ஐயய்யோ நான் பவர் ஸ்டார் சீனிவாசன் ரசிகன் இல்லீங்க! பதறிய மிர்ச்சி சிவா

ஹிட் காம்பினேஷன் என சொல்லப்படுகிற சிவாவும் பவர்ஸ்டார் சீனிவாசனும் இணைந்து நடித்து, மிகவும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள படம் தான் ‘அட்ரா மச்சான் விசிலு’.. ஜீவாவை வைத்து கச்சேரி ஆரம்பம் படத்தை இயக்கிய திரைவண்ணன் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகியாக பெங்களூரை சேர்ந்த நைனா சர்வார் என்பவர் நடித்துள்ளார்.. இவர்களுடன் சென்ராயன், அருண் பாலாஜி, சிங்கமுத்து, மன்சூர் அலிகான், டிபி.கஜேந்திரன், மதுமிதா என பலர் நடித்துள்ளனர். ரகுநந்தன் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

இதில் பங்கேற்ற பவர்ஸ்டார் சீனிவாசன் பேசும்போது, “இங்கே என்னுடைய பொக்கிஷம் என்று சொல்லக்கூடிய தம்பி சிவா வந்திருக்கார்.. இல்லை…இல்லை.. பொக்கிஷம்னு சொல்லக்கூடது.. ஏற்கனவே ஒருத்தர் ‘நீங்கதாண்ணே எங்க பொக்கிஷம்னு என்கிட்டே சொல்லிட்டே இருப்பார். இப்ப அவர் எங்க இருக்கார்னே தெரியல.. அந்தமாதிரி சிவா பாசமான தம்பி.. என்னை எங்க பார்த்தாலும் கட்டிப்பிடிப்பார்.. முந்தி சிம்பு இப்படித்தான் கட்டிப்பிடிச்சார்.. இப்ப சிவா தம்பி அதேமாதிரி பாசத்தை வெளிப்படுத்துறார். கடைசிவரை இந்த பாசம் நிலைக்கனும்னு நான் நினைக்கிறேன்..

இந்தப்படத்தோட தயாரிப்பாளர்கிட்டே கேட்டேன்.. ஏண்ணே நீங்க என்ன பிசினஸ் பண்றீங்கன்னு.. அதுக்கு அவரு கப்பல் விட்ருக்கேன்னு சொன்னார். படத்துல அவர் பணத்தை தண்ணீரா செலவு பண்ணியிருக்கிறதை பார்க்கும்போது அது உண்மையா இருக்கும்னுதான தோணுது. இந்தப்படத்தோட டைரக்டர் திரைவண்ணன் நம்மகிட்ட வேலை வாங்குறது தெரியாத மாதிரியே நடிக்க வச்சுருவார். ஆனா மானிட்டர்ல பார்த்த சூப்பரா வந்திருக்கும். ரொம்ப திறமையானவர்.. அதனால வருங்காலத்துல அவருக்கு நானே ஒரு படம் கொடுக்கலாம்னு இருக்கேன்.

இந்தப்படத்துல நான் ஒரு கருவா இருக்கணும்னு நினைச்சவர் இந்த படத்தோட தயாரிப்பாளர்.. அவர்தான் என் ஆபீஸ் தேடிவந்து அண்ணே இந்தப்படத்துல நடிக்கிறீங்கன்னு சொன்னார்.. அப்படியா படத்தோட பேரு என்னன்னு கேட்டேன்.. ‘சிம்மக்கல் சேகர்’னு சொன்னார். ஏன் தம்பி ‘சிம்மக்கல் சீனு’ன்னு வைங்களேன்னு சொன்னேன்.. சரிண்ணே அப்படியே வச்சுருவோம்னு சொன்னாரு. ஆனா அப்படியே பேர் மாறி, இப்ப ‘அட்ரா மச்சான் விசிலு’ன்னு வச்சுட்டாங்க.. இந்தப்படத்தோட பாடலை கிட்டத்தட்ட பத்து தடவை போடச்சொலி தொடர்ந்து கேட்ருக்கேன்.. அந்த அளவுக்கு ரகுநந்தன் நல்லா மியூசிக் போட்ருக்கார்..

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்துல திகட்ட திகட்ட லட்டு தின்னதுக்கு அப்புறமா இந்தப்படம் வந்துச்சு.. நான் நடிச்ச படங்கள்ல இந்தப்படத்துலதான் நிறைய சந்தோஷமான நிகழ்ச்சிகள் நடந்திருக்கு. இந்தப்படம் வந்தால் எனக்கு ஒரு கிரேடு கூடும்னு நினைக்கிறேன்.

இதுல சுவாரஸ்யமான விஷயம் ஒன்னை சொல்றேன்.. இந்தப்படம் ஆரம்பிச்சப்ப பேப்பர்ல பெரிய சைஸ்ல விளம்பரம் கொடுத்தாங்க.. என் படத்தை பெரிசா போட்டு, தம்பி சிவா படத்தை சின்னதா போட்ருந்தாங்க.. ஒருநாள் தயாரிப்பாளர் கோபி போன்ல கூப்பிட்டு, அண்ணே நமக்கு இன்கம்டாக்ஸ் ஆபீஸ்ல இருந்து லெட்டர் வந்திருக்கு.. இத்தனை கோடி கட்டணும்னு சொன்னார். அய்யய்யோ.. என்ன தம்பி நீங்கதான தயாரிப்பாளர்னு பதறிட்டேன்.. அதாவது இந்தப்படத்தை நான்தான் தயாரிக்கிறேன்னு இன்கம்டாக்ஸ்ல நினைச்சுட்டாங்க.

