நான்தான் பாலா- விமர்சனம்

வெறும் வேர்க்கடலை வறுப்பதற்கு, எதற்கு பாற்கடலை கடையணும்? ‘விவேக் ஹீரோவாக நடிச்சா நல்லாதானய்யா இருக்கும்’ என்று கவலைப்பட்டவன்தான் தமிழன். அவனுடைய கவலைக்கு பால் ஊற்றுகிறேன் பேர்வழி என்று ‘கள்ளிப்பால்’ ஊற்றியிருக்கிறார் இயக்குனர் கண்ணன். விவேக்கின் லொட லொட வாயிலும் படபட வசனத்திலும் விழுந்து… தேய்த்து… குளித்து… தன்னையே சுத்தமாக்கிக் கொண்ட அத்தனை பேருக்கும் நான்தான் பாலா, ‘ஏன்தான் பாலா!’

ஒரு நேர்மையான பெருமாள் கோவில் பூசாரிக்கு, அதே பெருமாள் கொடுப்பது சோதனையன்றி வேறென்ன? கோவில் நகை கொள்ளை போன வழக்கில் அவரது ஆச்சாரமான அப்பாவை போலீஸ் தள்ளிக் கொண்டு போகிறது. அவரை பெயிலில் எடுக்க கண்ணியமே உருவான விவேக், கையேந்துகிறார் உறவினர்களிடத்தில். ஒருவரும் முன்வராதபோது தெய்வம் மனுஷ ரூபத்தில் வருகிறது. யாரோ ஒரு பக்தன் விவேக்கின் வலியறிந்து ‘இது கோவில் உண்டியலுக்கல்ல, உனக்கு’ என்று லட்சத்தை தட்டில் போடுகிறான். வெளியூர் வாசியான அவன் வந்த வேலை முடிந்து கிளம்ப, அதற்கப்புறம் தாய் தந்தையை இழக்கும் விவேக், அவனை தேடி காஞ்சிபுரம் வருகிறார். வாங்கிய கடனை திருப்பி அடைக்கதான் இந்த பயணம். நட்பாகிறார்கள் இருவரும். காலம் நகர நகர, கடைசியில்தான் தெரிகிறது அவன் ஒரு கூலிப்படை கொலைகாரன் என்று. போலீஸ் அறிவுறுத்தலின்படி அவனை அப்ரூவராக்க முயல்கிறார் விவேக். அந்த முயற்சி பலித்ததா? இந்த விஷயம் தெரிந்த கூலிப்படை தலைவன் என்ன செய்தான்? என்பது க்ளைமாக்ஸ்.

பனங்காய் தலையில் குருவி உட்கார்ந்த மாதிரி, இந்த கேரக்டருக்குள் பாந்தமாக உட்கார்ந்து கொள்கிறார் விவேக்.எந்த நேரத்திலும் அவரது நக்கல் நையாண்டி டயலாக் ஒலித்து விடாதா என்று காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். பட்…. அந்த வழக்கமான ஸ்டைல் எங்கேயும் வெளிப்படாத வண்ணம் பார்த்துக் கொள்வதே பெரிய சவலாச்சே! அதில் முழுசாக நின்று முறையாக வென்றும் இருக்கிறார் விவேக். ஒரு முழு நடிகரால் எந்த கேரக்டரையும் சுமக்க முடியும் என்பதை உணர்த்துகிற இடம், அவர் தன் அக்ரஹார வீட்டில் வாயை பொத்திக் கொண்டு அழுகிற காட்சி. முறுக்கு விற்கும் ஸ்வேதாவுடன் காதல் வயப்படும் காட்சிகளிலும், முழு அம்பியாகி ரசிக்க வைத்திருக்கிறார். என்ன கொடுமை என்றால், பொசுக் பொசுக்கென சமஸ்கிருதத்தில் அவர் கபடி ஆட கிளம்பிவிடுவதுதான். அது படத்தை பார்க்க வந்த ரசிகனுக்கும் தெரியாத பாஷை. படத்தில் இவர் யாரையெல்லாம் பார்த்து பார்த்து பேசுகிறாரோ, அவர்களுக்கும் தெரியாத பாஷை. அப்புறம் இன்னாத்துக்காம் அந்த புரியாத சமஸ்கிருதம்?

