எடிட்டர் ஆன்ட்டனி இயக்கியது ஒரு சபலிஸ்ட் கதையா?
ஒரு படத்தை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்துப் போட்டு, அழகாக ஃபிக்ஸ் பண்ணி கொடுக்கிற அத்தனை பேரும் எடிட்டர்கள்தான். ஆனால், ஆன்ட்டனியின் எடிட்டிங்குக்கு மட்டும் ஆயிரம் தலைவணங்கிய அபூர்வ சிந்தாமணியாகிக் கிடக்கிறது தமிழ்சினிமா. இளம் ஹீரோக்களுக்கு கொடுக்கக்கூடிய அத்தனை கவுரவங்களையும் ஆன்ட்டனிக்கும் கொடுக்கிறது கோடம்பாக்கம். காரணம், அவர் கையில துள்ளி விளையாடுற ‘கட்டிங்’ தொழில்தான்!
அவரே, சைட்ல ஒரு படத்தை டைரக்ட் பண்ணி பார்த்தாலென்ன என்று இறங்கினால், அதை எப்படி ரசிக்கத் துடிக்கும் சினிமாவுலகம்? ஆல் ஆர் வெயிட்டிங்… சத்யராஜ், அனுமோள், யூகிசேது இவர்களுடன் கல்வித் தந்தை ஐசரி கணேஷின் மகன் வருண் முக்கிய ரோலில் அறிமுகமாகிற ‘ஒரு நாள் இரவில்’ படம் எடிட்டர் ஆன்ட்டனியின் இயக்கத்தில் உருவானதுதான். இன்னும் இரண்டு வாரங்களில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்திற்கு க்ளீன் யு கொடுத்திருக்கிறது சென்சார்.
துவங்கும்போது இந்த படத்தின் பெயர் ‘நைட் ஷோ’. மலையாளத்தில் ஷட்டர் என்ற பெயரில் வெளிவந்து ஹிட்டடித்த படமும் கூட. இப்போது மட்டும் ஏன் பெயர் மாற்றம்? வரிவிலக்குக்கு வைக்கிற குறியா? கேட்டால் சிரிக்கிறார் படத்தின் தயாரிப்பாளரான ஏ.எல்.விஜய். (ஆமாம் மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள் பட டைரக்டரேதான்) “இவ்வளவு அழகா ஒரு படம் எடுத்துட்டு எதுக்கு இங்கிலீஷ்ல பேர் வைக்கிறீங்கன்னு எல்லாரும் கேட்டுட்டாங்க. முக்கியமா சென்சார்ல படம் பார்த்தவங்களே கேட்டுட்டாங்க. அதனால்தான் ஒரு நாள் இரவில்னு பெயர் மாத்திட்டோம்” என்றார்.
ஷுட்டிங் நடந்து கொண்டிருக்கும் போதே ஸ்பாட்டிலேயே எடிட்டிங்கும் செய்து முடித்துவிட்டாராம் ஆன்ட்டனி. (கும்மிருட்டுல கூட ஊசி நூல் கோக்குறவர்தான் நல்ல டைலரா இருக்க முடியும்! ஆன்ட்டனியின் ஸ்பாட் எடிட்டிங் ஒரு வியப்பேயல்ல) இனிமேல் டைரக்ஷன்தானா? அல்லது சைட்ல எடிட்டிங் பணியும் தொடருமா என்றால், அசரலாமல் அடிக்கிறார் ஆன்ட்டனி. “எந்திரன் 2 ஆரம்பிச்சாச்சு. அதனால் அந்த படத்தின் எடிட்டிங் வேலைகளுக்கு முன்னாடி இன்னொரு படம் இயக்கிடலாம்னு நினைக்கிறேன். அது இது மாதிரி ரீமேக் இல்ல. ஸ்ரெயிட்டா என் கற்பனையில் உருவான கதையாகதான் இருக்கும்” என்றார்.
இயக்குனர் சங்க உறுப்பினர்களுக்கு இன்னொரு காம்படிஷன் பாய் ரெடி!
பின்குறிப்பு- இந்தப்படத்தின் ட்ரெய்லர் வேணும்னா ஒரு சபலிஸ்ட்டுக்கு வந்த சங்கடம் என்பது போல இருக்கலாம். நிஜத்தில், இது பெண்களை படிக்க வைங்கன்னு சொல்ற படமாம். ஆன்ட்டனியோட மெசெஜூக்கு ஒரு ஆளுயர மாலை போடுங்கப்பா…