சீரியல் துவக்கவிழா! தனியார் தொலைக்காட்சியை வாங்கு வாங்கென வாங்கிய லிங்குசாமி

அபிராமி ராமநாதன் தயாரிப்பில் வெளிவந்த படம்தான் ‘தி பிளட் ஸ்டோன்’ என்ற ஆங்கில படம். இதில் ரஜினி ஹீரோவாக நடித்திருந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினி ஒரு ஹாலிவுட் படத்தில் நடித்திருக்கிறார். அதன் பெயர் தி ப்ளட் ஸ்டோன் என்கிற வரைக்கும்தான் இந்த விஷயம் ரசிகர்களுக்கு பரிச்சயம். ஆனால் அதன் தயாரிப்பாளர் தான்தான் என்கிற தகவலை சொல்லி லேசாக திணறடித்தார் அபிராமி ராமநாதன். இடம் அவரது அபிராமி மால். நிகழ்ச்சி – அவர் Z தமிழ் தொலைக்காட்சிக்காக தயாரிக்கும் புதிய தொடரான ‘சிவ ரகசியம்’ தொடருக்கான பிரஸ்மீட். இந்த தொடருக்கான படப்பிடிப்பை குத்து விளக்கேற்றி துவங்கி வைக்க வந்திருந்தார் இயக்குனர் லிங்குசாமி.

‘சிவன் பற்றிய கதை. என் பெயர் லிங்குசாமி. அதனால் அழைத்திருப்பார்களோ’ என்று லிங்கு சந்தேகம் தெரிவிக்க, ‘உங்க கை ரொம்ப ராசியான கை. அதனால்தான்’ என்றார் ராமநாதன். எத்தனை நாள் எரிச்சலோ, இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த Z தமிழ் தொலைக்காட்சி சி.இ.ஓ க்களை ஒரு பிடி பிடித்தார் லிங்கு. ‘என்னோட கோலி சோடா படத்தை அவங்கதான் வாங்கினாங்க. மஞ்சப்பை படத்தையும் அவங்கதான் வாங்கினாங்க. ஆனால் அந்த ரெண்டு படத்தையும் ரிலீசுக்கு முன்னாடியே வாங்கிக் கொள்ள சொல்லி அவங்ககிட்ட பேச்சு வார்த்தை நடத்தினோம். அவங்க ஒரு ரேட் சொல்ல, நாங்க ஒரு ரேட் சொல்ல… ஒரே இழுபறி’.

‘கடைசியா நான் என் தம்பி போஸ்சிடம், ‘இப்ப எதுவும் பேச வேண்டாம். ரிலீசுக்கு பிறகு தானா தேடி வருவாங்க’ என்று கூறிவிட்டு அடுத்த வேலையை பார்க்க போய்விட்டேன். படம் ரிலீஸ் ஆகி செம ஹிட். அவங்க சொன்ன விலையை விட ரெண்டு மடங்கு கொடுத்து அதே கோலிசோடாவை வாங்கிட்டு போனாங்க. அதே மாதிரிதான் அடுத்ததாக நாங்க ரிலீஸ் செய்த மஞ்ச பை படத்திற்கும் நடந்தது என்று போடு போடென்று போட்டார் லிங்குசாமி. ‘ஜட்ஜ்மென்ட்ல அங்க வேலை பார்க்குற சி.இ.ஓ ரொம்ப வீக் போலிருக்கு’ என்கிற எண்ணத்தை உருவாக்கிவிட்டுதான் ஓய்ந்தார் அவர்.

சரி… சீரியலில் என்ன விசேஷம் என்கிறீர்களா? அது வரும்போதுதான் தெரியும். ஆனால் பூஜையே அமர்க்களம். அபிராமி மாலில் உருவாக்கப்பட்டிருக்கும் ஐஸ் உலகத்தில் ஒரு பனி லிங்கத்தை உருவாக்கியிருந்தார் ராமநாதன். பத்ரிநாத், கேதார்நாத் பனி லிங்கத்திற்கே சவால் விடுகிற மாதிரி ஒரு அழகு. அங்குதான் கிளாப் அடித்து படப்பிடிப்பை துவங்கி வைத்தார் அபிராமி ராமநாதனின் இல்லத்தரசி நல்லம்மை ராமநாதன். இந்த சீரியலுக்கு கதை எழுதுகிறவர் யார் தெரியுமா?

விடாது கருப்பு, மர்ம தேசம் போன்ற அற்புதமான தொடர்களுக்கு ஆணி வேராக இருந்த எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன். அபிராமி ராமநாதன் கேட்டுக் கொண்டதற்காக சுமார் ஒரு வருஷம் இந்த சீரியலுக்காக உழைத்திருக்கிறாராம்.

சிவரகசியத்தின் கதை ரகசியமும் இதுதான்!

Read previous post:
சொந்தப்படம்… நாத்திகர் பாலா ஆத்திகர் ஆனார்?

‘பாய்ஸ்’ படத்தில் செந்தில் செல்வாரே, ‘இம்பிருமேசன்....’ என்று. அதே ஸ்டைலில் இந்த வார்த்தையை படிக்கவும். ‘ரெகும்டேசன்ன்ன்ன்....’ ‘கயல்’ படத்தில் அறிமுகமாகும் ஆனந்திக்குதான் கோடம்பாக்கத்தில் பலத்த ‘ரெகமன்டேஷன்’. இந்த...

Close