‘வந்த இடம் நல்ல இடம்… ’ கனவை தொட்ட கம்ப்யூட்டர் என்ஜினியர்
ஏதாவது ஒரு படத்தில் ஒரு சீனிலாவது தலையை காட்டிவிட மாட்டோமா என்று ஊரை விட்டு கிளம்பி வருகிற 90 பேரில் பத்து பேருக்கு கூட உருப்படியான ரூட் தெரிவதில்லை. பல நேரங்களில் அறுந்து தொங்கும் கரண்ட் கம்பியில் கையை வைத்து, ‘ஐயோடா’ என்று அலறுகிறார்கள்.
மோசடி மன்னர்கள், முறை கெட்ட திருடர்கள் என்று நம்பக்கூடாதவர்களையெல்லாம் நம்பி, ‘சே… இந்த சினிமாவே இப்படிதான்’ என்று பொத்தாம் பொதுவாக புலம்புகிறார்கள். அப்படி வருகிற புதியவர்களுக்கெல்லாம் சினிமா என்பது ஜீபூம்பாவாகவே இருக்கிறது. இந்த நேரத்தில்தான் புதிய கதவுகளை திறந்துவிட வந்திருக்கிறது மூவி ஃபண்டிங் நெட்வொர்க். பலரது முதலீட்டில் படம் எடுப்பது. பணம் தருகிறவர்களே படத்திலும் பங்கு பெறுவது. இதுதான் அந்த சிஸ்டத்தின் அழுத்தமான அல்ஜீப்ரா. இதைதான் ‘க்ரவுட் ஃபண்டிங்’ என்கிறார்கள்.
கடந்த வாரத்தில் கேள்விக்குறி பட இயக்குனர் ஜெய்லானி, சினேகாவின் காதலர்கள் பட இயக்குனர் முத்துராமலிங்கன் இருவராலும் துவங்கப்பட்ட இந்த திட்டம் முறையாக செயல்பட ஆரம்பித்தால், தமிழ்சினிமா பெரிய புரட்சியை சந்திக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. அதற்கான நம்பிக்கையை உண்டாக்கியிருக்கிறது இந்த முதல் நிகழ்வு. இந்த க்ரவுட் ஃபண்டிங் முறை குறித்தும், தங்களது படத்திட்டம் குறித்தும் மீடியாக்களில் செய்தியை வெளியிடப்பட்ட ஐந்தாவது நாளில் இவர்களை தொடர்பு கொண்டிருக்கிறார் பொற்கோவன் என்ற கம்ப்யூட்டர் என்ஜினியர். பத்து லட்ச ரூபாயை ஒரே பேமென்ட்டாக முதலீடு செய்திருக்கிறார் அவர். இந்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்கவும் போகிறார் பொற்கோவன்.
சார்… நான் பத்து வருஷமா சினிமாவில் நடிக்கணும்னு ட்ரை பண்ணிட்டு இருக்கேன். பட், நான் ஒரு பெரிய நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினியரா வொர்க் பண்றேன். என்னுடைய வேலையை ரிசைன் பண்ணிட்டு வாய்ப்பு தேடி அலைய முடியாது. அதே நேரத்தில் நம்பிக்கையானவர்கள் இருந்தால் சின்ன முதலீடு செய்யவும் தயாரா இருந்தேன். அந்த நேரத்தில்தான் இந்த க்ரவுட் ஃபண்டிங் பற்றி படிச்சேன். அவங்களிடம் பேசுறப்போ எனக்கு பெரிய நம்பிக்கை வந்திச்சு. நானும் ஒரு தயாரிப்பாளரா என்னை இந்த படத்தில் இணைச்சுகிட்டேன் என்றார் நம்மிடம். இது ஒருபுறமிருக்க நாள்தோறும் இவர்களை நாடி வருகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. நிறைய கேள்விகளோடு சந்திப்பவர்கள், நம்பிக்கையோடு முதலீடு செய்யவும் முன் வருகிறார்களாம். இதே வேகத்தில் போனால், சில வாரங்களில் ஷுட்டிங்கை ஆரம்பித்துவிட வேண்டியதுதான் என்கிறார்கள் ஜெய்லானியும், முத்துராமலிங்கனும்.
‘பணம் தர்றாங்க என்பதற்காக தகுதியே இல்லாத யாரையும் உள்ளே சேர்த்து கதையையோ, படத்தையோ காவு கொடுக்க நாங்களும் தயாராக இல்லை. படம் எடுக்க பணம் வேணும். அதைவிட முக்கியம் எடுத்த படம் ஓடணும்! அதனால்தான் இப்படி’ என்றார்கள் இருவரும்.