ஒருநாள் இரவில் – விமர்சனம்
‘சபலிஸ்ட்டுலேயே நாங்க ஸ்பெஷலிஸ்ட்’ என்று ரகசியமாகச் சொல்லிக் கொள்கிற அத்தனை பேருக்கும், குதிகாலில் ஆணியை செருகுகிற மாதிரி ஒரு படம். அடுத்தது என்ன? அடுத்தது என்ன? என்று நம் கையை பிடித்து இழுத்துக் கொண்டு ஓட்டமாய் ஓடுகிறது திரைக்கதையும், சம்பவங்களும்! இதற்குள் ஒரு குடும்பம் தவிக்கிற தவிப்பையும், அந்த தவிப்புக்கேற்ற தீர்வையும் சொல்லி அழகாக முடித்து வைக்கிறார் அறிமுக இயக்குனர் ஆன்டனி. (நம் எல்லார்க்கும் தெரிந்த எடிட்டர் ஆன்ட்டனிதான்! உங்க பிரமோஷன் அமர்க்களமா அமைஞ்சுருச்சே ப்ரோ!)
சற்றே வசதியான சத்யராஜுக்கு ஒரு குடும்ப சிக்கல். ஸ்கூலில் படிக்கும் மகள், சக மாணவனுடன் சகஜமாய் பழக, அதை லவ் என்று புரிந்து கொள்கிறார் இவர். உடனடியாக மகளின் படிப்பை நிறுத்திவிட்டு கல்யாணத்திற்கு நாள் குறிக்கிறார். அதே நாளில் இரவில் நண்பர்களுடன் குடித்துவிட்டு, நாலு ஸ்டெப் தள்ளியிருக்கும் வீட்டுக்கு போகாமல் தனக்கு தெரிந்த ஆட்டோ டிரைவருடன் அடுத்த தெரு வரைக்கும் பயணமாக… நடுவில்தான் அந்த பஸ் ஸ்டாண்ட் பைங்கிளி கண்ணில் தென்படுகிறாள். சபலம்..? தயக்கமும், உதறலுமாக அவளை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு இடம் தேடக் கிளம்பினால், எல்லா இடமும் நடுக்கமாகவே படுகிறது அவருக்கு. அந்த நேரத்தில் தனது வீட்டு வாசற் புறத்திலேயே அமைந்த தனக்கு சொந்தமான பூட்டி வைத்த கடையை திறந்து அதற்குள் ஐக்கியமாகிவிடுகிறார்.
கதவை வெளியே பூட்டிவிட்டு மேற்படி பெண்ணுக்கு பரோட்டா வாங்கக் கிளம்பும் ஆட்டோ டிரைவர் வேறு வேறு சிக்கல்களில் மாட்டிக் கொள்ள, விடிவதற்குள் வெளியே வர வேண்டிய இருவரும் ஷட்டருக்குள் அடைபட்டுக் கிடக்க, அதற்குள் ‘வீட்டு ஆம்பளையை காணோமே?’ என்று குடும்பம் தவிக்க, ஒட்டுமொத்த தியேட்டரும் சீட் நுனிக்கு வந்து, “அட நாசமா போன சத்யராஜே… தேவையா உனக்கு?” என்று வாய்விட்டு புலம்புகிற அளவுக்கு நிஜத்தையும் நிழலையும் குழப்பிக் கொண்டு தவிக்கிறது.
இந்தப்படத்தின் பலமே கதை என்றால், அதைவிட பெரும் பலம் அந்த கதைக்கேற்ற முகங்களை தேர்வு செய்ததுதான். அதுவும் பஸ் ஸ்டாண்டில் நிற்கும் அனுமோல், அப்படியே சத்யராஜை கண்களால் சுழட்டியடிக்கும் அந்த பார்வை, சென்னையை சூர சம்ஹாரம் செய்ததே… மழையும் காற்றும்? அதற்கு சற்றும் சளைத்ததல்ல! ஒரு விலைமாதுவின் கண்ணெல்லாம் எதில் இருக்கும் என்பதையும், அவளது நடை உடை பழக்க வழக்கங்களையும் சர்வ அநாயசமாக கையாள்கிறார் அனுமோல்.
