணீர் சிந்திய அசிஸ்டென்ட், அண்ணே… உங்களை நாலு பேருக்கு பின்னாடி நிக்க வச்சுடுறேன். (இந்த சதிக்கு இணை இயக்குனரும் உடந்தை. வேறு வழி?) இந்த சட்டையை போட்டுகிட்டு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்கண்ணே. டைரக்டருக்கு தெரிஞ்சா பீசை புடுங்கிடுவாரு என்றார் கெஞ்சலாக. சூப்பர் ஸ்டார் பக்கத்தில் நின்று பேசுகிற வாய்ப்பை கெடுத்தாரே என்று கோபப்பட்டாலும், தவிர்க்க முடியாமல் ஒப்புக் கொண்டார் கருணாஸ். இப்போது புரிகிறதா காஸ்ட்யூம் பொறுப்பை கவனிக்கிற உதவி இயக்குனரின் வேலை?
படப்பிடிப்பு நேரத்தில் மட்டுமல்ல, படப்பிடிப்பு நடைபெறாத காலங்களில் கூட இவர் கண்களில் விளக்கெண்ணையை ஊற்றிக் கொண்டு கவனிக்க வேண்டும். ஒரே சட்டையை இரண்டுக்கு மேற்பட்ட செட்கள் தைத்து வைத்துக் கொள்வது புத்திசாலித்தனம். (பட்ஜெட்டும் தயாரிப்பாளரும் இடம் கொடுத்தால்) பட்ஜெட் இடம் கொடுக்கவில்லை என்றால் அந்த சட்டை சமாச்சாரங்களை புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்வது நன்று. ஏனென்றால் சட்டைகள் திருட்டு போனாலோ, டேமேஜ் ஆனாலோ வேறொன்றை தயார் செய்ய பயன்படும் அல்லவா?
இந்த காஸ்ட்யூம் அசிஸ்டென்ட்டுகளுக்கு இன்னும் ஒரு சங்கடம் கூடவே வந்து சேரும். எப்படி தெரியுமா? பாலா, செல்வராகவன் மாதிரி இயக்குனர்கள் படத்தில் வேலை செய்பவர்களை கேட்டால் கதை கதையாக சொல்வார்கள். ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் வேலை பார்த்த ஒரு காஸ்ட்யூம் அசிஸ்டென்ட்டின் அனுபவம் இது. படத்தில் கதாநாயகன் கார்த்திக்குக்கு ஒரே காஸ்ட்யூம்தான். அந்த படத்தை கிட்டதட்ட இரண்டு வருடங்கள் படமாக்கினார் செல்வராகவன்.
படப்பிடிப்பில் இந்த அரை டவுசரையும், லுங்கியையும் அருகில் எடுத்து வந்தாலே அலற ஆரம்பித்தார் கார்த்தி. அத்தனை முடை நாற்றம் அதிலிருந்து. ஒவ்வொரு முறையும் ‘இதை கொஞ்சம் துவைச்சு கொடுக்கக் கூடாதா?’ என்பாராம் உதவி இயக்குனரிடம். ஆனால் செல்வராகவனின் கண்டிஷன் எக்காரணத்தை முன்னிட்டும் அந்த காஸ்ட்யூம்களை துவைக்கக் கூடாது என்பது. கார்த்தியின் கெஞ்சலை கண்டு மனமிரங்கிய உதவி இயக்குனர் ஒரு பிரேக் காலத்தில் அந்த சமாச்சாரங்களை துவைத்து வைத்துவிட்டார். மன மகிழ்ச்சியோடு கார்த்தி அதை அணிந்து கொண்டு எதிரே வர, ருத்ர தாண்டவம் ஆடினார் செல்வா. ‘என்னை கேட்காம ஏன்யா துவைச்சீங்க?’ என்று கடிந்து கொண்டதோடு, அந்த லுங்கியையும் டவுசரையும் மண்ணில் போட்டு புரட்டி எடுத்து பின்பு போட சொன்னார் கார்த்தியை.
இந்த சம்பவத்தை கேட்டுவிட்டு கார்த்தியின் மீது அவ்வளவு கோபமா செல்வராகவனுக்கு என்று கேட்க கூடாது. ஆயிரத்தில் ஒருவன் படத்தை பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும். ஏன் அந்த சட்டை அழுக்காக இருக்க வேண்டும் என்ற காரணம். ஒரு கூலித் தொழிலாளியாக ரீமாசென் ஆன்ட்ரியாவுடன் காடு மேடெல்லாம் சுற்றி திரிந்திருப்பார் கார்த்தி.
சரி விஷயத்துக்கு வருவோம். அவுட்டோர் போகும்போது படப்பிடிப்பு சாதனங்களை ஒரு வேனில் ஏற்றி அனுப்புவார்கள். இது காரைவிட பெரிசாகவும், லாரியை விட சிறிசாகவும் இருக்கும். பெட் ஃபோர்டு என்று சொல்லப்படும் அந்த வேனில் மற்ற பொருட்களோடு காஸ்ட்யூம்களையும் அனுப்பி வைப்பது அவ்வளவு சேஃப்ட்டியில்லை. சில பெட்போர்டுகளில் மிஸ்டர் எலியாரும் குடும்பம் நடத்திக் கொண்டிருப்பார் என்பதால், காஸ்ட்யூம்களை கவனிக்கும் உதவி இயக்குனர் அதை தன்னுடன் பஸ்சிலோ ரயிலிலோ எடுத்துச் செல்வது உகந்த செயல் என்கிறார்கள் எலிக்கு துணியை பறிகொடுத்த முன்னோடிகள்!
(தொடர்ந்து கூப்பிடுவேன்…)
எச்சரிக்கை – இந்த கட்டுரையும் இனி வரப்போகும் கட்டுரையின் சாராம்சங்களும் தமிழ்சினிமா கலைஞர்களிடமிருந்து திரட்டப்பட்டவையே. இதில் ஏதேனும் திருத்தங்கள் மற்றும் கருத்து மாறுபாடுகள் இருப்பின் anthananpro@gmail.com ல் தெரிவிக்கவும். ஏற்புடையதெனில் திருத்திக் கொள்கிறேன். நன்றி
எச்சரிக்கை 2 – இந்த கட்டுரையை என் அனுமதியின்றி யாரும் மறு பிரசுரம் செய்யவோ, வெளியிடவோ அனுமதியில்லை.