நளனும் நந்தினியும் – விமர்சனம்
குடும்பமே ‘குத்துவேன்… வெட்டுவேன்’ என்று கூச்சல் போட்டுக் கொண்டாலும், எதிராளி வீட்டு புளியோதரைதான் பிடிக்கிறது எல்லா எலிக்கும்! அப்படி ஒரு காதல் எலிகள்தான் நளனும் நந்தினியும்! பெற்றோர்களை எதிர்த்துக் கொண்டு காதல் திருமணம் செய்து கொள்ளும் இருவரும், வாழ்க்கையில் வென்றார்களா? சொந்தங்களை ஒன்று சேர்த்தார்களா? என்பதுதான் கதை.
படம் நெடுகிலும் சுமார் ஒரு டஜன் உறவுக்காரர்கள் திரிகிறார்கள். யார் யாருக்கு உறவு? அதுவும் என்ன மாதிரியான உறவு? என்பதையெல்லாம் புரிந்து கொண்டுதான் அடுத்த காட்சியை ரசிப்பேன் என்று நீங்கள் அடம் பிடித்தால், இந்த படத்தை ஒரு வருஷம் தொடர்ந்து பார்த்தாலும் உங்களால் அடுத்த சீனுக்கு தாவ முடியாது. அப்படியொரு உறவுக்குழப்பதை ஏற்படுத்துகிறார் டைரக்டர் வெங்கடேசன். ‘எப்படியோ போகட்டும்டா… நளனுக்கும் நந்தினிக்கும் காதல் வந்தாச்சு. அப்புறம் என்ன?’ என்று போதி மரத்தடி புத்தர் ஆன பிறகுதான் படம் மனசுக்குள் வருகிறது. அந்த செகன்ட் ஹாஃப், சற்றே ஸ்லோவாக இருந்தாலும், ரசிக்க முடிகிறது.
அழகம்பெருமாளுக்கும், ஜெ.பிக்கும் அடிக்கடி முட்டிக் கொள்கிறது. இருவரும் ராமராஜன் காட்டன் விளம்பர படத்தில் வருவது போல எந்நேரமும் பளிச்சென நடக்கிறார்கள். கிராஸ் பண்ணும்போது முறைத்துக் கொள்கிறார்கள். ஏன்? அழகம் பெருமாள் எலக்ஷனில் நிற்க, அவருக்கு ஓட்டுப் போடாமல் தோற்கடிக்கிறாராம் ஜெ.பி. இந்த முறைப்புக்கு நடுவில் தங்கள் வீட்டு வாரிசுகள் காதலிக்கிறார்கள் என்பதே தெரியாமல் போகிறது அவர்களுக்கு. ‘நமக்கு அவங்க கல்யாணமே பண்ணி வைக்க மாட்டாங்க. தாலி கட்டிகிட்டு போய் முன்னாடி நிப்போம்’ என்று முடிவெடுக்கிற ஜோடிகள், அப்படியே போய் நிற்க… விழுகிறது விளக்குமாறு அடி.
கண்ணீரும் கம்பலையுமாக சென்னைக்கு பஸ் ஏறும் ஜோடி, சென்னைக்கு வந்து என்னவானது? செகன்ட் ஹாஃப்.
முதல் பாதிக்கும் ரெண்டாவது பாதிக்கும் அப்படியே பெருத்த வித்தியாசம். மிக மிக அமைதியாக கவித்துவமாக நகர்கிறது படம். வீட்டை பகைத்துக் கொண்ட ஒரு காதல் ஜோடி என்னவெல்லாம் இம்சைகளை அனுபவிக்கும்? கண்களில் நீர் புரள வைக்கிறார் இயக்குனர். ஓடி வரும் இளசுகளை மிரள வைக்கும் காட்சிகள் அவை. அதிலும், கர்ப்பிணி நந்திதா, தனியாக மருத்துவமனைக்கு சென்று அட்மிட் ஆகிற கொடுமையெல்லாம் தனிமையால் தவித்தவர்களை மீண்டும் ஒரு முறை ஷேக் செய்யும்.
ஹீரோ மைக்கேலுக்கு இது முதல் படம். எக்ஸ்பிரஷன்கள் மக்கர் பண்ணினாலும், கர்ப்பிணி மனைவியை தனியாக மருத்துவமனைக்கு அனுப்புகிறோமே என்கிற ஆற்றாமையை அழகாக புரிய வைக்கிறார். அதிலும் மனைவி சம்பாத்யத்தில் அவர் பண்ணும் ரவுசும், சின்ன பிள்ளைகளோடு கோலி விளையாடுவதும், அவருக்குள்ளும் ஒரு லட்சியம் இருக்கிறதா என்ற எண்ணத்தையே ஏற்படுத்துகிறது. என்னவோ… படம் முடியும்போது ‘இன்னும் வளரணும் தம்பி’ என்கிற வாழ்த்தையும் பெற்றுக் கொள்கிறார்.
நந்திதாவுக்கு ச்சும்மா ஊதி தள்ளுகிற கேரக்டர். அநாயசமாக நடித்திருக்கிறார். விட்டேத்தி கணவனை விட்டுக் கொடுக்காமல் காப்பாற்றுவதும், பின்பு அவனை மோட்டிவேட் செய்து பெரிய டைரக்டராக உயர்த்துவதுமாக அபாரம்மா பொண்ணு!
மிக மிக ஆச்சர்யம்… கொஞ்சம் கூட ரம்பம் போடாமல் மனசுக்கு நெருக்கமாக வந்து கிச்சு கிச்சு மூட்டுகிறார் சூரி. மாமன்கிட்ட ஐம்பது ரூபாதாண்டா இருக்கு. குழந்தைக்கு பெரிசா கொடுக்கலேன்னு நினைச்சுக்காதடா என்று கதறி குணச்சித்திர கேரக்டரையும் கொத்திக் கொண்டு போகிறார்.
ஜெ.பி வேட்டிக்கேற்ற வெள்ளை மனசுக்காரராக இருக்கிறார். ஆரம்பத்தில் தாம் தும் என குதித்து அப்புறம் புரிந்து கொண்டு இணைகிற அழகம்பெருமாளும் கவர்கிறார்கள். ரேணுகாவை ஏன் ஜெபி யின் தங்கையாக்கினார்களோ, எந்நேரமும் மனைவி மாதிரி அண்ணனை ஒட்டிக் கொண்டே நடக்கிறார். ஒட்டவே ஒட்டாத கேரக்டர். ஓவர் ஆக்டிங் வேறு…
குழந்தையின் தட்டிலிருந்து கோழி முட்டையை பிடுங்கி தின்னும் அப்பனாக நடித்திருக்கும் அந்த இளைஞரின் கேரக்டரை நினைத்து நினைத்து சிரிக்கலாம். நடித்திருப்பது யாரோ? சபாஷ்யா…
இசை அஸ்வத் என்ற புதியவர். பின்னணி இசையும் சரி, பாடல்களுக்கான ட்யூன்களும் சரி, சட்டென ஒட்டிக் கொள்கிறது. குறிப்பாக ‘வாடகைக்கு கூடு ஒன்று பாடல்…’ நம்பிக்கையான வரவாக இருக்கிறார். பெரிய கம்பெனிகள் வாய்ப்பளித்தால் பிரகாசிப்பார்.
நளன் தரப்போகும் பலன், தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் ‘நந்தினி’ ஸ்வீட்டாக இருந்தால் சந்தோஷமே! ஏனென்றால் இது டைரக்டர் வெங்கடேசனின் சொந்த வாழ்க்கை கதையாம்!
-ஆர்.எஸ்.அந்தணன்