பின்னாலிருக்கும் ஜன்னல் வழியே தன் வீட்டையும், வீட்டுப் பெண்களின் தவிப்பையும் கண்ணார காணும் சத்யராஜ், வெளியே இருப்பவர்களுக்கும் தெரிந்துவிடாமல், உள்ளேயிருக்கிற பெண்ணையும் பேச விடாமல் எலியாய் சிக்கி, எக்கச்சக்கமாய் முழிக்கும் அந்த நிமிஷங்கள் நாடி நரம்பையெல்லாம் கதி கலங்க அடிக்கிறது. நடு நடுவே ஷட்டர் தட்டப்படும்போதும், வெளியே பேச்சு சப்தம் கேட்கும்போதும், சத்யராஜின் முக ரேகைகள் கூட துடி துடித்து அடங்குகிறது. இவரை விட்டால் வேறு யாரால் முடியும் இந்த கேரக்டரை சுமக்க?
தன் சினிமா ஸ்கிரிப்டை ஆட்டோவில் தவறவிட்டுவிட்டு அதை தேடியலையும் யூகி சேது, ஒரு தோற்றுப்போன இயக்குனரின் அத்தனை மன பாரங்களையும் அசால்ட்டாக இறக்கி வைக்கிறார். நடுநடுவே எட்டிப்பார்க்கும் அவரது இயல்பான நகைச்சுவை ரிலாக்ஸ் நிமிஷங்கள்… அனுமோல் கேரக்டருக்கு ஒரு பினிஷிங்… யூகி சேது கேரக்டருக்கு ஒரு பினிஷின் என்று சில காட்சிகள் கவித… கவித…
இந்த படத்தின் இன்னொரு அட்ராக்ஷன் யூகி சேதுவின் நீட்டி முழக்காத… அதே நேரத்தில் படு சுவாரஸ்யமான வசனங்கள்தான்.
ஆட்டோ டிரைவராக ஐசரிவேலனின் பேரன் அறிமுகமாகியிருக்கிறார். முதல் படம். சின்ன சின்ன குறைகள் தென்பட்டாலும், தமிழ் சினிமாவில் புழங்க புழங்க புகழ் சுமப்பார்!
அந்த ஷட்டரை திறந்துவிடப் போவது யாராக இருக்கும் என்று காத்திருக்க துவங்கும் ரசிகனின் யூகத்தையெல்லாம் நிமிஷத்துக்கு நிமிஷம் காலி பண்ணிக் கொண்டே வருகிற திரைக்கதை திருப்பத்திற்காகவே டைரக்டர் ஆன்ட்டனியின் கைகளை பற்றி வலிக்க வலிக்க குலுக்கலாம். ஒரிஜனல் கதையான ‘ஷட்டர்’ பட இயக்குனருக்கும் அந்த வலி போய் சேரட்டும்!
நவீன் அய்யரின் இசையில் பாடல்களில் பெரிய விசேஷமில்லை. ஆனால் பின்னணி இசை பிரமாதம். எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு அந்த இரவை மேலும் திகிலாக்குகிறது. அதுமட்டுமல்ல, அந்த ஷட்டர் பூட்டப்பட்ட சின்ன இடத்தை விட்டு நகராத கதைக்கு, பொருத்தமான விறுவிறுப்பு சேர்க்கவும் உதவியிருக்கிறது!
ரசிகனின் அமைதியான இரவு தூக்கத்தை அடித்து நொறுக்கிவிட்டது இந்த ‘ஒரு நாள் இரவில்’!
-ஆர்.எஸ்.அந்தணன்
you must see the original Shutter.