படத்தில் உலுக்கியெடுக்கும் காட்சி விவேக்கின் பெற்றோர்கள் தங்களை முடித்துக் கொள்வதுதான். குளம் குட்டைகள் இதற்காகவும்தான் நிரம்பியிருக்கிறது.

விவேக்குக்கு இணையான வேடம் தரப்பட்டிருக்கிறது புதுமுகம் வெங்கட்ராஜுக்கு. ஒரு கொலைக்காரனுக்குள்ளும் ஒரு மனுஷன் இருக்கிறான் என்பதை மிக நுணுக்கமாக வெளிப்படுத்துகிறது அவரது நடிப்பு. தனது முதலாளியை காட்டிக் கொடுக்கக் கூடாது என்கிற தவிப்பையும் உணர வைக்கிறார். இவரை சுற்றி வளைக்கும் கூலிப்படையினர் எப்படி நெருங்குகிறார்கள் என்பதை பார்க்கும் போதே பகீர் ஆகிறது மனசு.

ஹீரோயின் ஸ்வேதா, ஒரு குட்டி குஷ்புவை போல இருக்கிறார். நடிப்பும் சுமாராக வருகிறது. ஏன் உருப்படியான படங்கள் கிடைப்பதில்லை? போகட்டும்… அவ்வளவு அழகான பெண்ணின் கையில் போளியை கொடுத்து விற்க சொன்னால், டப்பாவை கூட வாங்கி ஏலம் போடுகிற ஊர் இது. இயக்குனரின் கற்பனை ரொம்பவே ஓவர்தான். அதிலும் விவேக், அந்த போளி டப்பாவை அப்படியே வாங்கி இந்தி இங்கிலீஷ் மொழிகளில் பேசி விற்பனை செய்யும் காட்சி, காதலிச காட்சிகளுக்கே புதுசு.

வெங்கட்ராஜும், செல் முருகனும் சேர்ந்து அடிக்கும் அரட்டைகள் விவேக்கின் வாய்க்கு பூட்டு போட்ட கொடுமையிலிருந்து ரசிகர்களை காப்பாற்றுகிறது. நாலு காட்சிகளில் வந்தாலும் நறுக்கென்று பெயரை தட்டிக் கொண்டு போகும் மயில்சாமிக்கு இந்த படத்தை பொறுத்தவரை சிலேட்டில் முட்டை! அண்ணேய்… ரூட்டை மாத்தலேன்னா மயிலு தோகை வெளுத்து டை அடிக்க வேண்டிய நிலைக்கு ஆளாக நேரிடும்.

சிற்சில காட்சிகளே வந்தாலும், ‘கை’ தென்னவன் கை சின்னம் போல காலை வாரவில்லை.

மணவாளனின் ஒளிப்பதிவில் மீண்டும் ஒரு சினிமா கும்பகோணம். ஆனால் யதார்த்தமாக அழகாக…! பாடல்களில் சற்றே பழைய நெடி அடித்தாலும், ரசிக்கும்படியாக அமைத்திருக்கிறார் வெங்கட் க்ருஷி. எம்.எஸ்.சுப்புலட்சுமியின் ‘போஜனம் செய்ய’ பாடல் இனிமை.

விவேக் பாலாவாக அல்லது அசல் பாலாக கூட இருந்துவிட்டு போகட்டும். அவரை ஆவின் பாக்கெட்டுக்குள் அடைக்க வேண்டாம் இயக்குனர்களே…!

அவரை ஃபிரீயா விட்டால்தான் ரசிகர்களின் மனசும் ஃப்ரீயா இருக்கும்!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பழைய பகையை நினைச்சுகிட்டு படத்துல விளையாடுறாங்க!

எத்தனை பழைய செய்தியாக இருந்தாலும், முக்கியமான செய்தியல்லவா? அதனால் மீண்டும் ஒருமுறை ரிப்பீட்! தமிழ்சினிமாவுலகமே ஒன்று திரண்டு சூர்யா ஜோதிகா திருமணத்தை வாழ்த்தியது. தமிழ்சினிமா காதல் ஜோடிகளில்...

Close