அதுல இருந்து என் போட்டோ பேப்பர்ல வர்றது இல்ல.. ஏன் வரலைன்னு எனக்கும் தெரியல.. இந்தப்படம்னு இல்ல, நான் எந்தப்படத்துல நடிச்சாலும் அதை நான்தான் தயாரிக்கிறேன்னு நினைச்சுக்கிறாங்க.. அது உண்மை இல்ல. ஆனா நான் ஜனவரிக்கு மேல படம் எடுக்கத்தான் போறேன்.. மத்தபடி இந்தப்படம் முழுக்க காமெடி படமா வந்தருக்கு. என்ஜாய் பண்ணி பாருங்க” என்று கூறினார்..

அவரை தொடர்ந்து பேசிய சிவா, “பவர்ஸ்டாரோட பெர்பார்மன்ஸ் பத்தி சொல்லனும்னா, ஒரு காட்சியில் நடிக்கும்போது எப்படியெல்லாம் ரியாக்சன் கொடுக்கலாம்னு தெரியும்.. ஆனால் இப்படியெல்லாம் கூட ரியாக்சன் கொடுக்க முடியுமாங்கிறதை பவர்ஸ்டாரை பார்த்துத்தான் தெரிஞ்சுக்கிட்டேன்.. அந்த அளவுக்கு புதுசு புதுசா ரியாக்சன் கொடுப்பாரு. யாரவது ஒருத்தர் ஒரு காட்சில பீல் பண்ணி பேசும்போது நாம சாதாரணமா ஒரு ரியாக்சன் கொடுத்தா, அவரு மட்டும் சாட்டைல அடிச்சமாதிரி ஒரு ரியாக்சன் கொடுப்பார் பாருங்க… சான்சே இல்லை.. அவருக்குன்னு தனியா ஒரு பாடி லாங்குவேஜ் வச்சிருக்கிறாரு.

படத்துல என்னோட பேரு சிம்மக்கல் சேகர்.. பவர்ஸ்டாரோட தீவிரமான ரசிகனா நடிக்கிறேன். படத்துல பவர்ஸ்டாருக்கு 22வது பிறந்தநாள் கொண்டாடுற மாதிரி ஒரு பாடல் இருக்கு.. ஆனா இப்ப நேர்ல பார்க்கிறப்ப ஒரு வயசு குறைஞ்ச மாதிரி தெரியுறாரு.. காதல் தேசம் டைம்ல வந்திருந்தாருன்னா அப்பாஸுக்கு செம டப் கொடுத்திருப்பாரு. அந்தப்படத்தை இப்ப ரீமேக் பண்ணினா பவர் ஸ்டார் அப்பாஸாகவும் நான் வினீத் கேரக்டர்லயும் நடிக்க ரெடியா இருக்கேன்…

இந்தப்படத்துல வெறும் காமெடி மட்டும் இல்ல.. ஒரு நடிகரோட ரசிகர்கள் எந்த அளவுக்கு இருக்கணும்னு ஒரு மெசேஜ் சொல்லிருக்கோம்.. இந்தப்படத்துல நான் மதுரைக்காரனா நடிச்சிருக்கேன். நமக்கு சென்னை பாஷைன்னா பட்டையை கிளப்பிருவேன். ஆனா மற்ற ஊரு பாஷை பேசுறதுக்கு இங்கேயே ஹோம் ஒர்க்லாம் பண்ணமாட்டேன்.. மதுரை பாஷை பேசணும்னா அங்க போய் இறங்குனதும் அந்த ஊரு பையன்கள் பேசுறத பார்த்து, அத அப்படியே பாலோ பண்ணி, டப்பிங்ல வச்சு கரெக்ட் பண்ணிக்குவேன்” என்றார் சிவா.

இறுதியாக பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்க, பதில் சொன்னார் சிவா. அப்போது ஒரு நிருபர் நீங்க இந்த படத்தில் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு ரசிகரா நடிச்சிருக்கீங்க. நிஜத்திலும் அவருடைய ரசிகரா என்று கேட்க, பதறிவிட்டார் சிவா. ஐயய்யோ நான் அவருடைய ரசிகன் இல்லேங்க. இன்னொரு விஷயம். என்னை அவர் தம்பி தம்பின்னு சொன்னார். நல்ல விஷயம். ஆனால் டெல்லி பக்கம் போகும்போது சொல்லிடாதீங்க. அது போதும் என்றார் இன்னும் பதற்றத்துடன்.

சீனிவாசனை போலீஸ் டிபார்ட்மென்ட் அவ்வப்போது விசாரணைக்காக டெல்லிக்கு அழைத்துச் செல்வதைதான் அவர் அப்படி குறிப்பிட்டிருக்கிறார் என்பது நிருபர்களுக்கு புரிய… ஒரே சிரிப்பு!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கார்த்திக் சுப்புராஜுக்கு ரெட்? ஆரம்பித்தது ஆக் ஷன்

தமிழ்சினிமாவில் மட்டுமல்ல, உலக சினிமாக்கள் எங்கிலும் கூட உயர்ந்த ஸ்தானம் தயாரிப்பாளருக்குதான். எப்போதெல்லாம் தங்களுக்கு சேறு பூசப்படுகிறதோ, அப்போதெல்லாம் அவற்றை விட்டுக் கொடுப்பதேயில்லை அவர்கள். ஒருமுறை நடிகர்...

Close